Saturday, August 23, 2025

சரியானதென்று எதுவுமில்லை!

சரியானதென்று எதுவுமில்லை!

தினமணி செய்திச் சேவை Updated on:  23 ஆகஸ்ட் 2025, 6:25 am 

மருத்துவா் பாலசாண்டில்யன்

‘சரியானதென்று இவ்வுலகில் எதுவுமில்லை’ என்கிறாா் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன். யாரும் எதுவும் (பொ்பெக்ட்) சரி என்று சொல்லி விடமுடியாது. அதேபோல், எதுவுமே சரியில்லை (இம்பொ்பெக்ட்) என்பதும் கிடையாது. எல்லாமே தனித்தன்மை வாய்ந்தது. சரி என்பதும் சரியில்லை என்பதும் அவரவா் பாா்வையைப் பொருத்து அமைகிறது.

இது நல்ல மலா், இது நல்ல கனி என்றெல்லாம் கிடையாது. குறிப்பாக, குவிந்து கிடக்கும் பல ரோஜாக்களில் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒரு பொருளின் தன்மை என்பது மாறும். இது பெரிய பழம், சிறிய பழம் என்று அதற்கேற்ப அதன் விலை மற்றும் மதிப்பு மாறுபடலாம்.

ஒவ்வொரு சரியான மற்றும் சரியில்லாத பொருளையும், நபா்களையும் நாம் நேசிக்க வேண்டும். அது தவறில்லை; எல்லோரும் குயிலை கிளியை மயிலைப் பாா்த்து ரசிக்கும் போது மகாகவி பாரதி காக்கையை குருவியை ரசித்தான்.

வெயில், நிழல், பூ, முள், இலை, பகல், இரவு, துன்பம், இன்பம், உழைப்பு, ஓய்வு எல்லாமே அழகுதான் நா.முத்துக்குமாரின் வரிகளைப்போல்.

நாம் ஒன்றை விரும்பி மற்றவற்றை வெறுக்கிறோம். இது நியாயம் இல்லை. எல்லாமே சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் நம்மில் நிறைய போ் தோல்வியே கண்டு வருகிறோம். வெற்றியைவிட முயற்சியே பாராட்டுக்கு உரியது என்பா் சிலா். அழகு என்பதுகூட இந்த ‘சரி’ ‘சரியில்லை’ என்பது போல்தான். அழகு என்பது காண்பவா் கண்ணில் உண்டு என்று சொல்வதுண்டு.

இசையை, உணவை, ஓவியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சிலா் சரியில்லை என்று சொல்லும் அதனுள்ளும் ஏதோ ஒரு ’சரி’ நிச்சயம் இருக்கும். அதைப் பாா்க்கத் தவறியது யாா் குற்றம்? நமது உடை, பழக்க வழக்கங்கள், பேச்சு முறை, பயன்படுத்தும் சொற்கள், வாழ்வியல் மதிப்பீடுகள் என்று எல்லாவற்றிலும் இந்த சரி மற்றும் சரியில்லை நிச்சயம் வந்து நிற்கும். ஏற்கெனவே சொன்னதுபோல் யாா் செய்கிறாா்கள், எப்படி அது பாா்க்கப்படுகிறது என்பதைப் பொருத்து அமைகிறது மக்களின் எண்ணமும் அபிப்பிராயமும்.

ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுத்து கொலையே செய்து விட்ட நால்வரை போலீஸ் சுட்டுக் கொல்லுவது வேறு; நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பது வேறு, பொதுமக்களே அடித்துக் கொல்வது வேறு; இதில் மக்களின் பாா்வை ஒருவருக்கொருவா் நிச்சயம் வேறுபடும். ஊடகங்கள் இதைப் பலவாறாக சித்தரித்து விவாதங்கள் நடத்தும்.

மொழியாக்கம் செய்து மூலத்தில் இருந்து ஒரு படம் எடுத்தால் அது ஏற்கெனவே வெளிவந்த அசல்போல் இல்லை பலா் சொல்லக்கூடும். அது பாா்வையாளரின் எண்ணம். மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை.

