Thursday, November 19, 2020

மாவட்டத்தில் முதலிடம் பிடித்தும் தரவரிசையில் இடம் இல்லை!: அரசு பள்ளி மாணவி கண்ணீர்

மாவட்டத்தில் முதலிடம் பிடித்தும் தரவரிசையில் இடம் இல்லை!: அரசு பள்ளி மாணவி கண்ணீர்

Added : நவ 19, 2020 01:57

அன்னுார்:'நீட்' தேர்வில், கோவை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி தரவரிசைப் பட்டியலில், இடம் பெறவில்லை.

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் மகள் ஞானம் சவுந்தர்யா. இவர் எஸ். எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வில், 720க்கு, 361 மதிப்பெண் பெற்றார். அரசு பள்ளி மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில், கோவை மாவட்டத்தில், இம்மாணவி முதலிடம் பெற்றார். ஆனால், மருத்துவ கல்வி இயக்ககம் அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில், 951 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மாணவி ஞானம் சவுந்தர்யா பெயர் இல்லை.மாணவி ஞானம் சவுந்தர்யா கூறியதாவது :ஆறாம் வகுப்பு மட்டும், அன்னுாரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு கல்வி கட்டணம் செலுத்த முடியாததால், ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அரசு வெளியிட்ட பட்டியல்படி, கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றேன். தமிழகத்தில் ஆறாம் இடம் பெற்றேன்.

ஆனாலும், தற்போது ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இருக்க வேண்டும் என்று கூறி, தரவரிசை பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. இதனால், டாக்டராகும் கனவு தகர்ந்து போயுள்ளது.இவ்வாறு, கண்ணீருடன் தெரிவித்தார்.இது தொடர்பாக, தமிழக முதல்வர், கலெக்டர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024