Monday, April 13, 2020


புதிய செயல் திட்டம்: நாளைக்குப் பின் மூன்று மண்டலங்களாக பிரிக்க முடிவு

Updated : ஏப் 13, 2020 07:36 | Added : ஏப் 12, 2020 23:06 |

புதுடில்லி : தற்போது அமலில் உள்ள, 21 நாள் ஊரடங்கு, நாளையுடன் முடியும் நிலையில், கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, நாடு முழுதும் உள்ள பகுதிகளை, மூன்று மண்டலங்களாக பிரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் கட்டுப்பாடுகளை நீடிக்கவும், குறைவாக உள்ள மண்டலங்களில் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மாதம், 24ம் தேதி இரவு, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மஹாராஷ்டிரா, டில்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

'வீடியோ கான்பரன்ஸ்'

இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கும்படி, பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள், பிரதமர், நரேந்திர மோடியுடன் நடந்த, 'வீடியோ கான்பரன்ஸ்' ஆலோசனையின் போது வலியுறுத்தினர். இந்த விஷயத்தில் மத்திய அரசு முடிவை அறிவிப்பதற்கு முன்பே, ஒடிசா, தெலுங்கானா, மஹராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள், ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்து உள்ளன.

கொரோனா வைரஸ் நாடு முழுதும் பரவாமல் தடுக்க, ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்றாலும், இதனால், பொருளாதாரம் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்து தொழில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாலும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதாலும், தினக்கூலி தொழிலாளர்கள், மாதச் சம்பளதாரர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே சிரமமாக உள்ளது.

பொருளாதாரம் :

'மக்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு பொருளாதாரமும் முக்கியம்' என, பிரதமர், மோடி, நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து, ஏப்., 14க்குப் பின் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்தாலும், சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஏப்., 14க்குப் பின், கொரோனா பாதிப்பின் அடிப்படையில், நாட்டை, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, மூன்று மண்டலங்களாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில முக்கிய திட்டங்களையும், நடைமுறைகளையும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை :

வேலை இழப்பு, பொருளாதார பாதிப்பு ஆகியவற்றை தடுப்பதற்காக, மாநில அரசுகளின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் எந்த பணியும் நடக்கவில்லை. துறைமுகங்களிலும், கப்பல்களிலும், சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. இதனாலும், பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பு ஏற்படலாம். எனவே, இந்த பிரசனைக்கும் தீர்வு அறிவிக்கப்படலாம். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு, இன்று வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று மண்டலங்கள்:

கொரோனா பாதிப்பின் அடிப்படையில், நாட்டை, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, மூன்று மண்டலங்களாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவை:

சிவப்பு மண்டலம்

கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ள அல்லது நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். இந்த பகுதிகள் முற்றிலும் முடக்கப்படும். இங்கு, தற்போது உள்ளதை விட, மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு, மக்களை, வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே அனுமதிப்பது போன்ற நடவடிக்கைககள் செயல்படுத்தப் படலாம். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரஞ்சு மண்டலம்

கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள அல்லது கடந்த சில நாட்களாக பாதிப்பு முற்றிலும் இல்லாத பகுதிகள், ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்படும். இங்கு, கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட வாய்ப்புள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முழுமையான அனுமதி வழங்கப்படும். பொதுப் போக்குவரத்தும் கட்டுப்பாடுகளுடன், குறிப்பிட்ட அளவில் இயக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பச்சை மண்டலம்

கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லாத பகுதிகள், பச்சை மண்டலத்துக்குள் வரும். இங்கு, சிறு மற்றும் குறு தொழில்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படும். இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், சமூக விலகல் நடைமுறையை பின்பற்ற உத்தரவிடப்படும். மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி பணியாற்றும்படி, இவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

No comments:

Post a Comment

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar  TIMES NEWS NETWORK 12.01.2025 Bhopal : Two more crocodiles were rescued on Satu...