Saturday, October 26, 2019

விஜய் - அட்லியின் ‘பிகில்’: திரை விமரிசனம்

By சுரேஷ் கண்ணன் | Published on : 25th October 2019 06:01 PM



‘பொம்பளைன்னா... அடக்கமா இருக்கணும்..’ ‘அட்ரா.. அவள.. வெட்ரா அவள’ என்று ஆணாதிக்க அடாவடித்தனத்தோடு பேசிக் கொண்டிருந்த தமிழ் சினிமா சமீப காலங்களில் பெண்களின் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக சிறப்பான முறையில் தடம் மாற ஆரம்பித்திருக்கிறது. இது ஒருவகையில் காலத்தின் கட்டாயம். என்றாலும் இந்த மாற்றத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் உறுதுணையாக நிற்கத் துவங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

பெண்களின் ஆதாரமான உரிமைகளைப் பேசும் ‘நேர்கொண்ட பார்வை’ அஜித்தைத் தொடர்ந்து பெண்கள் பல துறைகளிலும் சாதிக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி ‘பிகிலின்’ மூலம் பேசியிருக்கும் விஜய்யும் பாராட்டத்தக்கவர். இதற்கான பாராட்டு, சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்குத்தான் போய் சேர வேண்டும் என்றாலும் தமிழின் முன்னணி நாயகர்கள் இந்த மாதிரியான உள்ளடக்கத்திற்கு ஆதரவாக நிற்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

தமிழ் சினிமா வழக்கப்படி ‘நல்ல’ ரெளடியாக இருப்பவர் ராயப்பன் (தந்தை விஜய்). நல்லது செய்வதற்காக தான் கத்தியைத் தூக்கினாலும் தன் சேரி மக்கள் வன்முறைப் பாதையிலிருந்து விலகி நேர்வழியில் நடக்கவேண்டும் என்று விரும்புபவர். கால்பந்து விளையாட்டு இதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று நம்புபவர்.

அவரது மகனான மைக்கேல் (இளைய விஜய்) கால்பந்து விளையாட்டில் பிரகாசிப்பதால் அவனைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார். அவனின் வெற்றியைத் தொடர்ந்து அந்த ஊரின் பல இளைஞர்கள் இந்த விளையாட்டின் மூலம் முன்னேற முடியும் என்று கருதுகிறார்.

ஆனால் ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலை காரணமாக ராயப்பனின் இடத்திற்கு மைக்கேல் வர வேண்டியிருக்கிறது. எனவே தன் கால்பந்துக் கனவுகளை நண்பனின் (கதிர்) மூலமாக நிறைவேற்ற பின்னால் நின்று உதவுகிறார் மைக்கேல். ஒரு கட்டத்தில் பெண்கள் அணியை வழிநடத்திச் செல்ல வேண்டிய கட்டாயம் மைக்கேலுக்கு உருவாகிறது.

தேசிய அளவில் நிகழும் கால்பந்துப் போட்டி அது. பல தடைகளைத் தாண்டி தன் நோக்கத்தில் மைக்கேல் வெற்றி பெற்றாரா என்பதைப் பரபரப்பும் விறுவிறுப்புமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

அட்லி + விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லிக்கு ஒரு வெகுஜனப் பார்வையாளனையும் முன்னணி நடிகரின் ரசிகனையும் எப்படி உற்சாகப்படுத்துவது, உணர்ச்சிவசப்பட வைப்பது, திருப்திப்படுத்துவது போன்ற விஷயங்கள் நன்குத் தெரிந்திருக்கின்றன. ‘பிகிலும்’ இதற்கு விதிவிலக்கில்லை.

தந்தை - மகன் ஆகிய இரு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். சிறிது நேரமே வந்தாலும் ராயப்பன் கதாபாத்திரம் கவர்கிறது. என்னதான் நரைமுடி, காண்டாக்ட் லென்ஸ் போட்டு முயற்சித்திருந்தாலும் தோற்றப் பொருத்தம் சிறப்பாக அமையவில்லை. மைக்கேல் ஆக நடித்திருக்கும் மகன், வழக்கமான விஜய் என்ன செய்வாரோ அதையெல்லாமே செய்து தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார். சில காட்சிகளில் தன்னைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு பெண்களுக்கு இடம் தந்திருப்பது சிறப்பு.

நாயகியாக நயன்தாரா. ‘அறம்’ போன்ற முதிர்ச்சியான படங்களில் நடித்துவிட்டு சராசரி நடிகையின் பாத்திரத்திற்கு இவர் திரும்பாமல் இருப்பது நலம். மேலும் வழக்கமான இளம் நாயகி போல் இவர் சிணுங்குவது, அலப்பறை செய்வது போன்றவையெல்லாம் ஒட்டவேயில்லை.

யோகி பாபு, விவேக் என்று இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் படத்தில் நகைச்சுவையே இல்லை. இந்தப் படத்திற்கு ஜாக்கி ஷெராஃப் போன்ற நடிகர் எதற்கு என்றே தெரியவில்லை. கதிர் தன்னுடைய பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார். டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி போன்ற பல துணை நட்சத்திரங்கள் இருந்தாலும் எவரும் நினைவில் நிற்கவில்லை.

கால்பந்தை மையப்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தில், முன்னாள் கால்பந்து வீரரான ஐ.எம்.விஜயனை, சில காட்சிகளில் வந்து செல்லும் வில்லனாக உபயோகித்திருப்பதை அவல நகைச்சுவை என்றே சொல்லவேண்டும்.

கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக இந்துஜா உள்ளிட்ட சில பெண்கள் நடித்திருந்தாலும் எவரும் கவரும்படி சித்தரிக்கப்படவில்லை. இதை ஈடு செய்யும் வகையில் ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகிய இரு பெண்களின் பாத்திரங்கள் கவனிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா, ‘ஆண்டாளம்மாளாக’ ரசிக்க வைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘வெறித்தனம்’, ‘சிங்கப்பெண்ணே’ ஆகிய இரண்டு பாடல்கள் நன்றாக அமைந்திருக்கின்றன. ஆங்காங்கே வரும் சிறுசிறு பாடல்களும் அழகு. தந்தை விஜய் எதிரிகளிடம் சிக்கிக் கொள்ளும்போது காட்சியின் பரபரப்பிற்கு முரணாக மெலிதாக ஒலிக்கும் சாக்ஸ் இசை அத்தனை அழகு. பின்னணி இசை அட்டகாசமாக இருந்திருக்கிறதே ஒழிய தனித்துவமாக இல்லை.

இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவைச் சொல்லலாம். சண்டைக் காட்சிகள், கால்பந்து போட்டிக் காட்சிகள் என்று பல ஃபிரேம்களில் இவரது அசாதாரண உழைப்பு தெரிகிறது.

இந்தப் படத்தின் பிரச்னைகளுள் ஒன்று, இதன் நீளம். ஏறத்தாழ மூன்று மணி நேரம் என்கிற அளவிற்கு திரைக்கதை அடர்த்தியாக இல்லை. தேவையில்லாத காட்சிகளைக் குறைத்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும்.



வெற்றியடைந்த திரைப்படங்களின் கதை, திரைக்கதையை ஆங்காங்கே கலவையாக உருவுபவர் என்கிற புகார் அட்லியின் மீது தொடர்ந்து வைக்கப்படுகிறது. இது ஏறத்தாழ பெரும்பாலான இயக்குநர்களின் மீது சொல்லப்படும் குறை என்றாலும் சிலரின் திரைக்கதைகளில் வெளிப்படையாக பல்லிளிக்கிறது. அட்லியின் இந்தத் திரைப்படமும் கமலின் ‘நாயகன்’, ஷாரூக்கானின் ‘சக்தே இந்தியா’ போன்ற திரைப்படங்களை மிக அழுத்தமாக நினைவுப்படுத்துகிறது.

இத்திரைப்படத்தின் மையமே பெண்கள் விளையாடும் கால்பந்து விளையாட்டுதான். ஆனால் அவை தொடர்பான காட்சிகளில் நுணுக்கங்களோ, விறுவிறுப்போ, திருப்பங்களோ போதுமான அழுத்தமோ இல்லாமல் மொண்ணைத்தனமாக அமைந்திருக்கிறது. பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்று மட்டுமே இயக்குநர் நினைத்து விட்டார் போலிருக்கிறது.

அணியின் ஒருங்கிணைப்பும் கூட்டுத்திறமையும்தான் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்கிற விஷயம் ‘சக்தே இந்தியா’வில் ஒரு காட்சியில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அநாவசியத் திணிப்புகள் இல்லாமல் படத்தின் மையமான விளையாட்டுக் காட்சிகள் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ‘பிகிலில்’ இந்த சுவாரசியம் குறைவு. எளிமையான ‘வெண்ணிலா கபடி குழு’வில் இருந்த விறுவிறுப்பு கூட இதில் இல்லை.

‘ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க வேண்டும், அதற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்கிற செய்தி இந்தத் திரைப்படத்தில் அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஒருதலைக் காதலின் விளைவாக ஆசிட் அடிக்கப்பட்ட பெண், கால்பந்து விளையாட்டில் முன்பு சிறந்து விளங்கி இப்போது இல்லத்தரசியாக குடும்பச்சிறைக்குள் சிக்கிக் கொண்ட பெண் ஆகியோரை விஜய் மீட்டுக் கொண்டு வரும் காட்சிகளும் அது தொடர்பான வசனங்களும் நெகிழ்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

‘பிகில்’ திரைப்படத்தில் ஒரு முன்னணி நாயகனுக்குரிய வணிக அம்சங்களும் இருக்கின்றன. அதையும் தாண்டி பெண்களைப் பெருமைப்படுத்தும் விஷயங்களும் இருக்கின்றன. ஒரு வெகுஜனத் திரைப்படத்தில் ‘பெண்களின் முன்னேற்றம்’ தொடர்பான விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல விரும்பிய இயக்குநரை இதற்காக நிச்சயம் பாராட்டலாம். இந்தக் கலவையை அட்லி ஒரளவு நன்றாகவே கையாண்டிருக்கிறார்.

ஆனால் ஒருவகையில் இதையே இந்தப் படத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம். இதுவே படத்தை ‘இரண்டும்கெட்டான்’தனமாக ஆக்கியிருக்கிறது. இதர வணிக அம்சங்களையும் அநாவசியமான திணிப்புகளையும் ஒதுக்கிவிட்டு ‘சக்தே இந்தியா’ போன்று சுருக்கமாகவும் கச்சிதமாகவும் சொல்லியிருந்தால் ‘பிகிலின்’ சத்தம் இன்னமும் சிறப்பாக கேட்டிருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024