வங்கி முறைகேடு வழக்கு 'மாஜி' அதிகாரிக்கு சிக்கல்
Added : அக் 02, 2020 22:22
புதுடில்லி:வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளருக்கு எதிராக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, வைர வியாபாரி நிரவ் மோடி, மோசடி செய்தார். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், நிரவ் மோடி கடன் பெற, சட்ட விரோதமாக உதவி செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி கைது செய்யப்பட்டார்.
கோகுல் ஷெட்டிக்கு எதிராக, சி.பி.ஐ., அதிகாரிகள், மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிரவ் மோடிக்கு, வங்கி உத்தரவாதக் கடிதங்களை, கோகுல்நாத் ஷெட்டி அளித்துள்ளார். அந்தக் கடிதங்களை வைத்து, வெளி நாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில், நிரவ் மோடி கடன் பெற்றுள்ளார்.இதற்காக, அவர் நிரவ் மோடியிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் அவர் அதிகாரியாகப் பணியாற்றிய ஆறு ஆண்டுகளில், வருமானத்துக்கு அதிகமாக, 2.63 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment