Monday, September 20, 2021

'தகுதியான மாணவர்களை ஒதுக்கி முறைகேடாக சேர்க்கை நடத்துவதா?' : டில்லி ஐகோர்ட்


'தகுதியான மாணவர்களை ஒதுக்கி முறைகேடாக சேர்க்கை நடத்துவதா?' : டில்லி ஐகோர்ட்

புதுடில்லி-'மருத்துவம் உட்பட அனைத்து கல்லுாரிகளிலும் தகுதி அடிப்படையில் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களை ஒதுக்கிவிட்டு முறைகேடாக சேர்க்கை வழங்குவது சரியல்ல' என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாட்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இந்த விதிகளை மீறி மத்திய பிரதேசத்தின் போபால் எல்.என்., மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2016ல் ஐந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.அவர்களை கல்லுாரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியது. 

ஆனால் கல்லுாரி தரப்பில் அவர்கள் தொடர்ந்து படிக்கவும், தேர்வுகள் எழுதி அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.இதற்கிடையே மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்வதுடன், தங்கள் மருத்துவக் கல்வியை தொடர அனுமதி கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனு டில்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.இதையடுத்து மாணவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ஜஸ்மீத் சிங் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.முடிவில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

 நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் தகுதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் சேர கடினமாக உழைக்கின்றனர்; அப்படி இருக்கும்போது மருத்துவக் கல்லுாரி உட்பட எந்த கல்வி நிறுவனத்திலும் முறைகேடான சேர்க்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.கல்வி நிலையங்களில் குறுக்கு வழியில் சிலருக்கு வழங்கப்படும் அனுமதியால், அதிக தகுதி பெற்றவர்கள் கல்லுாரிகளில் சேர்க்கை கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த விவகாரத்தில் நான்கு கல்வி ஆண்டுகள் வீணானதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்; இதற்கு அவர்களே முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்.இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் கிடைத்ததும், அவர்கள் கல்லுாரியில் இருந்து வெளியேறி இருந்தால் நான்கு ஆண்டுகள் வீணாகி இருக்காது.ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு ஏதேனும் இடைக்கால உத்தரவு கிடைத்திருந்தால் ஐந்து பேரும் கல்வியை தொடர்ந்ததில் அர்த்தம் இருந்திருக்கும்.அதுபோல் எந்த அனுமதியும் கிடைக்காமல், அவர்கள் எடுத்த முடிவுகள் தற்போது அவர்களுக்கே எதிராக முடிந்துள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024