காரைக்காலில் புதுமை: பெண் அலுவலர்கள் மட்டுமே பணியாற்றிய 'பிங்க்' வாக்குச்சாவடிகள்; ஆட்சியர் பாராட்டு
காரைக்கால் ஆயிரம் வைசியர் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பிங்க் வாக்குச் சாவடியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா
காரைக்கால் மாவட்டத்தில் பெண் அலுவலர்களை மட்டுமே கொண்டு இயங்கும் வகையில் 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று (ஏப்.06) நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 234 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றுள் 5 வாக்குச் சாவடிகள் ”பிங்க் வாக்குச் சாவடிகள்” என முழுமையும் பெண் அலுவலர்களால் மட்டுமே நிர்வகிக்கும் வகையில், புதுமையான முறையில் அமைக்கப்பட்டிருந்தன.
வரிச்சிக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி, செல்லூர் கால்நடை மருந்தகம், காரைக்கால் ஒப்பிலாமணியர் கோயில் தெரு அரசு தொடக்கப்பள்ளி, காரைக்கால் ஆயிரம் வைசியர் திருமண மண்டபம், நிரவி ஹுசைனியா அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காரைக்கால் ஆயிரம் வைசியர் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பிங்க் வாக்குச் சாவடியை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா இன்று மாலை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியது: இந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணிகள் முழுவதையும் பெண்களே மேற்கொள்வது அவர்களின் தன்னம்பிக்கை வளர்வதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். இது போன்ற முயற்சிகள் ஒரு ஊன்றுகோளாய் அமையும் என்றார். ஸ்வீப் அதிகாரி முனைவர் ஷெர்லி உடனிருந்தார்.
No comments:
Post a Comment