5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
Added : நவ 22, 2020 00:42
சென்னை:வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால், ஐந்து மாவட்டங்களுக்கு, மிக அதிக கனமழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கைக்கு தெற்கில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், நாளை கன மழை பெய்வதற்கான மஞ்சள் நிற, 'அலர்ட்'டும், வரும், 24, 25ம் தேதிகளில், மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களுக்கு, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:வங்க கடலின் தெற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிஉள்ளது. இந்த காற்றழுத்த மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும், 25ம் தமிழக கடற்கரைக்குள் வரும். இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், நாளை மிதமான மழை பெய்யும்.
நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.வரும், 24ம் தேதி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், இடியுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யும்.கடலுார், மயிலாடுதுறை, சிவகங்கை, துாத்துக்குடி மாவட்டங்களிலும், காரைக்காலிலும், கன முதல் மிக அதிக கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
வரும், 25ம் தேதி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், கனமுதல் மிக கன மழை பெய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment