Sunday, September 18, 2022

நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை மாணவி ஆய்வு செய்ய அனுமதி - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை மாணவி ஆய்வு செய்ய அனுமதி - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: நீட் தேர்வு ஓஎம்ஆர் சீட்டை நேரில்ஆய்வு செய்ய, மதுரை மாணவிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியாக பதில் எழுதினேன். நீட் தேர்வு மாணவர்களின் ஓஎம்ஆர் சீட் மற்றும் கேள்விக்கான பதில்களை நீட் தேர்வு முகமை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது. அதை பார்த்தபோது, எனக்கு மொத்த மதிப்பெண் 720-க்கு 564 மதிப்பெண் கிடைத்திருந்தது.

இந்நிலையில் செப். 7-ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், நான் நீட் தேர்வில் 114 மதிப்பெண் மட்டும் பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் எனது ஓஎம்ஆர் சீட்டை ஆய்வு செய்ய அனுமதி வழங்குவதுடன், தவறான மதிப்பெண் சான்றிதழை ரத்து செய்யவேண்டும். அத்துடன் கூடுதல் மதிப்பெண் அடிப்படையில் புதிய மதிப்பெண் பட்டியல் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘நீட் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே, மருத்துவக் கல்லூரியில் சேர முடியும். அந்த அடிப்படையில் மாணவியின் மனு ஏற்கப்படுகிறது. மாணவி தனது ஓஎம்ஆர் சீட்டை நேரில் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024