Wednesday, November 11, 2020

பள்ளிகள் திறப்பு குறித்து ஓரிரு நாளில் முடிவு

பள்ளிகள் திறப்பு குறித்து ஓரிரு நாளில் முடிவு

Updated : நவ 11, 2020 05:45 | Added : நவ 11, 2020 05:42

சென்னை : பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு அறிக்கையை, தமிழக அரசிடம், பள்ளி கல்வித்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள கருத்துகள் அடிப்படையில், முதல்வர் இ.பி.எஸ்., ஓரிரு நாளில் முடிவை அறிவிப்பார்.

கொரோனா பிரச்னை காரணமாக, ஏழு மாதங்களாக பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் ஆன்லைன் வழியாகவும், அரசு பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலும், 'வாட்ஸ் ஆப்' வழியாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி, 'டிவி' வழியாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், வரும், 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லுாரிகளை திறக்கலாம் என, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், பள்ளிகளை திறப்பதா, தள்ளி வைப்பதா என்பது குறித்து, நேற்று முன்தினம் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த கருத்துகளை, மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் தொகுத்தனர். அதில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கருத்து கேட்பில் பங்கேற்ற மாணவர்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு; கருத்து கேட்பில் பங்கேற்ற பெற்றோர் எத்தனை பேர்; திறக்க ஆதரவு எவ்வளவு; தள்ளி வைக்க கோரியவர்கள் எத்தனை பேர் போன்ற குறிப்புகள் உள்ளன.

ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படும், பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் தீர்மானம் என்ன என்ற விபரமும், பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, மாவட்ட வாரியாக கருத்துகேட்பு குறித்த, ஏகமனதான முடிவுகள் உள்ள அறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பினர்.மாவட்ட வாரியான அறிக்கையை, தமிழக பள்ளி கல்வி துறை செயலர் தீரஜ்குமாரிடம், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், நேற்று தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கை, தலைமை செயலர், பள்ளி கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதாரத்துறை செயலர்கள் அடங்கிய குழுவின் ஆய்வுக்கு பின், முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்பின், பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பை, முதல்வர் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024