பொருளாதாரத்தில் பின்தங்கியவர் சான்றிதழ்மருத்துவ மாணவிக்கு வழங்க உத்தரவு
Added : நவ 22, 2020 01:35
சென்னை:'ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது போல பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கக் கூடாது என்பதற்காக ஒதுக்கீடு அறிமுகப் படுத்தப்பட்டது' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த பூர்வி என்பவர் தாக்கல் செய்த மனு:எம்.பி.பி.எஸ். முடித்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளேன்.பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன்.தந்தைக்கு நிரந்தர வேலை வருமானம் இல்லை. மருத்துவ படிப்பு முடித்த பின் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஆகஸ்ட் வரை பணியாற்றினேன்.
கடந்த ஆண்டு சான்றிதழுக்கு விண்ணப்பித்த போது எழும்பூர் தாசில்தார் வழங்கினார். தாயார் இறந்ததால் நுழைவு தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை எட்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருப்பதாக கூறி நிராகரித்துள்ளார்.
வருமான வரி கணக்கின்படி 2020 -- 21ம் ஆண்டுக்கான சம்பளம் 6.37 லட்சம் ரூபாய் தான். மொத்த சம்பளமாக கணக்கிட்டாலும் 7.37 லட்சம் ரூபாய் தான். எனவே எனக்கு சான்றிதழ் வழங்க உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுதர்சன சுந்தர் அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் வி.எஸ்.சுந்தர் ஆஜராயினர்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடினமாக உழைத்து அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் பெற்றுள்ளார். அவரது நிதி நிலைமை சரியில்லை. இவரை போன்றவர்களை உயர்த்தி விடுவது அரசின் கொள்கை என்பதால் தான் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மனுதாரர் முற்பட்ட பிரிவிவை சேர்ந்தவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர். அரசின் கொள்கைப்படி உயர் கல்வியை தொடர அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். உயர் கல்வியில் இடஒதுக்கீடு என்பது தற்போது தீவிர பிரச்னையாக உள்ளது. சமூகத்தில் வெவ்வேறு பிரிவினருக்கு இடையில் வேறுபாடுகளை இது ஏற்படுத்துகிறது.
அறிவுடைய தகுதியான மாணவர்களால் கல்வி வாய்ப்பு பெற முடியவில்லை.'மெரிட்'டில் வர முடியாதவர்கள் இடஒதுக்கீட்டில் கல்வி வாய்ப்பு பெறுகின்றனர். உயர் கல்வி தரத்தில் சமரசம் மேற்கொள்ளாமல் ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மேம்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
முற்படுத்தப்பட்ட பிரிவிவைச் சேர்ந்தவர்களாக இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களாக இருந்தால் அவர்களுக்கான இடத்தை மறுக்கக் கூடாது என்பதற்காக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு வந்தது.மனுதாரர் தகுதி படைத்தவர்; அவரது வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவு தான் என்பதை நிரூபித்துள்ளார்.
அவருக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவருக்கான சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். எழும்பூர் தாசில்தார் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக சான்றிதழ் வழங்கும்படி தாசில்தாருக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment