மூன்று ஆண்டில் 2 பாடம் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே: உயர் நீதிமன்றம் உத்தரவு
மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே என உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் இளநிலை பட்டப்படிப்பில் 2 ஆண்டுகள் பி.எஸ்.சி. (கணிதம்) படித்தார். 3-வது ஆண்டில் பி.ஏ. (வரலாறு) படித்தார். இவருக்கு 1995-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (வரலாறு) பட்டம் வழங்கப் பட்டது. பின்னர் பாரதியார் பல்கலை.யில் பி.எட். முடித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றார். ஆனால் 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் முதல் 2 ஆண்டுகள் ஒரு பாடமும், இறுதி ஆண்டில் மற்றொரு பாடமும் படித்ததால் ஆசிரியர் பணி மறுக் கப்பட்டது.
அந்த மறுப்பை ரத்து செய்து தனக்கு ஆசிரியர் பணி கேட்டு, உயர் நீதிமன்ற கிளையில் பாபுமனுத் தாக்கல் செய்தார். அவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் தங்கள்உத்தரவில், மனுதாரர் மூன்று ஆண்டில் 2 பாடங்களை படித்துள்ளார். இது ஆசிரியர் பணிக்குத் தகுதியாக கருத முடியாது. தனி நீதிபதிஉத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment