ஆயிரத்தை தாண்டியது தமிழகத்தில் பாதிப்பு; தடுப்பூசி கண்டறியும் ஆய்வு துவக்கம்
Updated : ஏப் 13, 2020 00:06 | Added : ஏப் 12, 2020 23:57
சென்னை: ''தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால், 1,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆய்வு பணி, தமிழகத்தில் நடந்து வருகிறது,'' என, சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ் கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 39 ஆயிரத்து, 41 பேர், வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசு கண்காணிப்பு மையங்களில், 162 பேர் உள்ளனர்; 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்து, 58 ஆயிரத்து, 159 பேர், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
எட்டு டாக்டர்கள்:
இதுவரை, 10 ஆயிரத்து, 655 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், புதிதாக நேற்று, 106 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், 16 பேர், வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள். மீதமுள்ள, 90 பேர், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதன் வாயிலாக பாதிப்பு எண்ணிக்கை, 1,075 ஆக உயர்ந்துள்ளது; 11 பேர் உயிரிழந்துள்ளனர்; 50 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, எட்டு டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உரையாடல் குரல் பதில் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு:
தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை செய்யும் செலவை, அரசே ஏற்கும்.தமிழகத்தில், 1.5 லட்சம் கர்ப்பிணியர் உள்ளனர். அவர்களில், 11 ஆயிரம் பேர், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா குறித்து, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை ஆய்வு நடத்தி வருகிறது. மேலும், உலகளவில் முன்னோடியாக, தடுப்பூசி கண்டு பிடிக்கும் ஆய்வும் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தீவிர கண்காணிப்பில் சென்னையில், 775 பேர்:
சென்னையில், கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை சுற்றி, 5 கி.மீ., வரை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில், 10.56 லட்சம் வீடுகளில், 20.20 லட்சம் நபர்கள் உள்ளனர். அவர்களுக்கு, கொரோனா அறிகுறி இருக்கிறதா என, மாநகராட்சி களப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, இதுவரை, 18.63 லட்சம் பேரிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதில் இதுவரை, 3,036 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில், 2,261 பேருக்கு, பெரியளவில் பாதிப்பு இல்லை. மீதமுள்ள, 775 பேர், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். எனினும், 3,036 பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.
மூன்று நிறங்கள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்கள்:
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, எண்ணிக்கை அடிப்படையில், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்களில், அரசு வகைப்படுத்தியுள்ளது. இதில், அதிக பாதிப்பு எண்ணிக்கை உள்ள மாவட்டங்கள், சிவப்பு, ஆரஞ்சு என, வகைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment