தமிழகத்தில் திருமால் வழிபாடும், நவதிருப்பதியும்! :புரட்டாசி சனிக்கிழமை -3
Updated : அக் 03, 2020 00:59 | Added : அக் 03, 2020 00:54
-'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என்று, தொல்காப்பியர், தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வட வேங்கடம் என்பது, தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி.அதாவது, திருப்பதி முதல் கன்னியாகுமரி வரை, பரந்து விரிந்த நிலப் பகுதியை கொண்டதாக,நம் பண்டைய தமிழகம் இருந்தது. இதில், பல்வேறு மத, இன நம்பிக்கைகளுடன், மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள், தொல்லியல் தடயங்களாகவும், இலக்கியங்கள் வாயிலாகவும் நமக்கு கிடைகின்றன.
தொல்காப்பியத்தின் அகத்திணையியலில், தமிழக நிலப் பகுதிகள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிலத்தின் தன்மைக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரிக்கப்பட்டு, அவற்றுக்கான தெய்வங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லை நிலம்
முல்லை நிலமானது காடும் காட்டைச் சார்ந்த மேய்ச்சல் நிலப் பகுதி. இதற்கான கடவுளாக மாயோன் என்னும் திருமால் குறிப்பிடப்பட்டுள்ளார்.ஆடு, மாடு மேய்ச்சலை முக்கிய தொழிலாகக் கொண்ட மக்களால், இவர் வணங்கப்பட்டுள்ளார். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்தின், அத்துணை அம்சங்களும் பொருந்துவதாக இவர் திகழ்கிறார்.
மற்றொரு சங்க இலக்கியமான பரிபாடலில், விஷ்ணுவின் அவதாரங்கள் விளக்கமாக குறிப்பிடப்பட்டிருப்பது, திருமால் வழிபாட்டின் தொன்மையை விளக்குவதாக உள்ளது.
கலித்தொகையில், 'மால்' என, விஷ்ணு போற்றப்படுகிறார். சங்க இலக்கியத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் மற்றொரு செய்தியானது, திருமால் வழிபாடு தமிழகத்தில் வேரூன்றிய காரணத்தை விளக்குவதாக உள்ளது.மஹாபாரதப் போர் முடிவுற்ற பல காலத்திற்குப் பின், கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகை நகரம், கடல்கோள் என்னும் சுனாமிக்கு உள்ளானது. அங்கிருந்த யாதவ இன மக்களில் ஒரு பகுதியினர், அகத்தியரின் வழிகாட்டுதலின்படி, தென் தமிழகத்தை வந்தடைந்தனர்.
இம்மக்கள் பதினெண்குடி வேளிராக காட்டைத் திருத்தி நாடாக்கி, இங்கு வாழத் துவங்கினர் என்பதே அச்செய்தி. தென் தமிழகத்தில் மிகப் பழமையான விஷ்ணு கோவில்கள் நிறைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில், 80 சதவீத கோவில்கள் தமிழகத்திலேயே உள்ளன. இவற்றில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒன்பது திவ்யதேச கோவில்கள், நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை, தொன்மையான பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.இவ்வழகிய கோவில்கள், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இது, திருத்தலங்களின் பெருமாள் பெருமையை மட்டுமல்லாது, இத்தலங்களின் இயற்கை அழகையும், வைணவ ஆழ்வார்கள் தங்கள் பாடலில் வர்ணித்துள்ளனர்.
நவ திருப்பதி
ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீவைகுண்டம்: இக்கோவில் கள்ளபிரான் கோவில் என்றும் தலபுராணத்தின்படி அழைக்கப்படும். இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான சூரிய பகவானுக்கு உகந்த தலம்.மகர நெடுங்குழைக்காதன் எனும் முகில் வண்ணப் பெருமாள் திருக்கோவில் தென் திருப்பேரை: இக்கோவில் ஒன்பது கருட சேவை ஒருங்கே காண்பதற்கு சிறந்த தலம். இக்கோவில், நவகிரஹங்களில் ஒருவரான சுக்கிரனுக்கு உகந்த தலம்.
திருதேவர்பிரான் திருக்கோவில் - திருத்தொலைவில்லிமங்கலம்: இக்கோவில் இரட்டை திருப்பதி என, அழைக்கப்படும் திவ்யதேசத்தில் ஒன்றான ராகு தலம்.திருஅரவிந்தலோச்சனார் திருக்கோவில் - திருத்தொலைவில்லிமங்கலம்: இக்கோவில் இரட்டை திருப்பதி என, அழைக்கப்படும் திவ்யதேசத்தில் ஒன்றான கேது தலம்.திருவைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில் - திருக்கோளூர்: இக்கோவிலின் சிறப்பாக திருமால் உலகத்திற்கு படி அளப்பவனாக, மரக்காலை தலைக்கு தலையணையாக வைத்த கோலத்தில் சயனித்திருக்கிறார்.
இது,குபேரஷேத்ரம் என்றும் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.திருஆதிநாதர் திருக்கோவில் எனும் ஆழ்வார்திருநகரி - திருக்குருகூர்: இத்தலம் நம்மாழ்வார் பிறந்த புண்ணிய பூமி. இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான குருவுக்கு உகந்த தலம்.திருகாசினிவேண்டான் பெருமாள் திருக்கோவில் - திருப்புளியன்குடி: இத்தலத்தில் பெருமாளின் நாபிகமலத்தில் இருந்து பிரம்மா தோன்றுவது மிகச் சிறப்பான அம்சம். இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான புதனுக்கு உகந்த தலம்.திருவிஜயசான பெருமாள் திருக்கோவில் எனும் திரு வரகுணமங்கை - நத்தம்: வரகுண பாண்டியனுக்கு பெருமாள் தரிசனம் தந்த இடம் ஆதலால், இந்த இடப் பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது.
இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான சந்திரனுக்கு உகந்த தலம்.திருவேங்கடவாணன் திருக்கோவில் - திருகுலந்தை பெருங்குளம்: இக்கோவில் உற்சவர் பெயரால் மாயக்கூத்த பெருமாள் திருக்கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோவில் நவகிரஹங்களில் ஒருவரான சனி பகவானுக்கு உகந்த தலம்.
இக்கோவில்களின் தலபுராணங்கள் இக்கோவிலின் காலத்தை பல யுகங்களுக்கு முன் தோன்றியதாக குறிப்பிடுகின்றன. மேலே குறிப்பிட்டது போல, தமிழகத்தில் திருமால் வழிபாடு தொன்றுதொட்டு வளர்ந்துள்ளதற்கு, இக்கோவில்களும் ஒரு சாட்சி.இக்கோவில்கள் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்களாக விளங்குவதால், அவர்கள் வாழ்ந்த, 6 முதல், 9ம் நுாற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கொள்ளலாம்.
இக்கோவில்களின் கட்டடக்கலை அமைப்பும், இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளும், 6 முதல், 16ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சேர்ந்ததாக உள்ளன.இக்கோவில்கள் அனைத்தும் 100 முதல், 12 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ளதால், நாம் விரைந்து தரிசிக்க ஒரு நாள் போதுமானதாக இருக்கும்.
ஆனால், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் மதுரை நாயக்கர்களால் பராமரிக்கப்பட்டு, பல திருப்பணிகள் செய்யப்பட்டு விளங்கும் இக்கோவில்களின் அமைப்பும், அழகும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாதவை.இக்கோவில்களின் தலபுராணங்களும், விழாக்களும், ஆடல் பாடல்களும், மிகச் சிறப்பாக சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும் செய்யப்பட்டுள்ளதை காண கண்கோடி வேண்டும்.
முனைவர் கோ.பாலாஜிஉதவி பேராசிரியர்,சி.பி.ரா., இந்தியவியல் ஆய்வு மையம், சென்னை.
No comments:
Post a Comment