சுரப்பா மீது விசாரணை ஏன்: 'மாஜி' பாலகுருசாமி கேள்வி
Added : நவ 19, 2020 01:19
கோவை:''தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுக்காக ஓடிக்கொண்டிருந்த அண்ணா பல்கலை வாகனங்களை திரும்ப பெற்றதால் துணைவேந்தர் சுரப்பா மீது கோபம் அடைந்தனர். அரசுக்கு வளைந்து கொடுத்து போகாததால் சுரப்பா பிரச்னையில் சிக்கியுள்ளார்'' என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்தார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டி அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது கல்வியாளர்கள் பேராசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது: போலி அநாமதேய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி அண்ணா பல்கலை பெயரை களங்கப்படுத்துகின்றனர். புகார் கடிதம் அனுப்பியதாக கூறப்படும் நபரை தொடர்பு கொள்ள குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் அழைத்தேன்; அவ்வாறு யாருமில்லை என பதில் வந்தது. புகார் மனுவில் திருச்சி அருகிலுள்ள ஒரு இடத்தைக் குறிப்பிட்டுள்ளனர்; அதுவும் போலியானது.
பேராசிரியர் நியமனத்துக்கு துணைவேந்தர் சுரப்பா லஞ்சம் வாங்கினார் என்பது ஆதாரமற்றது. இவரது காலத்தில் எந்த நியமனங்களும் நடக்கவில்லை. அவரை வைத்து பணம் சம்பாதிக்க முடியாததால் அரசு அவரை தொந்தரவு செய்கிறது.அவர் அரசுக்கு வளைந்து கொடுத்திருந்தால் பிரச்னையை சந்தித்திருக்க மாட்டார். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுக்காக ஓடிக் கொண்டிருந்த பல்கலை வாகனங்களை திரும்ப பெற்றதால் அவர் மீது கோபம் அடைந்து உள்ளனர். மர்ம கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடப்பது இதுவே முதல் முறை.
கோவை பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர்கள் சுவாமிநாதன், ஜேம்ஸ் பிச்சை, கணபதி மற்றும் அண்ணா பல்கலை ராஜாராம், மன்னர் ஜவஹர் போன்றவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைகள் விசாரணைகள் நடந்ததை கண்டிருக்கிறோம். அதற்குப் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில் பணம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சம பாகமாக பங்களிக்கப்படுகிறது.
சுரப்பாவை இடைநீக்கம் செய்வதில் கவர்னரின் முடிவு தான் இறுதி என்பதால் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எந்த தலையீடும் செய்ய தேவையில்லை.2006ல் இருந்து அதிகரித்துள்ள ஊழல் காரணமாக தமிழகத்தில் உயர்கல்வித்துறை அவல நிலையை எட்டியுள்ளது.
அந்த காலகட்டத்தில் ஒரு துணைவேந்தர் அப்பதவியைப் பெற 55 கோடி ரூபாய் கொடுத்ததாக தெரிவித்தார். அதை மற்றொரு துணைவேந்தரும் ஒப்புக் கொண்டார். அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர் மட்டுமே அப்பதவியைப் பெற முடியும்; திறமைக்கும் நேர்மைக்கும் இடமில்லை. இவ்வாறு பாலகுருசாமி கூறினார்.
No comments:
Post a Comment