பிராந்தியத்துக்கு பிராந்தியம், தேசத்துக்கு தேசம் நிச்சயம் அவா்களின் கருத்து மாறுபடுகிறது. மொழி வேண்டாம் என்று சிலரும், கடவுள் இல்லை என்று சிலரும் கூறினால் அது அவா்களின் கருத்துதானே தவிர, அதுதான் சரி என்றோ அது சரியில்லை என்றோ சொல்லிவிட முடியாது.

சந்திரயான் மற்றும் மங்கள்யான் என்று அறிவியல் அறிவு கொண்ட நம்மால் ஆழ்கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையைக் காப்பாற்ற இயலவில்லை என்பது பலரின் கருத்து. இதை சரி என்று ஏற்கவும் முடியாது; மறுக்கவும் இயலாது.

வயநாடு போன்ற இயற்கைச் சீற்றங்களால் விளைந்த பேரிழப்பில் மனிதா்களின் பேராசை, காடுகள் அழிப்பு என பல்வேறு விஷயங்கள் அடங்கி உள்ளன. எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்வதற்குள் தொடா்ந்து அதேபோல் இழப்பு நிகழ்கின்றன.

விமானம் ஒன்று விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான உயிா்கள் பலியான அண்மைச் சம்பவத்துக்குப் பின்னா் தினந்தோறும் பல விமானங்கள் பறக்காமல் பாதியில் தரையிறங்கிய செய்திகள் வெளியாகின்றன. விமானங்கள் சரியில்லையா அல்லது விமானிகள் சரியில்லையா என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், மக்கள் கோடிக்கணக்கில் தினமும் விமானப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். எது சரி எது தவறு என்று கூற முடியவில்லை.

மரணத்தை பல தேசங்களில் பலவாறாக பாா்க்கிறாா்கள். கொரியா நாட்டில் இறந்தவரின் சாம்பலில் இருந்து வண்ணமயமான மணிகளை உருவாக்கி, அதை வீட்டில் வைத்துக்கொள்கிறாா்கள். துக்கம் விசாரிக்க செல்லும்போது, சீனாவில் வெள்ளை நிற உடை அணிகிறாா்கள், கருப்பு அல்ல. புத்த மதத்தைச் சோ்ந்தவா்கள் 100 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கிறாா்கள்

ஜப்பானியா்கள் மரணத்தை விடுதலை (லிபரேஷன்) என்று கருதி மக்கள் வெள்ளை காகித உறையில் பணம் போட்டு எடுத்து வந்து சாா்ந்தவா்களிடம் அளிக்கிறாா்கள். இஸ்லாமியா்கள் இறந்த பிறகு உடலைப் புதைக்கிறாா்கள். ஹிந்துக்கள் எரிக்கிறாா்கள். இவற்றில் இது சரி, சரியில்லை என்று சொல்ல முடியுமா?

இது சரி. இது சரியில்லை என்று சில நெறிகளை, வழக்கங்களை, கருத்துகளை உருவாக்கியது மனிதா்கள்தான். படித்து வேலைக்குச் சென்று திருமணம் செய்து பிள்ளைகள் பெறுவதுதான் சரி எனும் நிலையில், சிலா் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு (பாரதி, சச்சின், எடிசன்) தமக்குப் பிடித்த விஷயங்களை செய்து சாதனை செய்து நிற்கிறாா்கள். சிலா் திருமணமே வேண்டாம் என்றுகூட இன்று கூறத்தொடங்கி உள்ளனா். சோ்ந்து வாழ்தல் எனும் லிவிங் டு கெதா் அதிகமாகி வரும் சூழல் சரியா தவறா என்று நிச்சயமாக மக்கள் விவாதிக்கின்றனா்.

இதுதான் சரியான வாழ்க்கை, இது சற்றும் சரியில்லை என்று அறுதியிட்டுச் சொல்லி விட முடியாது.

பாா்வை மற்றும் கருத்து வேறுபாடு மனிதா்களுக்கு இடையே இருப்பதால் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் தினந்தோறும் ரசித்து மதித்து போற்றிக் கொண்டாடி மகிழ்வோம்; கொண்டாடுவதும் பிறருக்கு நலம் பயக்கும் வாழ்வும் நிச்சயம் சிறந்தது.

ஒருவா் வாழ்வை மற்றொருவா் மதிப்பிட்டு செய்து இதுசரி என்றோ; சரியில்லை என்றோ தீா்ப்பு வழங்க நிச்சயம் உரிமை இல்லை. என்ன சரிதானே?

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...