குக்கரில் சாராயம் காய்ச்சிய 'வில்லேஜ் விஞ்ஞானி' கைது
Added : ஏப் 12, 2020 23:16
நாகர்கோவில் : குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது போனில் அழைத்தவர்களையும் வரவழைத்து, கைது செய்தனர்.
டாஸ்மாக் கடை தொடர்ந்து மூடி கிடப்பதால், மதுப்பிரியர்கள் நொந்து போய் உள்ளனர். வாங்கி, 'ஸ்டாக்' செய்த பாட்டில்களும் தீர்ந்து விட்டதால், சாராயம் பக்கம் திரும்பியுள்ளனர். இதை பயன்படுத்தி, பழைய சாராய வியாபாரிகள் மீண்டும் களம் இறங்கியுள்ளனர். மறைவிடங்களில் காய்ச்சி விற்றவர்களை, போலீசார் கைது செய்து வருவதால், தொழிலை வீட்டுக்கு மாற்றி விட்டனர். குமரி மாவட்டம், கருங்கல் அருகே மத்திகோட்டை சேர்ந்தவர், ராஜேஷ் ஜேக்கப், 34. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவர், சில மாதங்களுக்கு முன், ஊர் திரும்பினார். சாராயம் காய்ச்சினால் அதிக பணம் கிடைக்கும் என்று கருதியவர், தன் வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து வந்துள்ளார்.
சுலபமாக காய்ச்ச, குக்கரை பயன்படுத்தியுள்ளார்.அடிக்கடி, குக்கர் விசில் அடித்ததுடன், சாராய நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் வந்து, குக்கர், சாராயத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.ராஜேஷ் ஜேக்கப்பின் அலைபேசி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபோது, இரண்டு வாடிக்கையாளர்கள், அவருக்கு போன் செய்து, ஆவலுடன் சாராயம் கேட்டனர். அவர்களிடம் ராஜேஷை பேச வைத்து, குறிப்பிட்ட பகுதிக்கு வரவழைத்தனர்.போதை ஏற்றும் குஷியில், இரண்டு பைக்கில் வந்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். தடையை மீறி வெளியே வந்ததாக, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment