Wednesday, November 11, 2020

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: வட மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: வட மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

Updated : நவ 11, 2020 06:59 | Added : நவ 11, 2020 06:57

சென்னை : தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், இன்று(செப்.,11) முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கும், கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கி, இரண்டு வாரங்களாகும் நிலையில், மூன்று நாட்களாக வறண்ட வானிலை நிலவியது.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், மழை குறைந்து வறண்ட வானிலை நிலவியதாக, சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இந்நிலையில், இன்று முதல் 4 நாட்களுக்கு, சென்னை முதல் தென்காசி வரை பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுதும், இன்று முதல், 14ம் தேதி வரை, பரவலாக இடி, மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது.தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று இடியுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யலாம்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், நாளை கன, மிக கனமழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும்.

வரும், 13ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அடுத்த நாள், தமிழகம், புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களிலும், கனமழை பெய்யும். சில உள் மாவட்டங்களிலும், இடியுடன் கூடி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், இன்று பல இடங்களில் மிதமான மழையும்; சில இடங்களில் கனமழையும் பெய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கனமழை அறிவிப்பை தொடர்ந்து, நாளை மற்றும் வரும், 14ம் தேதிக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை பெய்தால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை மேற்கொள்ள, வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறையினருக்கும், வானிலை மையம் தகவல் அனுப்பி உள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில், இன்று மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம்.எனவே, மீனவர்கள்அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024