Thursday, October 31, 2019

நீட் முறைகேடு வழக்கு: மகளுக்கு ஜாமீன்; தாயின் மனு தள்ளுபடி- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை 31.10.2019

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய தருமபுரி மாணவி பிரியங்காவுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே வேளையில் அவரின் தாயார் மைனாவதிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த தருமபுரியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா, அவரின் தாயார் மைனாவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாயும், மகளும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில்," நான் நீட் தேர்வில் 397 மதிப்பெண்கள் பெற்று இளங்கலை மருத்துவம் பயின்றுவந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்துள்ளது. நாங்கள் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. என் தாயும் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனை கருத்தில் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவி பிரியங்காவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார். அவரின் சகோதரி மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அரசுத்தரப்பில் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என த்தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தாயாரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024