Thursday, October 31, 2019

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்? 

புதுடெல்லி 31.10.2019

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேரும், அடுத்த 7 நாட்களுக்குள் கருணை மனுவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அங்கிருந்து பதில் பெறாத பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படும் என்று திஹார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டு பலன் அளிக்காமல் 2012, டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த மருத்துவ மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை, அவரை நிர்பயா என்றே அழைத்தனர். டெல்லி போலீஸார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரைக் கைது செய்தனர்.



இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார்.‘நிர்பயா’ வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

ஆனால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இதில் 3 குற்றவாளிகள் திஹார் சிறையிலும், ஒருவர் மண்டோலி சிறையில் 14-ம் எண் அறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்னும் 7 நாட்களுக்குள் 4 குற்றவாளிகளும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அளித்து அதற்குப் பதில் வராவிட்டால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என திஹார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து திஹார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் நிருபர்களிடம் கூறுகையில், "நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் இன்னும் 7 நாட்களுக்குள் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அளிக்க வேண்டும். இதுவரை குற்றவாளிகள் 4 பேரும் தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை. தண்டனையை நிறுத்திவைக்கவும் கோரவில்லை.

குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பி, தங்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுகோள் விடுத்து அவர் நிறுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி முடியும். குடியரசுத் தலைவருக்கு 7 நாட்களுக்குள் கருணை மனு அனுப்பக் கோரி குற்றவாளிகள் 4 பேருக்கும் கடந்த 28-ம் தேதி முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. இவர்களின் மனுவுக்குக் குடியரசுத் தலைவர் ஏதும் பதில் அளிக்காவிட்டாலோ அல்லது குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்காவிட்டாலோ தண்டனை நிறைவேற்றப்படும்.




குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வலியுறுத்திவரும் நிர்பயாவின் தாய்

மேலும், 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்றத்திலும் கருணை அளிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கியது தொடர்பாகத் தகவல் தெரிவிக்க உள்ளோம். 7 நாட்களில் ஏதேனும் பதில் வராவிட்டால், தண்டனை நிறைவேற்றுவதற்கான சட்டபூர்வ வழிகளைத் தொடங்குவோம். ஒருவேளை குற்றவாளிகள் கருணை மனுத் தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்றத்தில் கூறி, குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்குவோம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த 28-ம் தேதி சிறை நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்ட பின் 4 குற்றவாளிகளும் அமைதியற்று, பதற்றத்துடன் காணப்படுகிறார்கள் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐஏஎன்எஸ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024