ஜூன் வரை ரேஷன் பொருட்கள் இலவசம்? மீண்டும், 1,000 ரூபாய் தர ஆலோசனை
Updated : ஏப் 09, 2020 02:09 | Added : ஏப் 08, 2020 23:11 |
சென்னை : ரேஷன் கடைகளில், சர்க்கரை உட்பட, குறைந்த விலையில் விற்கும் பொருட்களை, ஜூன் மாதம் வரை இலவசமாக வழங்கும்படி, பல தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. கிலோ சர்க்கரை, 25 ரூபாய்; கிலோ பருப்பு, 30 ரூபாய்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்றளவில் உள்ளன.
'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 25 முதல் வரும், 14ம் தேதி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பலரும் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கமும்; இம்மாதத்திற்கு உரிய அரிசி, கோதுமையுடன், பருப்பு, பாமாயில், சர்க்கரையும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக, வீட்டு வேலையாட்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப, பல நாட்களாகும்.
ரேஷன் கார்டுதாரர்கள் கூறியதாவது: ஊரடங்கால், வேலை இல்லாததால், பணப்புழக்கம் குறைந்துள்ளது. வெளிச்சந்தையில், அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் அதிகரித்துள்ளது. எனவே, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், ஜூன் வரை, அரிசி, கோதுமையுடன், பருப்பு, பாமாயில், சர்க்கரையையும் இலவசமாக, அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷனில், அடுத்த மூன்று மாதங்களுக்கு, கோதுமை, அரிசியை இலவசமாக வழங்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், ஏற்கனவே, அவை இலவசமாக வழங்கப்படும் நிலையில், ஜூன் வரை, பருப்பு, பாமாயில், சர்க்கரையை இலவசமாக வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.அத்துடன், மே மாதம், கார்டுதாரர்களுக்கு, கூடுதலாக, 1,000 ரூபாய் வழங்குவது தொடர்பாகவும், அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment