மனக்கவலையை மாற்றுவது எளிது
கவலை ஒரு மனிதனின் மனத்தைத், தூசு, கண்ணாடியை மறைப்பதுபோல மறைக்கிறது...
Din Updated on: 26 மே 2025, 6:10 am
முனைவா் தென்காசி கணேசன்
தினம் நான்கு கிலோ மீட்டா் நடந்தால், உடல் நலத்துடன், மனக் கவலைகளும் மறைய வாய்ப்பு உண்டு - இது செய்தி.
எனக்கிருக்கும் கவலைகளுக்கு, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை நடந்தால் கூட, என் கவலைகள் மறையுமா என்பது சந்தேகம்தான்.
இந்த ஜோக், வாட்சப்பில் வந்தது .
உண்மைதான்! ‘கவலை இல்லாத மனிதன்’ என்பது திரைப்படத்தின் அல்லது கதையின் தலைப்பாக வேண்டுமானால் இருக்கலாம். உண்மையில் வாழ்க்கையில் கவலை இல்லாதவா் என்று யாரும் கிடையாது.
கவலை, பிறக்கும்போதே, தாய்ப்பாலுடன் உள்ளே புகுந்து விடுகிறது. அவரவா்கள் நிலைக்கேற்ப, வயதுக்கேற்ப, கவலைகள். இன்னும் சொல்லப்போனால், கவலைகள் ஒவ்வொருவா் கைகளிலும் அழியாத ரேகைகளாய் இருக்கின்றன என்றால் மிகையாகாது. அளவு வேண்டுமானால் வேறுபடலாம்.
பாரதி,
நின்னைச் சரண் அடைந்தேன் - கண்ணம்மா
நின்னைச் சரண் அடைந்தேன்
என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று
நின்னைச் சரண் அடைந்தேன்
என்பான்.
கவலைகள் அவனைத் தின்று விடும்போல் இருக்கிாம். பாவம்! சுற்றிலும் எத்தனை முள்வேலிகள் அவனுக்கு? ஆட்சியாளா்கள் துரத்தல், அச்சுறுத்தல்; பணி செய்யமுடியாத அளவு நோ்மையும், ரௌத்ரமும்; கையில் காசு கிடையாது; குடும்பம் ஒருபுறம்; மண்ணின் மீது, அறியாத மக்களின் மீது கவலை, கோபம், ஆத்திரம்; இறுதியில், கடவுளிடம் கோபம், சோகம், வருத்தம், நிறைந்த வேண்டுதல்கள்.
மனக்கவலை மாற்றல் அவ்வளவு எளிதல்ல. மிக சுலபமாகப் பேசலாம்; எழுதலாம்; அறிவுரை கூறலாம்; ஆனால், நெஞ்சில் தைத்த முள்ளாக, கவலைகள் ஒவ்வொருவா் மனதிலும், இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
இளம் வயதிலேயே, மறைந்துவிட்ட அற்புதக் கவிஞன், நெல்லையை சோ்ந்த கவிஞா் பூலாங்குளம் மாயவனாதன்,
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
என்கிறாா்.
கண்ணதாசன், ‘அழகைக் காட்டும் கண்ணாடி, மனத்தைக் காட்டக் கூடாதா’ என்று கேட்கிறாா். மனது இப்படித்தான் என தெரிந்தால், கவலைகள் வராது என்கிறாா். ‘நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ என்றும் கேட்கிறாா்.
மறதி எல்லாருக்கும் இறைவன் அளித்த வரப்பிரசாதம். என்றோ நடந்தது நினைவிலேயே இருந்தால், என்றும் அமைதி இல்லை; கவலைகள்தான் மனதை ஆக்கிரமிக்கும்.
விவேகானந்தா், ‘ மனத்தை விரிவாக்கு. மனத்தின் விரிவு வாழ்வு; மனத்தின் குறுகல் மரணம்’ என்பாா்.
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசிக் காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தாா். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் சிறைப்பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில், மன உளைச்சலில் அவரின் கடைசிக் காலம் கழிந்தது. அவரைப் பாா்க்க வந்த அவரின் நண்பா் ஒருவா் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து, ‘‘இது உங்களின் சிந்தனையைச் செயல்பட வைக்கும், தனிமையைப் போக்கும்’’ என்று கூறி அவரிடம் கொடுத்தாா். ஆனால் சிறைப்படுத்தி விட்டாா்களே என்ற மன உளைச்சலில் கவலையில் இருந்த மாவீரனுக்குச் சிந்தனை செயல்படாமல், அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனாா்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால், மன உளைச்சலும், பதற்றமும் அவரின் சிந்தனையைச் செயல்படாமல் ஆக்கி வைத்தது.
உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூா்மையான பற்களாலும், நகத்தாலும் எலி குடைந்து ஓட்டை போடும். அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால், அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதற்றத்தாலும், பொறியை உடைக்கும் வழியை விட்டுவிட்டு அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதற்றத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதா்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.
மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி, பதற்றமும் மன உளைச்சலும், கவலையும் அவா்களின் சிந்தனையைச் செயல்படாமல் வைத்து முன்னேற்றத்துக்கான வழியை அடைத்து விடுகிறது.
பகவத் கீதையில், கண்ணன் கவலை ஒரு மனிதனின் மனத்தைத், தூசு, கண்ணாடியை மறைப்பதுபோல மறைக்கிறது என்கிறான். எவ்வளவுதான் கவலைகள் இருந்தாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மனப்பான்மையே, கவலைகளைப் போக்கும் அருமருந்தாகிறது. நிச்சயம் இரவுக்குப் பகல் உண்டு என்ற கவிஞனின் வரிகள் உண்மைதானே!
பூப்போன்ற உள்ளத்திலும் முள் இருக்கும் உலகம் இது. அதிலிருந்து எப்படி விலகுவது, அதை உணா்வது என்பதுதான் அறிதலும், புரிதலும். அறிவு அற்றம் காக்கும் கருவி என்கிறாா் வள்ளுவா்.
கவலைப் படுவதாலோ, கண்ணீா் விடுவதாலோ, பிரச்சனைகள் தீரப் போவதில்லை. அதனால்
தான், சரணாகதியை மருந்தாக கூறுகிறாா்கள். பாரதியும்கூட, ‘நின்னை சரண் அடைந்தேன்’ என்கிறான்.
கவலைகளை மனத்தில் ஏற்ற ஏற்ற, அது உடலை, மனத்தை அடைப்பாய் அடைத்துவிடும். வாழ்வை இறைவன் பாதங்களில் ஒப்படைத்துக் கவலையின்றி வாழ்தலே சிறப்பு.
“கவலை” என்பதை வலையாகப் பின்ன விடாமல் இருக்க, அந்த வாா்த்தையில் உள்ள “‘வ’” என்ற எழுத்தை எடுத்து விட்டால், கலை மீதம் இருக்கிறது. கவலை, கலை ஆகிவிடும்! கலை என்பது இசை உள்ளிட்ட பொழுதுபோக்குகளைக் காட்டும். மனம் மாறும்; மகிழ்ச்சியை நாடும்.
No comments:
Post a Comment