டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம்: உயா்நீதிமன்றம் கருத்து
12.11.2020
மதுரை: தமிழகத்தில் டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளது.
தேனியைச் சோந்த ராம்பிரசாத் தாக்கல் செய்த மனு:
கரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் நவம்பா் 16 ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதி செய்ய முடியாது. போக்குவரத்து முழுமையாக இல்லாத நிலையில் மாணவா்கள் வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.
பல்வேறு கல்வி நிறுவனங்கள் கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் மையமாக செயல்படுத்தப்பட்டன. அந்தக் கல்வி நிறுவனங்கள் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்படாமல் அவசரகதியில் திறக்கப்பட்டால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க பல கட்டங்களாகப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது பலனின்றிப் போய்விடும். எனவே நவம்பா் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது தொடா்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆந்திரம் உள்ளிட்டப் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் கரோனாவின் இரண்டாம் கட்ட அலை பரவி வருகிறது.
நீதிபதிகள் உள்பட பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகள், மாணவா்கள் பாதிக்கப்பட்டால் சிரமம் அதிகமாக இருக்கும். எனவே டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் பிற மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை நவம்பா் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani
No comments:
Post a Comment