அரசு கைகொடுக்க வேண்டும் சுயநிதி கல்லுாரிகள் கோரிக்கை
Added : ஏப் 25, 2020 01:07
கோவை:'இக்கட்டான இந்நேரத்தில், அரசு கைகொடுக்கா விட்டால், பல சுயநிதி கல்லுாரிகள் தொடர்ந்து செயல்படுவது கஷ்டம் தான்' என, முதல்வருக்கு, சுயநிதி கல்லுாரி கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா பீதி காரணமாக, அனைத்து கல்லுாரிகளும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் பேராசிரியர்கள் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.'இந்த இக்கட்டான நேரத்தில், சுயநிதி கல்லுாரிகளின் நிலை குறித்து, அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.'தொழில் துறை, சிறு, குறு தொழில் நிறுவனங்களை போல், சுயநிதி கல்லுாரிகள் தரப்புக்கும் அரசு கைகொடுக்க வேண்டும்' என, சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி கூட்டமைப்பினர், மாநில மற்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூட்டமைப்பு சார்பில், முதல்வருக்கு அனுப்பிய மனு:செமஸ்டர் தேர்வு சமயம் என்பதால், மாணவர்களிடம் இருந்து வரவேண்டிய தொகை அதிகளவு வசூலிக்கப்படாமல் உள்ளது. தற்போதுள்ள சூழலில், மாணவர்களிடம் கட்டணம் கேட்க கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், எங்கள் தரப்பில் உள்ள பிரச்னைகளை அரசு கவனிக்க வேண்டும்.
சுயநிதி கல்லுாரிகளுக்கும் கடன் தந்தால், சிறிது காலம் தப்பிக்கலாம். கல்லுாரிகள் செயல்படாமல் இருக்கும் இந்நேரத்திலும் பராமரிப்பு செலவுகள், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, அரசு உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment