Tuesday, October 29, 2019

கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவு

Added : அக் 28, 2019 23:34

சென்னை:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பாலியல் பிரச்னைகளை தடுக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

பாலியல் பிரச்னையின்றி, பெண்களுக்கு பாதுகாப்பான வளாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானிய குழு பிறப்பித்துள்ள உத்தரவு: உள் விவகார புகார் குழு ஏற்படுத்தி, பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை பெற வேண்டும். பாலின வேறுபாடு மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து, மாணவ - மாணவியர் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவியர் மற்றும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாலியல் அத்துமீறல் தடுப்பு மற்றும் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட விதிகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையிலான வளாகத்தை உருவாக்க வேண்டும். மாணவர் குறைதீர்வு டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட வேண்டும். பாலியல் ரீதியான புகார்களை ரகசியமாக தெரிவிக்கும் வகையில், 1800 111 656 என்ற, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை, கல்லுாரி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் மாணவ - மாணவியருக்கு தெரியும் வகையில், வெளியிட வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024