Monday, October 28, 2019

Doctors

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் முடங்கும் அபாயம்: அக்.30 முதல் அரசு மருத்துவர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்- 18 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்பதாக அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 18 ஆயிரம் மருத்துவர்கள், நாளை மறுநாள் (அக்.30) முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(திங்கள்கிழமை) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஒன்றரை ஆண்டாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அரசு மருத்துவர்களின் ஊதியம் மற்றும் பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், நடத்தி வருகிறோம்.
அண்டை மாநிலங்களைப் போல் அரசு மருத்துவர்களுக்கு 4-வது ஆண்டு, 8-வது ஆண்டு, 11-வது ஆண்டு 13-வது ஆண்டில் பதவி உயர்வு படிபடியாக வழங்க வேண்டும். இந்தியாவில் 15 மாநிலங்களில் இந்த பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

அதுபோல், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களை விட அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு கிடைக்கிற ஊதியம்கூட எங்களுக்கு கிடைக்கவில்லை.

அவர்கள், ஆசிரியர் பணியில் மட்டும் ஈடுபடவில்லை. ஆனால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் ஆசிரியர் பணியோடு, நோயாளிகளுக்கான மருத்துவமும் தினமும் 4 மணி நேரம் பார்க்கிறோம்.

அரசு எங்களுடைய இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியில்லாமல் 30, 31ம் தேதி 48 மணி நேரம் வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்து உள்ளோம்.

இந்த போராட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் பணிபுரியும் 18 ஆயிரம் மருத்துவர்கள் கலந்து கொள்வார்கள்.

ஏற்கெனவே மருத்துவக் குழுவினர் வெவ்வேறு குழுவாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு எப்படியாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று கருதி அமைதி காத்திருந்தோம்.
ஆனால், அரசு இதுவரை ஒரு முடிவெடுக்காதநிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். பொதுமம்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே நாங்கள் போராட்டத்தை தள்ளி வைத்துவிட்டு டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தோம்.
தற்போது இந்த போராட்டத்தில் உயிரிழப்பை தடுப்பதற்கான அவசர சிகிச்சைப்பிரிவில் மட்டுமே மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். மற்றவர்கள் யாரும் பணியில் ஈடுபட மாட்டார்கள்.

இந்தியாவில் 15 மாநிலங்களில் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்கள் நல்ல நிலையில் ஊதியம் பெறுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலே தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் 16வது நிலையிலே ஊதியம் பெறுகிறார்கள்.

அதுபோல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களுக்கு ஆசிரியர் பணியில் ஈடுபடும் பேராசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் 29வது இடத்தில் பின்தங்கியநிலையில் உள்ளோம்.
இதை அனைத்தையும் விளக்கி சொல்லி அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, இதுவரை எங்கள் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண முற்படவில்லை.
தமிழ்நாடு அரசு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்த வேறு வழியில்லாமல் இந்த போராட்டத்தில் அறிவித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் அரசு மருத்துவமனைகள் இந்த இரண்டு நாட்களிலும் முடங்கும் நிலையில் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024