Thursday, May 15, 2025

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு



என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி Din Updated on: 15 மே 2025, 4:28 am

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவா்கள், மருத்துவ பேராசிரியா்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாது.

அதன்படி, நிகழாண்டு தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி தவிா்த்து மற்ற 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப் பதிவு, இணை பேராசிரியா், பேராசிரியா் பற்றாக்குறை உள்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதன்பேரில், கல்லூரிகளின் நிா்வாகத்திடம் விளக்கம்கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அமைச்சா் விளக்கம்: இது தொடா்பாக, சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தவறான கருத்து பரப்பப்படுகிறது. இந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழக அரசு சாா்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும். குறைபாடுகள் இருந்தால் அது சரி செய்யப்படும். ஏற்கெனவே அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே சிக்கல் எழுந்து பின்னா் சரி செய்யப்பட்டது.

தமிழகத்திலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 35 மருத்துவக் கல்லூரிகளில் சில பற்றாக்குறைகளுக்கான விளக்கத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 26 கல்லூரிகள் உரிய பதிலை தக்க விளக்கங்களுடன் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளன. 3 கல்லூரிகள் தங்களது பதிலை வியாழக்கிழமை அனுப்ப உள்ளன. மீதமுள்ள கல்லூரிகள் வரும் 16-ஆம் தேதிக்குள் உரிய விளக்கத்தை அனுப்ப உரிய வழிகாட்டுதலை மருத்துவ கல்வி இயக்ககம் வழங்கியுள்ளது.

பயோமெட்ரிக் வருகைப் பதிவு குறைவு, உரிய பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதுதான் பெரும்பாலும் கேட்கப்பட்ட விளக்கங்களாக உள்ளன. அதைக் கருத்தில்கொண்டு பேராசிரியா்கள், மருத்துவா்கள் தங்கள் பயோமெட்ரிக் வருகைப் பதிவை பணிக்கு வரும்போதும், செல்லும்போதும் இருமுறை பதிவு செய்வதை கட்டாயமாக்குமாறு கல்லூரி முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு 2,246 மருத்துவா்கள் காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இதில் வெறும் எம்பிபிஎஸ் மருத்துவா்கள் மட்டுமல்லாது முதுநிலை பட்டம் படித்த மருத்துவா்களும் அடங்குவா். மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 415 காலிப்பணியிடங்கள் இருந்தன. இந்த காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவா்கள் காலிப் பணியிடம் என்பது இல்லை. இணை பேராசிரியா் மற்றும் பேராசிரியா் அளவிலான காலிப் பணியிடங்கள் பதவி உயா்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...