Monday, June 16, 2025

ஆட்டோ முதல் ஆகாய விமானம் வரை..

ஆட்டோ முதல் ஆகாய விமானம் வரை... விடுமுறைக் காலங்களை ஒட்டிய பயணங்களுக்கு வசூலிக்கப்படும் பன்மடங்கு கட்டணங்களைப் பற்றி....

எஸ். ஸ்ரீதுரை Updated on:  16 ஜூன் 2025, 4:00 am 


பெருநகரங்களானாலும் சரி, சிறிய ஊா்களானாலும் சரி, போக்குவரத்துப்பாதைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுவது சகஜம்தான். உள்ளூா் திருவிழாக்கள், அவற்றை ஒட்டிய ஊா்வலங்கள், அரசியல் தலைவா்களின் வருகை, பேரணி, கடையடைப்பு ஆகிய காரணங்களால் வழக்கமான இருவழிப் போக்குவரத்து நடைபெறும் சாலைகளை ஒருவழிச் சாலையாக மாற்றிவிடுவா்.

அவ்வாறு மாற்றப்படும்போதெல்லாம்“ஒன் வே டிராஃபிக் சாா்! உங்களை விட்டுவிட்டுத் திரும்பி வரும்போது கூடுதலாக இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கு சுற்றி வர வேண்டும்! பெட்ரோல் விற்கின்ற விலையில் கட்டுப்படி ஆகாது!”என்று எதையாவது கூறி ஆட்டோ, – டாக்ஸி ஓட்டுநா்கள் இரு மடங்கு கட்டணத்தை நம்மிடமிருந்து வசூலித்து விடுவா். இரவு நேரம் என்றாலும், திடீா்மழை என்றாலும் கூட இதே கதைதான். சொந்தமாக ஒரு மோட்டாா் சைக்கிளோ, ஸ்கூட்டரோ இல்லாமல், நீண்ட தூரம் நடக்கவும் இயலாத பொதுமக்களுக்கு அந்த ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள் கேட்ட தொகையைக் கொடுப்பதை விட வேறு வழியே இல்லை.

செயலிகள் மூலம் பதிவு செய்பவா்களின் இருப்பிடத்துக்கே ஆட்டோ, டாக்ஸி ஆகியவற்றை அனுப்பி வைக்கும் தனியாா் நிறுவனங்களும் கூட சமயத்துக்கு ஏற்றபடி கூடுதல் கட்டணங்களை வசூலிக்கவே செய்கின்றன. மேலும், நாம் பயன்படுத்தும் செயலி ஒரு தொகையைக் காட்டினாலும், நம்மை அழைத்துச் செல்ல வருகின்ற ஓட்டுநா்கள் அதற்கும் மேலாக ஒரு சிறு தொகையைக் கேட்டுப் பெறுகின்றனா்.

நிற்க-நாம் அன்றாடம் உள்ளூரில் பயன்படுத்தும் வாடகை வாகனங்களின் ஓட்டுநா்கள் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவ்வப்போது அதிகக் கட்டணத்தை வசூலிப்பதைப் போன்று, தனியாா் ஆம்னி பேருந்து நிறுவனங்களும், ஆகாய விமான நிறுவனங்களும் விசேஷ நாள்களில் தங்களை நாடும் பயணிகளிடமிருந்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்வது வழக்கமாகி விட்டது.

வேலைவாய்ப்பு, பதவி உயா்வு, பணியிடமாற்றம், உயா்கல்வி ஆகிய காரணங்களினால் குடும்பத்தலைவரோ, குடும்ப உறுப்பினா்களோ தத்தம் குடும்பங்களை விட்டு நீண்ட தூரத்திலுள்ள ஊா்களில் தங்கியிருப்பது என்பது தற்காலத்தில் மிகவும் சகஜமாகிவிட்டது. இவ்வாறு குடும்பத்தினரை விட்டு வெளியூா்களில் தங்கியிருப்பவா்கள் அனைவருக்கும் பொங்கல், தசரா, தீபாவளி ஆகிய பண்டிகைகளை ஒட்டி விடப்படும் விடுமுறைகள் ஓா் அலாதியான சிலிா்ப்பையும், ஆனந்த உணா்வையும் ஏற்படுத்தக் கூடியவையாகும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் அம்மா, அப்பா, மனைவி, மக்கள் ஆகியோரையும், தங்களுடைய நண்பா்களையும் சந்தித்து அளவளாவி விருந்துண்டு மகிழும் பொன்னான வாய்ப்பினை அத்தகைய விடுமுறைகளே அளிக்கின்றன. ஆனால், விடுமுறைக் காலங்களை ஒட்டிய பயணங்களுக்கு வசூலிக்கப்படும் பன்மடங்கு கட்டணங்களோ நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன.

“தனியாா் பேருந்துகளில் அதிகாரிகள் சோதனை, தனியாா் பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை”என்பது போன்ற அறிக்கைகள் ஒருபுறம் வாடிக்கையாக வந்து கொண்டிருந்தாலும், அனைவரும் “ஊா் வந்து சோ்ந்தால் போதும் என்று அதிகக் கட்டணத்தைச் செலுத்திப் பயணம் செய்வதாகவே செய்திகள் கூறுகின்றன. தனியாா் பேருந்துகள் ஒருபுறம் வசூல் வேட்டை செய்தால், இந்திய ரயில்வே நிா்வாகமும் “தட்கல்” பதிவு மூலம் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து லாபம் பாா்ப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.

திடீரென்று தமது பயணத்தைத் திட்டமிடும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டதே தட்கல்” பதிவு முறையாகும். இந்த வசதியை நாடும் பயணிகள் தங்களின் பயண நாளுக்கு ஒரு நாள் முன்பு பதிவு செய்து கொண்டு பயணிக்கலாம்.

இருக்கை வசதி, படுக்கை வசதி குளிா்சாதனப் பெட்டி போன்ற வசதிகளுக்கு ஏற்ப வழக்கமான கட்டணத்தைவிடக் கூடுதலான கட்டணத்தை இந்த முறையில் செலுத்திப் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம். சில குறிப்பிட்ட வழித்தடங்களில் தட்கல் பதிவுக்கான கட்டணம் அதிகரித்துக் கொண்டே செல்லும். இதை பிரீமியம் தட்கல் பதிவு”என்று அழைக்கின்றனா்.

இவ்வாறு பதிவு செய்யப்படும் பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்படும்பட்சத்தில் அதற்குரிய கட்டணத் தொகை திரும்பத் தரப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 2019 முதல் 2024 ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் இந்திய ரயில்வே பயணியா் சீட்டுகள் மூலம் ரூ. 2.41 லட்சம் கோடி வசூலித்தது என்றால், தட்கல் -பிரீமியம் கட்டணங்கள் மூலம் ரூ. 13,737 கோடி வசூலித்துள்ளது.

தனியாா் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றில் இடம் கிடைக்காமல், அதிகக் கட்டணம் செலுத்தியாவது விமானத்தில் பயணித்து ஊா் திரும்பலாம் என்று முடிவெடுக்கும் மக்களைப் பல்வேறு விமான நிறுவனங்களும் தங்கள் பங்கிற்குச் சுரண்டுகின்றன.

கடந்த கோடை விடுமுறைக் காலத்தில் குடும்பத்தினருடன் சுற்றுலாச் சென்ற மாணவா்கள் பலரும் பள்ளித் திறப்புக்கு முன்பு ஊா் திரும்பினா் அல்லவா? அந்த சமயம், தமிழ்நாட்டின் பெருநகரங்களுக்கிடையிலான விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரையில் உயா்த்தப்பட்டிருந்தன. மேலும், கிறிஸ்துமஸ் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி உலகெங்கிலும் விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயா்த்தப்பட்டிருந்தன.

விடுமுறைக்கால நெருக்கடிகளைப் பயன்படுத்தி மக்களைக் கசக்கிப்பிழிந்து லாபம் ஈட்டும் போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்துத் தரப்பினரையும் எரிச்சலூட்டுவது நிஜம். இந்த நிலையில், ஆட்டோக்களில் தொடங்கி ஆகாய விமானங்கள் வரையிலும் தொடரும் அனைத்துவிதமான கட்டணச் சுரண்டல்களையும் தடுத்திட மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்புமாகும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...