சொல்லப் போனால்... நாய் படும் பாடு! கடிக்குப் பயந்து தெரு நாய்கள் பராமரிப்பு திட்டமும் வயிற்றுக்கு உணவில்லா மக்களும்...
வரமா, சாபமா?
சித்திரிப்பு / விஜய்
எம். பாண்டியராஜன் Published on: 17 ஆகஸ்ட் 2025, 8:15 am
நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைய நான்கு நாள்கள் இருக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவொன்று, நம் நாட்டிலுள்ள தெரு நாய்களின் மீதான வன்மத்தை ஒருபுறமும் வாஞ்சையை இன்னொருபுறமுமாகக் கொப்புளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
தில்லியிலும் சுற்றியுள்ள புறநகர்களிலும் திரியும் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து நிரந்தரமாகப் பட்டியில் அடைக்க வேண்டும்; இதற்குத் தேவையான இடவசதிகளைச் செய்ய வேண்டும்; நிர்வாகம் எனக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது என்றும் தில்லி அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உச்ச நீதிமன்றம் கறாராகக் குறிப்பிட்டிருக்கிறது.
தெருநாய்க் கடிக்குச் சிறார்களும் குழந்தைகளும் ஆளாவதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிமன்றத்தின் முடிவை அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் வழிமொழிந்துள்ளார். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையிலும் ‘சென்டிமென்ட்’களுக்கு வேலையில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர். நாட்டின் தலைநகர் தில்லியில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் நாய்களால் கடிபடுகின்றனர்.
வெறிநாய்க் கடியால் நேரிடும் ரேபிஸ் பாதிப்பு காரணமாக எண்ணற்றோர் மரணத்தையும் எதிர்கொள்கின்றனர். ஆனால், இவற்றுக்கெல்லாம் துல்லியமான கணக்கு வழக்கு எங்கேயும் இல்லை.
நம் அரசின் கணக்கின்படி 2022-ல் நாடு முழுவதும் நாய்க் கடியால் ரேபிஸ் தொற்றி நேரிட்ட மரணங்களின் எண்ணிக்கை 21 மட்டுமே. ஆனால், இந்த எண்ணிக்கை சரியானதாக இருக்க முடியாதென சின்னக் குழந்தைக்குக்கூடத் தெரியும். அரசுத் தரவுகளையும் பிற வட்டாரத் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, இதே 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ரேபிஸால் 305 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உள்ளபடியே இந்தியாவில் 2022-ல் ரேபிஸ் காரணமாக, 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் அதே அமைப்பு மதிப்பிடுகிறது.
நமக்குக் கிடைக்கிற கால்நடைகள் துறை அமைச்சகத் தகவல்களின்படி, 2022, 2023, 2024 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிரத்தில் 13.5 லட்சம் பேர் நாய்க்கடி பட்டிருக்கின்றனர். இரண்டாமிடம் தமிழ்நாட்டுக்கு – 12.9 லட்சம்! நாடு முழுவதுமாக இந்த மூன்றாண்டுகளில் 89.5 லட்சம் பேர் நாய்களால் கடிபட்டிருக்கின்றனர் (ஆனால், ரேபிஸ் பலி – 125!).
தெருநாய்களின் எண்ணிக்கை (2019 ஆம் ஆண்டுக் கணக்கு) உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகம் – 20.6 லட்சம். ஒடிசா – 17.3 லட்சம், மகாராஷ்டிரம் – 12.8 லட்சம். நல்லவேளையாக இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடத்துக்குள் தமிழ்நாடு இடம் பெறவில்லை.
ஆனால், உண்மையான எண்ணிக்கை என்பது நிச்சயமாக இதைவிட எவ்வளவோ, எத்தனையோ மடங்கு அதிகமாகத்தான் இருக்கும்!
கடைசியாக 2019-ல்தான் நாடு தழுவிய அளவில் விலங்குகள் கணக்கெடுப்பு நடந்திருக்கிறது. இப்போது 2025. ஆறு ஆண்டுகள் தாண்டிவிட்டன. தெருநாய்களின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியிருக்கும்?
2019 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை 4.4 லட்சம்தான். ஆனால், அதே ஆண்டு மாநிலத்தில் 8.3 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆக, ஒவ்வொரு நாயும் குறைந்தபட்சம் இரண்டு பேரைக் கடித்திருக்க வேண்டும்! இப்படித்தான் இருக்கிறது நம் வசமுள்ள புள்ளிவிவரங்கள் யாவும்!
[தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டின் கடந்த ஏழரை மாதங்களில் மட்டுமே 3.67 லட்சம் பேர் நாய்க்கடி பட்டிருக்கின்றனர்; 20 பேர் பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையே அறிவித்திருக்கிறது. இதை ஒரு மாதிரியாகக் கொண்டால் பிற தரவுகளையும் மேம்படுத்திக் கொள்ளலாம்]
இப்படியாகப்பட்ட நிலையில், ஒரு கணக்கிற்காக எடுத்துக்கொண்டால் வேர்ல்ட்அட்லஸ் மற்றும் அரசுத் தகவல்களின்படி, இந்தியாவில் 1.53 கோடி தெருநாய்கள் இருக்கின்றன. அதாவது, மக்கள்தொகையில் நூறு பேருக்கு ஒரு நாய் என்பதைவிட சற்று அதிக எண்ணிக்கையில்!
உச்ச நீதிமன்றம் சொன்னபடியே, தெருநாய்களை எல்லாம் பிடித்துப் பட்டியில் அடைப்பது, பராமரிப்பது என்று முடிவு செய்து செயற்படுத்தினால், நல்லது, தில்லிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? அனைத்து மாநகரங்களிலும் ஏன், மாநிலங்களிலும் அதே திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்தானே? நாட்டின் எல்லா பகுதிகளிலும் வசிப்பவர்கள் மக்கள்தானே? எல்லாருடைய உயிர்களும் காக்கப்பட வேண்டியவைதானே?
ஆனால், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் 2023 ஆம் ஆண்டு விலங்குகள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகள், 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் போன்றவை காட்டும் வழிமுறைகளுக்கும் நிறைய முரண்கள் இருக்கின்றன. இவை தொடர்பான எதையும் அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், உலகில் வாழும் உரிமை, மனிதர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுவிடவில்லை; எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது. மனிதர்கள் என்பதால் மற்ற உயிர்களையெல்லாம் அழித்தொழித்துவிட முடியாது; அவ்வாறு அழித்தொழிக்கவும் கூடாது.
நாய்களா, மக்களா என்று வந்தால் சந்தேகமே இல்லாமல் பெரும்பாலான மக்கள் எல்லாருமே மக்கள் பக்கம்தான் இருப்பார்கள். ஆனால், அதேவேளையில் நாய்களைக் கொன்றுதான் மக்களா என்றால் நிச்சயம் யோசிக்கத்தான் செய்வார்கள்.
ஆக, தீவிரமாகச் சிந்தித்து, எல்லாருமாக விவாதித்து, இந்தத் தெருநாய்கள் விஷயத்தில் எல்லாரும் ஒப்புக்கொள்ளக் கூடிய முடிவுகளை எட்ட இதையொரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் (அதென்ன, தெருநாய்கள்? சென்னையில் பல நேரங்களில் வளர்க்கிற நாய்கள் கடித்தும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே!).
தெருநாய்களை அப்புறப்படுத்துவதைப் பலரும் ஒப்புக்கொண்டாலும்கூட, எப்படி, என்ன செய்யப் போகிறார்கள் என்பதில் தொடங்கி, என்ன செய்ய முடியும் என்பது வரை ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் தலைசுற்றிவிடும் என்பதில் வியப்பில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தில்லியிலிருந்து நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தும்பட்சத்தில், நீதிமன்றம் சொல்கிறபடி, நாட்டிலுள்ள ஒன்றரை கோடி (உத்தேசமாகத்தான்) நாய்களை எங்கே கொண்டுசென்று அடைத்து வைப்பார்கள்? உணவுக்காக அவற்றுக்கு எவ்வளவு செலவழிப்பார்கள்? யார் செலவழிப்பார்கள்? எங்கிருந்து செலவழிப்பார்கள்? இவற்றுக்கெல்லாம் நாடு முழுவதும் எவ்வளவு பணியாளர்கள் இருப்பார்கள்? இந்த நாய்களுக்கு நலக் குறைவு ஏற்பட்டால்? இவற்றுக்குள்ளேயே ரேபிஸ் பரவினால்... (ஒருவேளை நல வாரியம் போல ஏதேனும் அமைப்பார்களோ?).
இப்படியே இந்த நாய்கள் விஷயத்தை மட்டுமே ஆழ ஆழ, மூழ்கி மூழ்கிப் போய் யோசித்துக்கொண்டே சென்றால், அடடா, என்னவாகக் கற்பனை வளம் ஊற்றெடுத்து பொங்கி அருவியெனப் பிரவகிக்கிறது? என்னென்ன அற்புதமான யோசனைகள் எல்லாம் வெளிப்படுகின்றன?
பிகாரில் சிறப்பு முனைப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் ஆணையத்தின் மீதான வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள், எத்தனால் கலப்பட பெட்ரோல், டிரம்ப்பின் அதிரடி வரியும் அரசின் அடக்கிவாசிப்பும், ராணுவ விமான வீழ்ச்சி எண்களும், பயங்கரவாதமும் ஆபரேஷன் சிந்தூரும்... என எத்தனையோ பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டிக் கொண்டிருக்க, கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கெழவியைத் தூக்கி மனையில் வை என்கிற மாதிரி, இப்போது தெருநாய்களைப் பற்றி நாடே இரண்டுபட்டு விலாவாரியாக விவாதித்துக் கொண்டிருக்கிறது.
நாய்க் கடியிலிருந்து மக்களைக் காக்க நாய்களைப் பிடித்துப் பட்டியில் அடைப்பதும் உணவளிப்பதும் தங்குமிடங்கள் உருவாக்குவதும் பராமரிப்பதும் என எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது; என்ன, அப்படியே கொஞ்சம் புதுமைப்பித்தன் சொன்ன மாதிரி இந்த அரிசி உணவு தின்னும் பிராணிகளைப் பற்றியும் விசேஷ அக்கறை எடுத்துக்கொண்டு தானாக முன்வந்து ஏதாவது விசாரணை நடத்தி, உண்ண உணவுக்கும் இருக்க இடத்துக்கும் நல்ல விமோசனத்தை ஏற்படுத்தித் தாருங்கள் யுவர் ஹானர்.
No comments:
Post a Comment