கரோனா பரவலைத் தடுக்க ரயில் பயணிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறை என்ன?- தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னை 13.04.2021
கரோனா பரவலைத் தடுக்க, ரயில் பயணிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வே நாடு முழுதும் உள்ள முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அத்துடன் சென்னை புறநகர்மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கரோனாவின் 2வது அலை கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் சவால்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் பின்வரும் நெறிமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறோம்:
பயணிகள் முகக்கவசம் அணிவது, சமூக விலகல் மற்றும் கை சுகாதாரம் போன்ற அடிப்படை கரோனாமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரயில் நிலையங்கள் மற்றும்ரயில்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும், தேவையற்ற பயணம் மற்றும் குழுக்களாக பயணம்செய்வது தவிர்க்க வேண்டும்.
கவுன்ட்டர்கள் மற்றும் பிளாட்பாரங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால்பயணத்தைத் தவிர்க்கவும். கரோனா சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவராகவோ, தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டவாரகவோ இருந்தால் பயணத்தைத் தவிர்க்கவும். கிருமிநாசினி திரவம், சோப்புபோன்ற பாதுகாப்பு உபகரணங்களையும், உணவு, நீர் போன்றவற்றையும் பயணத்தின்போது எடுத்துச் செல்லவும்.
ரயில் நிலையங்கள் மற்றும்ரயில்களில் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைத் தவிர, ஒவ்வொரு மாநில அரசும் இ-பதிவு, இ-பாஸ், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் நபர்களுக்கு கரோனா பாதுகாப்புநெறிமுறைகளை கட்டாயப்படுத்தியுள்ளது. அவை பயணத்தின்போது கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment