பூத் சிலிப் விநியோகத்தில் அலட்சியம்: அலுவலர்கள் வழங்காமல் கட்சியினரிடம் ஒப்படைத்ததாக மக்கள் புகார்வாக்காளர்களுக்கு வழங்கப்படாமல், செங்கல்பட்டு ஜோசப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பூத் சிலிப். படம்:
எம். முத்துகணேஷ்.
பூத் சிலிப் விநியோகிக்கும் அலுவலர்கள், சில இடங்களில் வீடுதோறும் வழங்காமல், கட்சியினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.
தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் சார்பில், வரிசை எண், பாகம் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்படுகிறது. இவை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் மூலம் வீடுதோறும் வழங்கப்படுகிறது. இதை பலரும் முறையாக வழங்காமல், அந்தந்த பகுதி கட்சியினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை. பூத் சிலிப் இல்லாமல் வாக்களிக்க வந்த பலரின் வரிசை எண், பாகம் எண் உள்ளிட்ட விவரங்கள் தெரியாததால், தாமதத்தை தவிர்க்க பூத் சிலிப் வாங்கி வருமாறு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு முன்பிருந்த கிராம நிர்வாக அலுவலக ஊழியர்களிடம் பூத் சிலிப் வாங்கி வந்து வாக்களித்தனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது: எந்த கட்சி சின்னத்தையும், வாக்காளர்களிடம் திணிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேர்தல் ஆணையம் வாக்காளர் சீட்டை வழங்குகிறது. இதை, வாக்காளர்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அரசியல் கட்சினரிடம் மொத்தமாக ஒப்படைத்து விடுகின்றனர். கட்சியினர், இந்த வாக்காளர் சீட்டை கொடுத்து வாக்கு சேகரிக்கின்றனர். பலர் குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்துகொண்டு வாக்காளர்களை வந்து பெற்றுச்செல்ல அறிவுறுத்துகின்றனர். தேர்தல் ஆணையம், இனி வரும் காலங்களில் முறையாக அனைத்து வீடுகளுக்கும் வாக்காளர் சீட்டை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment