அண்ணா பல்கலையில் பணி வரன்முறை
Added : நவ 13, 2020 20:30
சென்னை:பணி வரன்முறை கோரி, அண்ணா பல்கலையில் தினசரி ஊதிய அடிப்படையில், அலுவலக உதவியாளராக பணியாற்றிய, 40 பேர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அண்ணா பல்கலையில், 1999 முதல், தினசரி ஊதியம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட, 40 பேர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:பல ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக, நாங்கள் பணியாற்றி வருகிறோம். பணி வரன்முறை செய்வதற்கான நடவடிக்கைகளை, அண்ணா பல்கலை எடுத்தது. நேர்முகத் தேர்வையும் நடத்தியது.
இதற்கிடையில், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்று, 2016ல் அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.எங்கள் பணியை வரன்முறை செய்யாமல், புதிதாக தேர்வு நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது. எனவே, எங்களை பணி வரன்முறை செய்ய, அண்ணா பல்கலைக்கு உத்தரவிட வேண்டும். அதன்பின், மீதி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆஜராகி, ''தற்காலிக அடிப்படையில், மனுதாரர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ''அவர்களுக்கான ஊதியத்தை, சம்பந்தப்பட்ட துறைகள் அளித்தன. முறையான தேர்வு நடவடிக்கைகளை பின்பற்றி, இவர்கள் நியமிக்கப்படவில்லை,'' என்றனர்
.மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:பகுதி நேர ஊழியர்கள், பணி வரன்முறை பெற உரிமையில்லை; முழு நேர தினசரி ஊதிய தொழிலாளர்கள், 2006 ஜன., 1ல், 10 ஆண்டுகள் முடித்திருந்தால், பணி வரன்முறை பெறலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள், 2006 ஜனவரியில், 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் மட்டுமே, பணி வரன்முறை செய்ய முடியும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, 2006 ஜனவரியில், மனுதாரர்கள் யாரும், 10 ஆண்டுகள் பணி புரிந்திருக்கவில்லை. இவர்களுக்கு, சட்டப்பூர்வ உரிமை இல்லை. அதனால், இவர்களுக்கு உதவ முடியாது.வேலை வாய்ப்பகம் மற்றும் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டு தான், காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அரசாணையை, அண்ணா பல்கலை பின்பற்றுகிறது. அதனால், 2016ல் அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்பில் சட்டவிரோதம் எதுவும் இல்லை.
சட்டப்படி, அனுமதிக்கப்பட்ட காலியிடங்களை அண்ணா பல்கலை நிரப்ப வேண்டும். மனு தாரர்களின் வாழ்வாதாரத்தை கருதி, ஒரு திட்டம் வகுக்க உத்தரவிடும்படி கோரப்பட்டது. பல்கலையின் அதிகாரத்துக்கு உட்பட்டு இருந்தால், அதுகுறித்து முடிவெடுப்பது, பல்கலையை பொறுத்தது. நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment