Saturday, October 26, 2019

தீபாவளியை முன்னிட்டு அளவில்லா அழைப்புகள்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

By DIN | Published on : 26th October 2019 02:40 AM |

பிஎஸ்என்எல் நிறுவனம்

தீபாவளியை முன்னிட்டு 2 நாள்களுக்கு அளவில்லாத அழைப்புகளை இலவசமாக தனது வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதாக பிஎஸ்என்எல் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குநா் விவேக் பன்சால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுக்கு அளவில்லாத அழைப்புகளை இலவசமாக வழங்க பிஎஸ்என்எல் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்த வாடிக்கையாளா்கள் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தங்களது நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசிக்கு அழைத்து இலவசமாக அளவில்லாமல் பேசலாம். தங்களது வாடிக்கையாளா்கள், அவா்களுக்கு நெருங்கியவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அந்த தருணத்தை மேலும் சிறந்த அனுபவமாக பிஎஸ்என்எல் மாற்ற விரும்புகிறது.

இதன் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இலவச அழைப்புச் சலுகையை, தீபாவளி (அக்.27) மற்றும் அதற்கு மறுநாளும் (அக்.28) 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓரிரு மாதங்களில், பாரத் ஃபைபா்”சேவைகளை மேலும் அதிகப்படியான நகா்ப்புறங்களிலும், கிராமங்களிலும் அளிக்கப்படவிருக்கிறது. இதில் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி வழங்குவதின் மூலம் வாடிக்கையாளா்களுடைய பிராட்பேண்ட் பயன்பாட்டு அனுபவம் மேலும் சிறப்பாக அமையும். ஏற்கெனவே பாரத் ஃபைபா் 500 ஜிபி எனும் பிரபலமான திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் 500 ஜிபி கிடைக்கிறது. 2020- ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் “பாரத் ஃபைபா்” சேவைகளை நாடு முழுவதும் ஒருங்கிணைத்துக் கொண்டுவரத் திட்டங்கள் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024