பயிற்சி டாக்டர் இருவர் உட்பட கோவையில் 14 பேர் 'டிஸ்சார்ஜ்'
Added : ஏப் 26, 2020 03:07
கோவை:கோவையில், 'கொரோனா' பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர்கள் இருவர் உட்பட, 14 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்த, பயிற்சி மருத்துவர்கள் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வகையிலான, உணவு மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இரண்டு முறை பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, நோயாளிகள், 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று பயிற்சி மருத்துவர்களுடன், கோவையை சேர்ந்த நான்கு பேர் மற்றும் திருப்பூரை சேர்ந்த 10 பேர் என மொத்தம், 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கோவையில் குணமடைந்தோர் எண்ணிக்கை, 118 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்ட 141 பேரில், மீதம் 23 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.நேற்றைய நிலவரப்படி, 250 பேர் கோவை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அதில், கோவையை சேர்ந்த 23 பேர் உட்பட, 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 101 பேரின் பரிசோதனை முடிவுகள் பெறப்படவில்லை. 55 பேருக்கு தொற்று இல்லை. இருவருக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை.
இ.எஸ்.ஐ.,மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''கொரோனா பாதித்த பயிற்சி மருத்துவர்கள் இங்கு அனுமதித்த நாள் முதலே ஆரோக்கியமாக தான் இருந்தனர். இவர்களில், ஒருவர் கோவையை சேர்ந்தவர்; மற்றொருவர் செங்கல்பட்டை சேர்ந்தவர். இதனால், அவர், '108' ஆம்புலன்ஸ்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீடுகளுக்கு சென்றவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.
No comments:
Post a Comment