9 நிமிடம் மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்: மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் வராது; அச்சம் வேண்டாம்: மின்சார வாரியம்
பிரதமர் வேண்டுகோளை அடுத்து நாடு முழுவதும் நாளை இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளை அணைக்கும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
நேற்று காலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, கரோனாவால் உருவான இருளை நாம் நம்பிக்கை எனும் ஒளி மூலம் அகற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை (5-ம் தேதி) இரவு 9 மணிக்கு அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்து இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் விளக்கை அணைத்தால் மின் பகிர்மானத்தில் பாதிப்பு ஏற்படும் என மகாராஷ்டிர மாநில மின்சாரத் துறை அமைச்சர் பேட்டி அளித்திருந்தார். தமிழகத்தில் மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சில அதிகாரிகள் திடீரென மின்சாரத்தை நிறுத்தும்போது மின் விநியோகம் குறைவதால் பாதிப்பு ஏற்படும். இதனால் ஏற்படும் பாதிப்பைச் சரி செய்ய மூன்று மணி நேரம் வரை ஆகலாம் என்று பேட்டி அளித்திருந்தனர்.
மின்சார விளக்கை அணைக்கும்போது மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள தெருவிளக்கை அணைக்கக்கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகத்தையும் பீதியையும் போக்கும் விதமாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் இதுகுறித்து அளித்துள்ள விளக்கம்:
“பிரதமர் கரோனா நோய்த் தொற்றுக்கு (கோவிட்-19) எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கில், மக்கள் அனைவரும் நாளை (05.04.2020) ஞாயிறு இரவு 9 மணிக்குத் தொடங்கி ஒன்பது நிமிடங்களுக்கு தங்கள் வீட்டிலுள்ள மின் விளக்குகளை அணைக்குமாறும், இதர விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, அத்தருணத்தில் மின்கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மற்ற மின் உபகரணங்களை வழக்கம்போல் இயக்கத்தில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்கள் யாவரும் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது”.
இவ்வாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment