Thursday, April 8, 2021

கரோனாவுக்கும் தடுப்பூசிக்கும் கடும் போட்டி: வெல்லப் போவது யார்?


கரோனாவுக்கும் தடுப்பூசிக்கும் கடும் போட்டி: வெல்லப் போவது யார்?

ஒரு பக்கம் நாள்தோறும் புதிதாக கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தொட்டு வரும் நிலையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது அதன் இரண்டாவது அலை வீசி வருகிறது. ஆனால், ஜனவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் தற்போது வரை 8.70 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் பொதுமக்களுக்கு போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 8.70 கோடியைக் கடந்தது. இதையடுத்து தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை இந்தியா விஞ்சியுள்ளது.

இன்று காலை 7 மணி வரை 8,70,77,474 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. 81வது நாளான நேற்று 33,37,601 தடுப்பூசிகள் போடப்பட்டன. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, உலகில் வேகமாக தடுப்பூசிகள் போடும் நாடுகளில், நாளொன்றுக்கு சராசரியாக 30,93,861 தடுப்பூசிகள் என்ற அளவுடன் இந்தியா அமெரிக்காவை விஞ்சிவிட்டது.

தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தி வரும் அதே நிலையில், நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.70 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், சட்டீஸ்கர், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8,43,473 ஆக உள்ளது.

தற்போதைய நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும். இந்த நிலையை எட்ட ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 60 - 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ளன. வெறும் 3 மாநிலங்கள்தான் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

தடுப்பூசி போடும் திட்டம் மூன்றாவது கட்டத்தில் உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஒருவர் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி முழுமைபெறும்.

இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் சத்தீஸ்கர் மற்றும் குஜராத் மாநிலங்கள்தான் 20 சதவீதத்தை எட்டியுள்ளன. நம் தமிழகத்திலோ 10 சதவீதத்தைக் கூட எட்டவில்லை. அதாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், 10 சதவீதம் பேருக்குக்கூட தடுப்பூசி போடப்படவில்லை.

மறுபக்கம், முதல் அலையை விட இரண்டாம் கரோனா அலை மிக வேகமாக உள்ளது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், கடந்த ஆண்டு ஒரு நாள் உச்சபட்ச அளவைவிட இரண்டாவது அலையில் அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகிவிட்டன.

இந்த மாநிலங்களைப் போல அல்லாமல் தில்லி, மேற்கு வங்கம், தெலங்கானா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உச்சபட்ச பாதிப்பில் 30-40% தான் பதிவாகி வருகிறது.

எனவே, ஒரு பக்கம் தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும், மறுபக்கம் கரோனா பரவல், நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. எனவே, இவற்றில் எது வெற்றி பெறப் போகிறது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். கரோனா தொற்றிலிருந்து காக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முறையாகப் பின்பற்றினால், பரவல் குறையும், மறுபக்கம் தடுப்பூசி திட்டம் வெற்றிபெறும்.

கடந்த ஆண்டு, கரோனா தொற்றை வீழ்த்தும் ஆயுதம் இன்றி பேரிடருடன் போராடினோம். ஆனால் இந்த முறை தடுப்பூசி எனும் ஆயுதம் உள்ளது. எனவே, எச்சரிக்கையுடன் போராடினால் வெற்றி நிச்சயம்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024