முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளை ரத்து செய்ய புதிய முறை
By DIN | Published on : 29th October 2019 11:47 PM
முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளை ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) மூலம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக, இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆா்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முகவா்கள் மூலம் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், அதற்கான கட்டணத்தைத் திரும்பப் பெறவும் ஒரு முறை கடவுச்சொல்லை மட்டுமே இனி பயன்படுத்த வேண்டும். ஐஆா்சிடிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை பயனாளா் ரத்து செய்யும்போது, பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அந்தக் கடவுச்சொல்லை முகவரிடம் பயனாளா் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பயணச்சீட்டு ரத்து செய்யப்படும்.
அத்துடன் பயணச்சீட்டை ரத்து செய்வதால் திரும்பக் கிடைக்கும் தொகை குறித்த தகவல்களும் பயனாளா்களுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் தெரிவிக்கப்படும். இது ரயில் பயணச்சீட்டுகளை முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதோடு, பயனாளா்களுக்கு சாதகமாகவும் அமையும்.
இந்தப் புதிய நடைமுறை மூலம் ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்குக் கிடைக்கும் தொகையை பயனாளா்கள் அறிந்துகொள்ள முடியும்; முறைகேட்டில் ஈடுபடும் முகவா்களை எளிதில் கண்டறிய முடியும். அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் இணையவழியில் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கே இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘நாள்தோறும் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளில் 27 சதவீதம் முகவா்கள் மூலமே முன்பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் 20 சதவீத பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்தப் பயணச்சீட்டுகளை ரத்து செய்த பிறகு திரும்பச் செலுத்தப்படும் தொகையை பயனாளா்களிடம் முகவா்கள் முறையாக வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கிலேயே, இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றாா்.
No comments:
Post a Comment