Saturday, November 14, 2020

சுரப்பா ரூ.200 கோடி ஊழல் செய்தாரா?விசாரணைக்கு உத்தரவு

சுரப்பா ரூ.200 கோடி ஊழல் செய்தாரா?விசாரணைக்கு உத்தரவு

Updated : நவ 13, 2020 21:41 | Added : நவ 13, 2020 20:16

சென்னை : அண்ணா பல்கலையில் பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக துணை வேந்தர் சுரப்பா மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா பிறப்பித்துள்ள அரசாணை: திருச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இந்த ஆண்டு பிப். 21ல் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:அண்ணா பல்கலையும் அதிலுள்ள சில பேராசிரியர்களும் சேர்ந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் நிர்வாக பிரிவின் துணை இயக்குனர் சக்திநாதன் மற்றும் துணை வேந்தர் சுரப்பா ஆகியோர் 200 கோடி ரூபாய் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா பல்கலை வளாகம் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிக்க ஒவ்வொருவரிடமும் 13 முதல் 15 லட்சம் ரூபாய் வரை மொத்தம் 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ்கள்

வரதராஜன் என்பவர் அளித்த புகாரில் அண்ணா பல்கலையின் தேர்வு துறையில் நிர்வாக பணியில் அலுவலக உதவியாளர் நியமனம் செய்ததில் போலி சான்றிதழ்கள் பெறப்பட்டு உள்ளதாகவும் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.'அண்ணா பல்கலையை பாதுகாக்கவும்' என்ற பெயரில் வந்த இ- - மெயிலில் சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் கூடுதல் பதிவாளராக பேராசிரியர் செல்லதுரை நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மகளுக்கு  பதவி

மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு துணை வேந்தர் சுரப்பா எழுதிய கடிதத்தில் இறுதி ஆண்டு மாணவர்கள் தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆதிகேசவன் என்பவர் அனுப்பிய புகாரில் 'சுரப்பா தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன் மகளுக்கு பணி நியமனம் வழங்கியுள்ளார். உறுப்பு கல்லுாரிகளுக்கு இயந்திரங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இவை தவிர நிதி முறைகேடு, செமஸ்டர் தேர்வில் முறைகேடு மற்றும் மறுமதிப்பீட்டில் முறைகேடு போன்ற புகார்களும் வந்துள்ளன. இந்த புகார்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளதால் துணை வேந்தர் சுரப்பா மீதான புகாரை விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அதிகாரியாக இருப்பார். அவர் தன் விசாரணைக்கு அரசு அதிகாரங்களையும் போலீசாரையும் பயன்படுத்தி கொள்ளலாம். விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைப்பட்டியல்

* துணைவேந்தர் சுரப்பா பதவி காலத்தில் அண்ணா பல்கலையின் 1978ம் ஆண்டு சட்டத்தின் படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதா என்பது விசாரிக்கப்படும்

* அண்ணா பல்கலையின் பேராசிரியர்களுக்கு தரநிலை பதவி உயர்வில் ஊழல் நடந்துள்ளதா; சுரப்பா தலைமையிலான நிர்வாகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் விதிகளை பின்பற்றியும் உரிய கல்வி தகுதியை ஆய்வு செய்தும் நடத்தப்பட்டதா என விசாரணை நடத்தப்படும்

* சுரப்பா துணை வேந்தராக இருந்த காலத்தில் கல்வி கட்டணம் உட்பட பல்கலைக்கு வந்த வருவாய் விபரங்களும் பல்கலை செலவிட்ட விபரங்களும் ஆய்வு செய்யப்படும். இதில் மோசடி நடந்துள்ளதா என கண்டறியப்படும்

* அண்ணா பல்கலையுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள், அறக்கட்டளைகள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்படும்

* சுரப்பாவின் நிர்வாகத்தில் இருந்தவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனரா என விசாரிக்க வேண்டும். அரசுக்கு வந்துள்ள புகார்களின் உண்மை நிலையையும் விசாரிக்க வேண்டும்

* இந்த குற்றச்சாட்டுகள் உண்மை எனும் பட்சத்தில் எதிர்காலத்தில் அதுபோன்று நடக்காமல் தடுக்க விசாரணை அதிகாரி உரிய வழிகளையும் ஆலோசனையையும் அளிப்பார்.

8 காசு கூட ஊழல் இல்லை

துணைவேந்தர் சுரப்பா அளித்த பேட்டிஎன் மீது குற்றம்சாட்டி முகவரி இல்லாமல் எத்தனையோ மொட்டை கடிதங்கள் எனக்கே வந்துள்ளன. இடமாறுதல் வழங்காவிட்டால் சிறைக்கு அனுப்புவேன் என்றும்; சிலரது இடமாறுதலை ரத்து செய்யாவிட்டால் 3000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக புகார் அனுப்புவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

என் மீது அரசு கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் ஆச்சரியமாக இருக்கின்றன. என் மகள் அறிவுசார் சொத்துரிமை துறையில் நிபுணர். இந்திய அறிவியல் உயர் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.அவர் அண்ணா பல்கலையின் அறிவுசார் சொத்துரிமை பணிகளை மேம்படுத்த உதவ வேண்டும் என பல்கலை பேராசிரியர்கள் விரும்பினர். அதற்காக ஆறு மாதம் இங்குள்ள அறிவுசார் சொத்துரிமை மையத்தில் கவுரவ பொறுப்பில் சேவையாற்றினார்.நான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. விசாரணையை எதிர்கொள்கிறேன். என் மீது 80 கோடி ரூபாய் ஊழல் குற்றம் சாட்டுபவர்கள் எட்டு காசு ஊழல் செய்தேன் என்பதற்கான ஆதாரம் காட்டட்டும் பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.-

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024