Friday, November 5, 2021

திரைவானில் மின்னும் ராமநாதபுரம் தந்த நட்சத்திரங்கள்





திரைவானில் மின்னும் ராமநாதபுரம் தந்த நட்சத்திரங்கள்

Added : நவ 04, 2021 22:02

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தை 'தண்ணி இல்லா காடு' என்றுதான் பல திரைப்பட வசனங்களில் கேட்டிருக்கிறோம். ஆனால் அந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதே சினிமாவில் நட்சத்திர நாயகர்களாக வென்றவர்கள் ஏராளம்.

கமல்

கமல் பிறந்தது ராமநாதபுரம் அரண்மனையில் தான். இவரது சொந்தஊர் பரமக்குடி. தந்தை சீனிவாசன் வழக்கறிஞர். பின் இவர்களின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளது. அங்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரிப்பில் வெளியான களத்துார் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவக்கி உலகநாயகனாக உயர்ந்து நிற்கிறார்.

சாருஹாசன்

கமலின் மூத்த அண்ணனான சாருஹாசன் தளபதி, வேதம் புதிது, தற்போது வெளியான தாதா 87என்ற படங்கள் வரை அசத்துகிறார்.வில்லனாகவும் கலக்கியவர்.

சந்திரஹாசன்

கமல் அண்ணன் சந்திரஹாசன். படங்களில் அதிகம் நடிக்கவில்லை. அதே நேரம் 'அப்பத்தாவ ஆட்டைய போட்டாங்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்துள்ளார்.அவர் மறைவுக்கு பின் வெளிவந்த படம் இது.

ராஜ்கிரண்

கீழக்கரை முஸ்லிம். ஆனால், அரண்மனைக்கிளி படத்தில் 'அம்மன் கோவில் கும்பம் இங்கே' பாடலில் கிராமத்து அம்மன் கோயில் சடங்குகளை முறையாக செய்வார். வினியோகஸ்தராக வாழ்க்கையை துவங்கி தயாரிப்பாளரானார். பின்ராமராஜன் ஹீரோவாக நடித்த ராசாவே உன்னை நம்பி என்ற படத்தில் 'சீதைக்கொரு ராவணன் தான்' என்ற பாடலில் முதலில் நடித்தார். என்ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாகி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விக்ரம்

சொந்த ஊர் பரமக்குடி. சிறுவயதிலே சென்னையில் குடியேறிவிட்டார். தந்துவிட்டேன் என்னை, மீரா, புதிய மன்னர்கள் படங்களில் நடித்து கதாநாயகன் ஆக போராடினார். சேது படத்தின் மூலம் புகழ்பெற்றார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 6 முறை பிலிம்பேர் விருதுகளை குவித்தவர்.

கே.எஸ்.அதியமான்

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியை அடுத்த காமன்கோட்டை இவரது சொந்த ஊர். 'தொட்டாச்சிணுங்கி' படம் மூலம் இயக்குனரானார். ஹிந்திதிரையுலகிலும் வேகமாக கால் பதித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்

இவர் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம். சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை, நான் சிகப்புமனிதன், நீதியின் மறுபக்கம், சுக்ரன் என பல படங்களை தந்தார்.

செந்தில்

முதுகுளத்துார் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் பிறந்தவர். பொய்சாட்சி, துாறல் நின்னு போச்சு என நடிக்க பாக்கியராஜ் வாய்ப்பளித்தார். கரகாட்டக்காரன்படத்தில் இவர் காமெடி உச்சம் தொட்டது.

லதா

1953ல் ராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதிமற்றும் லீலாராணிக்கு பிறந்தவர். 1973ல் எம்.ஜி.ஆர்., நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆருடன் இவர் நடித்த உரிமைக்குரல் படம்சக்கை போடு போட்டது. இவரது சகோதரர் ராஜ்குமார் சேதுபதி சூலம், உச்சகட்டம் உள்ளிட்ட படங்கள் நடித்தவர். கமல் நடித்த பாபநாசம் படத்தின் இணை தயாரிப்பாளர்.

காஜா ஷெரீப்

கீழக்கரையில் பிறந்தவர். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில்அறிமுகமாகி மகேந்திரனின் உதிரிபூக்கள், பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். 1980களில் அனைத்து முன்னணிநடிகர்களுடன், இயக்குனர்களுடன் பணிபுரிந்தவர். அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்தார்.

ஆர்.சி.சக்தி

ரஜினியை வைத்து தர்மயுத்தம், கமலைவைத்து மனிதரில் இத்தனை நிறங்களா, சிறை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். கமலின் நெருங்கிய நண்பர். பரமக்குடி அருகே புழுதிக்குளம் கிராமத்தைசேர்ந்தவர். உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.

வேலா ராமமூர்த்தி

பெருநாழியை சேர்ந்தவர். எழுத்தாளர். அதன்பிறகே நடிகர். வரலாற்று நிகழ்வுகளை கண்முன் வடித்து இவர் எழுதிய புதினங்கள்,கட்டுரைகள் பெயர் பெற்றவை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த குற்றப்பரம்பரைசட்டம் குறித்து விளக்கமான புத்தகத்தை எழுதியவர். மதயானைக்கூட்டம், புலிக்குத்திபாண்டி,கொம்பன், கிடாரி என தொடர்ந்து வில்லனாக, குணச்சித்திரநடிகராக நடித்து வருகிறார்.

நட்ராஜ்

சொந்த ஊர் பரமக்குடி. சதுரங்க வேட்டை படம் மூலம் புகழ் பெற்றவர். அதற்கு முன் மிளகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றும் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிப்பதற்கு முன் பல புகழ்பெற்ற ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரித்தீஷ்

சொந்த ஊர் ராமநாதபுரம். சின்னி ஜெயந்த் இயக்கிய கானல் நீர் படத்தில் அறிமுகமானார். 2008 ல் நாயகன்படத்தில் நடித்தார். பின் பெண் சிங்கம், எல்.கே.ஜி., படங்களில் நாயகனாக நடித்தார்.2009ல் தி.மு.க.,வில் போட்டியிட்டு ராமநாதபுரம் தொகுதி எம்.பி.,யானார். இவரது மறைவுக்கு பின்குடும்பத்தினர் சென்னையில் வசிக்கின்றனர்.

ஹலோ கந்தசாமி

பெருநாழியை சேர்ந்த இவர் தற்போது அருப்புகோட்டை அருகே வசிக்கிறார்.சாட்டை, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் கலக்கியவர். ரஜினி முருகன்படத்தில் இவரின் ஜோதிடர் காமெடியை மறக்க முடியாது. இவர்களைத் தவிர குறும்பட இயக்குனர் சக்திமோகன், வாலி படத்தில் நடித்தவரும், சின்னத்திரை நடிகையுமான தேவிப்பிரியா, ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையை சேர்ந்த விருமாண்டி பட வில்லன் சண்முக ராஜேஸ்வரன், மண்டபம் ஆர்.கே.சுரேஷ், சின்னத்திரை நடிகைகள் ரஞ்சனா, திவ்யா, தமிழ், ஹேமந்த்குமார், இளங்கோ, சண்டை பயிற்சியாளர் சகோதரர்கள் அன்பு, அறிவு,சுப்பிரமணி, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, இயக்குனர்கள் ராஜசேகர்,அண்ணாதுரை, விக்ரம் சுகுமாறன், அரு.அபிராம் என ராமநாதபுரம் மண்ணின் பெருமையை திரையுலகில் நிரூபித்து வருபவர்கள் பட்டியல் தொடர்ந்து நீள்கிறது

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024