தமிழ்நாடு
'பாஸ்டேக்' இருந்தும் நெரிசல்: சுங்கச் சாவடிகளில் அணிவகுப்பு
Added : நவ 03, 2021 21:01
சென்னை:'பாஸ்டேக்' நடைமுறை இருந்தும் முன்னேற்பாடுகள் இல்லாததால், சுங்கச் சாவடிகளில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்களின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 48 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன. சுங்கச் சாவடிகளில் ரொக்க கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருப்பதால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜன., முதல் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் 'பாஸ்டேக்' நடைமுறை நாடு முழுதும் அமலுக்கு வந்தது.
இந்த பாஸ்டேக் அட்டைகள், வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னையில் அலுவல் காரணமாக வசிக்கும் பலரும், சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், அண்ணாசாலை, ஜி.என்.டி., சாலை, ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாஸ்டேக் அட்டைகள் இருந்தும், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னை பைபாஸ் சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு; சென்னை - கோல்கட்டா சாலையில் உள்ள நல்லுார்; சென்னை - பெங்களூரு சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதுார்; சென்னை - திருச்சி சாலையில் உள்ள பரனுார் சுங்கச் சாவடிகளில், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போதிய பாஸ்டேக் கட்டண வசூலிப்பு கருவிகள், ஊழியர்கள் இல்லாதது இதற்கு காரணம். இதனால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல், பலரும் அவதிக்குள்ளாகினர்.
குறித்த நேரத்திற்கு மேல் காத்திருந்தால், கட்டணம் வசூலிக்க கூடாது என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்காக, சுங்க கட்டணம் செலுத்தும் கவுன்டரில் இருந்து குறிப்பிட்ட துாரம் வரை, மஞ்சள் கோடு வரைய வேண்டும். இந்த கோட்டிற்கு வெளியே காத்திருக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. ஆனால், மஞ்சள் கோடு வரைவதற்கு சுங்கச் சாவடி கட்டண வசூலிப்பு நிறுவனங்கள், ஆர்வம் காட்டாமல் உள்ளன.
இதை, ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இது வாகன ஓட்டிகள், பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment