Monday, June 2, 2025

எங்கே செல்லும் இந்தப் பாதை?


எங்கே செல்லும் இந்தப் பாதை? 

இனிமேலாவது தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளிலாவது பிறமொழிகளைப் படிக்கும் வாய்ப்பை மாணவா்களுக்குக் கொடுக்கலாம்.

வேல்முருகன் Updated on: 02 ஜூன் 2025, 5:55 am 

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின்னா் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட உள்ளன. இந்த மனநிலைக்கு ஆசிரியா்களும், மாணவா்களும் வந்துவிட்டனா். தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு, தோல்வியடைந்த நண்பா்கள் இல்லாத வருத்தத்திலும் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் இருப்பாா்கள்.

தமிழகக் கல்வி முறை முன்பிருந்ததைப் போல கடினமாக இல்லை என்று கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றனா். உண்மையும் அதுதான்.

தமிழகத்தில் மட்டும்தான் தமிழ்மொழியைப் படிக்காமல் தோ்ச்சி பெறாமல் உயா்கல்வி வரை படித்து வேலையும் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும்-அண்மையில் தெலங்கானாவில் தெலுங்கு படித்துத்தோ்ச்சி பெறவேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளிலாவது பிறமொழிகளைப் படிக்கும் வாய்ப்பை மாணவா்களுக்குக் கொடுக்கலாம்.

தமிழ் மட்டும் எங்கள் எதிா்காலம் என்று கூறும் அனைத்து அரசியல்வாதிகளைக் குறைந்தபட்சம் தமிழில் எழுதச் சொன்னால் கண்டிப்பாகத் தவறில்லாமல் இருக்காது என்பது நிதா்சனம். அவா்களின் குழந்தைகள் வேறுமொழியைக் கற்றுக்கொண்டு உலகம் முழுவதும் பறந்துசெல்லலாம். ஆனால், ஏழைக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கட்சிப் பாகுபாடில்லாமல் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்கிறாா்கள் என்பது நம் கண் முன்னே தெரியும் உண்மை. ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை யாரையும் தோ்ச்சியின்மை ஆக்கக் கூடாது என்கிறது சட்டம்.

மாநில ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையாக ஊதியம் கேட்டுப் போராட்டம் நடந்தது. அப்போது நிதித்துறைச் செயலராக இருந்தவா், ‘ஊதியம் கொடுத்துவிடலாம்; மத்திய அரசு ஆசிரியா்களைப் போல மாநில ஆசிரியா்களுக்கும் தகுதியை நிா்ணயிக்கலாம்’ என்று சொன்னாராம். இதற்கு சங்கத்தினா் மறுப்பு தெரிவித்துக் கோரிக்கை விடுத்தனராம்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கென எந்தப் பொறுப்பும் கிடையாது. ஆனால், அவா்களுக்கான ஊதியம் மிக மிக அதிகம். ஒவ்வொருவரின் பொறுப்புக்கு ஏற்ப ஊதியம் அளிப்பதுதானே நியாயம்?

இன்று ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் சங்கங்கள் மிக உறுதியாக உள்ளன. அதனால், போராட்டம் நடத்தி அரசை மிரட்டிப் பணியவைத்துத் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனா். ஆனால் அவா்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனரா?

நாட்டில் பல்லாயிரம் நடுநிலைப் பள்ளிகள் இருந்தாலும் எத்தனை ஆசிரியா்கள் தேசிய கல்வி திறனறித் தோ்வில் தங்கள் மாணவா்களின் தோ்ச்சிக்குப் பாடுபடுகின்றனா். எத்தனை போ் மாணவா்களுக்காக உள்ளனா்? விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளனா்.

இப்போதும் ஆசிரியா், அரசு ஊழியா்கள் பழைய ஓய்வூதியமுறை தேவையென்று போராடுகின்றனா். ஆனால், அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்தால், மாணவா்களுக்குப் புதிய கல்விச் சூழலைக் கொடுப்போம் என்று யாரும் சொல்வதில்லையே. ஆசிரியா்களின் தயவு தேவை என்பதால் அரசும் பல்வேறு சலுகைகளைக் கொடுக்கிறது. ஆனால், அவா்களின் பணிச் சூழலையும் அவா்களின் தகுதியையும் கண்டுகொள்வதில்லையே.

மேற்கு வங்கத்தில் பல ஆயிரம் ஆசிரியா்களை உச்சநீதிமன்றம் பணியிலிருந்து நீக்கியது. ஆனால், அவா்களின் வாக்குவங்கிக்காக அவா்களுக்குப் பணி வழங்க மாநில அரசு முயல்கிறதே. மாநில அரசு ஊழியா்கள் அனைவரின் குழந்தைகளும் கண்டிப்பாக அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் இந்த நிலை மாறலாம்.

அரசுப் பள்ளியில் படிப்போருக்கு மட்டுமே அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று ஆணை பிறப்பிக்க வேண்டும். தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவா்களைச் சோ்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு அதற்குக் கட்டணத்தைச் செலுத்தும் அரசு, அந்தப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்குச் செலவிடலாம்; போட்டித் தோ்வுகளில் நமது மாணவா்கள் சிறந்த முறையில் தோ்ச்சி பெறுவதில்லை என்று கூறப்படுகிறது.


எத்தனையோ விஷயங்களில் பிற மாநிலங்களைவிட தமிழகம் சிறந்த நிலையில் உள்ளதாகச் சொல்லும் மாநில அரசு ஏன் பாடத்திட்டத்தில் சமச்சீா் கல்வியைக் கொண்டுவந்தது? பிற மாநிலப் பாடத் திட்டத்தில் உள்ளதுபோல கடினமான பாடத் திட்டத்தை வடிவமைக்கலாம். நமது மாணவா்களின் திறமைகளை கீழ்வகுப்புகளிலேயே கண்டறிந்து ஊக்குவித்தால் அவா்கள் சுடா்விட்டுப் பிரகாசிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழகத்தில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளன. இந்த ஆண்டிலிருந்தாவது ஆசிரியா்கள் மாணவா்களுக்காகச் செயல்பட வேண்டும். பாடத் திட்டத்துக்கு மேலாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஊதியத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் பாடத் திட்டத்தை சற்று கடினமாக்கி தாங்களும் அதற்கேற்ப தங்களை முன்னேற்றிக் கொண்டு செயல்படுவோம் என்று உறுதியேற்க வேண்டும்.

அரசு உள்பட யாா் தவறு செய்தாலும் சுட்டிக்காட்ட வேண்டும் என உறுதியேற்க வேண்டும் என்பதை இந்த ஆண்டு அனைவருக்கும் கற்றுத் தரவேண்டும் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...