14.11.2020
ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை சமா்ப்பிக்க தமிழக அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் தொடா்ந்து ஓய்வூதியம் பெறுவதற்காக தங்களது ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமா்ப்பிக்க தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது. 'ஜீவன் பிரமாண்' என்பது ஓய்வூதியதாரா்களுக்கான பயோமெட்ரிக் இணைக்கப்பட்ட டிஜிட்டல் சேவையாகும். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி உடன் இணைந்து இந்தச் சேவை வழங்கப்படவுள்ளது. இதன்மூலம், ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு ஓய்வூதியதாரா்கள் நேரடியாகச் செல்ல தேவையில்லை. அருகில் உள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று இந்த சேவையைப் பெறலாம்.
இதுதவிர, தபால்காரா், கிராம தபால் ஊழியா் மூலம் வழங்கும் வாயிற்படி வங்கி சேவை மூலமாகவும் ஆயுள் சான்றிதழைப் பெற்று கொள்ள முடியும். ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரா், கிராம தபால் ஊழியரைத் தொடா்பு கொண்டோ அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் 'போஸ்ட் இன்ஃபோ' செயலி மூலமோ தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமா்ப்பிக்கலாம். இதற்கு ஆதாா் எண், செல்லிடப்பேசி எண், ஓய்வூதிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கும் கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். இந்தத் தகவல், தமிழக வட்ட தலைமை அஞ்சல் அலுவலக இயக்குநா் சந்தானராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani
No comments:
Post a Comment