Friday, August 1, 2025

அறிதிறன்பேசிக்கு அடிமை ஆகலாமா?



அறிதிறன்பேசிக்கு அடிமை ஆகலாமா? உங்களைவிட அதிகமாக மடிக்கணினி, அறிதிறன்பேசி இவற்றில் அதிக நேரம் செலவிடுகிறாரா உங்கள் கணவர்...பெண்களே உஷார்!

தினமணி செய்திச் சேவை Published on: 31 ஜூலை 2025, 4:21 am

மருத்துவர் பாலசாண்டில்யன்

உங்களைவிட அதிகமாக மடிக்கணினி, அறிதிறன்பேசி இவற்றில் அதிக நேரம் செலவிடுகிறாரா உங்கள் கணவர்...பெண்களே உஷார்!

இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின் கவனத்தைத் திருப்புவது சற்று சிரமம்தான். வீட்டில், வெளியில், உணவகங்களில், தொலைக்காட்சி பார்க்கும்போது, நாம் பேசும்போது, மணியோசை கேட்டு கைப்பேசியை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு குறுஞ்செய்தியை மட்டும் பார்த்துவிட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாரா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், கைப்பேசியைக் கையில் எடுத்தவுடன் அடுத்தடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

உள்ளங்கை அளவில் ஓர் எதிரி என்றால் அது அறிதிறன்பேசிதான். நம்மை அவர் கவனிக்கவில்லை என்பதைவிட, நம்மை அவர் ஒதுக்கிவைத்து விட்டார் என்ற உணர்வு சில நேரம் தலைதூக்குகிறது.

சில நேரம் சில பெண்கள் கேட்கிறார்கள்? "நமக்கு திருமணமாகி சிறுகாலங்கள்தான் ஆகி உள்ளன. இப்போதுதான் நமக்கு ஒரு குழந்தை பிறந்து உள்ளது. எப்படி சிரிக்கிறது பாருங்கள்? அப்படி என்னதான் இந்த போனில் உள்ளது?' ஆரம்பிக்கிறது ஓர் உரையாடல்.

பட்டென்று வருகிறது பதில்; "இவ்வளவு நேரம் எனது பாஸ் உயிர் எடுத்தான். இப்போதுதான் உலகத்தில் என்ன நடக்கிறது; எனது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்; செய்கிறார்கள் என்றுகூடப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா? நேற்று நமது திருமண நாள் புகைப்படத்தை முகநூலில் போட்டிருந்தேன். யார் என்ன சொல்லி வாழ்த்தி இருக்கிறார்கள் எனப் பார்க்கிறேன்... உனக்கு அதில் விருப்பம் இல்லையா?'

சில கணவர்கள் காதில் இப்படி விழுகிறது; "நீங்கள் பேசாமல் என்னைத் திருமணம் செய்து கொண்டதற்குப் பதில், இந்த போனை கட்டிக்கொண்டு இருக்கலாமே? என் உயிரை ஏன் எடுக்கிறீர்கள்?'

எல்லோருக்கும் துணை நிற்பது இந்த அறிதிறன்பேசிதான். அதில் தானே வந்து விழுகிறது பல புகைப்படங்கள், மீம்ஸ்கள், விடியோக்கள், செய்திகள், பல தகவல்கள், அரசியல் மற்றும் திரைப்பட கிசுகிசுக்கள், பற்பல வதந்திகள்; இப்படி இருக்கும்போது யார்தான் அறிதிறன்பேசியை கீழே வைப்பார்கள்.

பாதி பேருக்கு என்ன கேட்கிறோம்; என்ன சாப்பிடுகிறோம்; என்ன செய்கிறோம் என்ற சுய சிந்தனையே இல்லை என்பதே மிகவும் வருத்தமான செய்தி.

மனநல ஆலோசகர்களிடம் பெரும்பாலும் பெண்கள் சொல்லும் புகார் என்ன தெரியுமா? "என் கணவர் முன்புபோல இல்லை. என்னிடம் இப்போது அதிகம் பேசுவது இல்லை; சாப்பாடு, உறக்கம், கைப்பேசி, அலுவலகம்-இதுதான் அவர் உலகம் என்றால், நான் எதற்கு இடையில்?'

ஆனால், பெண்களும் இப்படி ஆகி வருவதையும் பார்க்க முடிகிறது. ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டால் வேறு எங்காவது மகிழ்ச்சி கிடைக்குமா என்று தேடவும் நேரிடுகிறது. இது ஆபத்தானது. அவர்களும் வீட்டில் எது நடந்தாலும் உடனே உடன் வேலை பார்க்கும் தோழன் அல்லது தோழிக்கு அனுப்பி ஆறுதல் தேட நினைக்கிறார்கள். கூடவே சில கேம்ஸ் விளையாடுவதும் உண்டு.

மனக்கிலேசங்கள் வரும்போதே உரையாடல் மூலம் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். மனதில் போட்டு புதைத்து வைத்தால், பிறகு சிக்கல் அதிகமாகும். இருவருமே வேலை பார்க்கும் இன்றைய நாள்களில் உணவு, காய்கறி, வீட்டுச் சாமான், கேஸ் புக்கிங், பணப் பரிவர்த்தனை இவற்றுக்காக கையில் எடுக்கும் அறிதிறன்பேசி கீழே வைக்கப்படுவதில்லை. ஏனெனில், அதில்தான் நேரம் பார்ப்பது, பாட்டு கேட்பது, புகைப்படம் எடுப்பது, டிவி ரிமோட், விடியோ பார்ப்பது, மின்னஞ்சலை பார்ப்பது என எல்லாம் நடக்கிறது. யாரை இங்கே குற்றம் சொல்வது? தொழில்நுட்பம் இயல்பு வாழ்வை சாகடித்து விட்டது.

பெண்களே! நானும் முக்கியம், கையில் இருக்கும் அந்தக் கைப்பேசியும் முக்கியம் என்று மெதுவாக அன்பாக அழகாக பேசிப் புரிய வையுங்கள். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்; இழந்த நேரத்தை, இளமையை வாழ்க்கை இன்பங்களை திரும்பப் பெற முடியாது.

இன்று வேலை; வாழ்க்கை; அறிதிறன்பேசி இவை மூன்றையும் மிகச் சரியாக சமநிலை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு புத்தி சாதுரியம் மட்டும் போதாது. இழந்த தருணத்தை கரணம் போட்டாலும் திரும்பப் பெற முடியாது. இருக்கும் நமது நேரத்தில் உண்பது, உறங்குவது, வேலை பார்ப்பது, பயணிப்பது, பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி பார்ப்பது, நண்பர்களோடு பேசுவது, உறவினர் இல்லம் செல்வது, பிரார்த்தனை, உடற்பயிற்சி, தியானம், பாட்டு கேட்பது, குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது, குடும்பத்தோடு வெளியே செல்வது, திட்டமிடுவது, பெற்றோரோடு பேசுவது, அழகு ஆரோக்கியத்தைக் காப்பது, சமூகப் பொறுப்புகளை ஏற்பது, தொழிலை மேம்படுத்துவது, என எல்லாமேதான் அவசியம். அதற்கு அந்தந்த செயல் அந்தந்த தருணத்தில் என்பதுபோல சரியான நேரம் ஒதுக்கி நேர மேலாண்மையோடு செயல்படுதல் அவசியம்.

எப்போதும் கையில் அறிதிறன்பேசி எனும்போது, வீட்டில் உரையாடல்களே நிகழ்வதில்லை. உறவுகள் அதனால் மிகவும் பலவீனம் அடைகின்றன. அலுவலக நிமித்தம்தான் கையில் அறிதிறன்பேசி உள்ளதா ? அல்லது வேறு ஏதாவது நடக்கிறதா ? எப்படி கேட்பது ? எப்படிக் கண்டறிவது ? ஒருவருக்கொருவர் சந்தேகம் வந்தாலும் தவறுதானே.

இப்போது பிள்ளைகளும் இணையவழி வகுப்புகள் என்று கையில் கைப்பேசி அல்லது மடிக் கணினியை எடுத்துக் கொண்டு ஒரு மூலையில் சென்று விடுகிறார்கள். பல வீடுகளில் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் மயான அமைதிதான். கைப்பேசி செய்யும் அநியாயம்; வேண்டாத ஒரு மாயம்.

இதனால், "காட்ஜெட் டிசீஸ்' என்று சொல்லக்கூடிய சில புதிய மூட்டு அல்லது நரம்பு தொடர்பான நோய்கள், கழுத்து மற்றும் முதுகு வலி, சீக்கிரமே கண்ணாடி என்று இதர சிக்கல்கள் வேறு. இந்தத் தொழில்நுட்பக் கருவிகள் தரும் மிகவும் சக்தி வாய்ந்த கதிர்வீச்சு எனும் சில எதிர்மறை கிரணங்கள் உடல் உறுப்புகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. அது குழந்தைப் பிறப்பைக்கூட பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில குழந்தையை "ஏடிஹெச்டி' எனும் கவனக் கோளாறு குறித்த நோய் ஆட்கொள்கிறது.

இன்றைய எண்ம வாழ்க்கையில் காதல், காமம், அன்பு, கருணை எல்லாவற்றுக்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும்; இல்லையேல், மன முறிவு மற்றும் மண முறிவு இரண்டுமே தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். கவனம் தேவை மக்களே; உங்கள் அறிதிறன்பேசி உங்கள் கையில்; அதேபோல, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...