DINAMANI
எண்ணமே வாழ்வு!
நம் உடல் மொழியாலும், செயல்களினாலும் மற்றவர்கள் மீது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் போது நம்மீதான சமூக நன்மதிப்பு உயர்கிறது.
ஐவி.நாகராஜன் Updated on: 08 ஜனவரி 2026, 7:23 am
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறிய- பெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் எதிர் கொள்ளும் தோல்விகளால் மனம் உடைந்து வெளிவர முடியாத கூண்டுக்குள் நம்மை அடைத்துக் கொள்வதும், எதிர்- கொள்ளும் தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றுவதும் நம் எண்ணங்களைப் பொருத்தே அமையும்.
என்னால் முடியாது என்பதே மனதின் எண்ணமானால் நாம் எடுத்த காரியத்தைச் சாதிக்க முடியாது. என்னால் முடியும் என்பது எண்ணமாகும் போது வெற்றியை நோக்கிச் செல்வோம்.
தினமும் நாம் மற்றவர்கள் மீது பல வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். நம் உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள், உடன் செயல்படுகிறவர்கள், புதிதாகக் காண்பவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் நம்மால் பலதரப்பட்ட தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். நம்மைப் பற்றிய உயர்வான எண்ணத்தை மற்றவர்கள் கொள்வதும், நம்மைப் பற்றி தாழ்வாக அவர்கள் எண்ணுவதும் நம் கையில் இருக்கிறது.
நம் உடல் மொழியாலும், செயல்களினாலும் மற்றவர்கள் மீது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் போது நம்மீதான சமூக நன்மதிப்பு உயர்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதும், மற்றவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதும், பொதுநலத் தொண்டு புரிவதும் நம் எண்ணங்களின் செயல்பாடே.
நம் மனதில் உலாவரும் எண்ணங்களில் ஒரு சிலவற்றின் மீதே நாம் நம் கவனத்தைத் திருப்புகிறோம். அந்த எண்ணம் காட்டும் வழியில் நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம். எண்ணற்ற எண்ணங்கள் மனதில் தோன்றி, வந்த வேகத்தில், நம் உணர்வுகளைத் தூண்டாது மறைந்தும் விடுகின்றன.
இலக்கை நோக்கி மனது திசை திருப்பும். இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை ஆராயும். இது குறித்த முந்தைய அனுபவங்கள் மற்றும் மனதில் உள்ள தகவல்கள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும். ஆழ்மனதுடன் சைகைகள் வாயிலாகவோ, வார்த்தைகள் வாயிலாகவோ உரையாடும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா எண்ணங்களுக்கும் பின்னாலும் ஏற்படுவதில்லை.
எண்ணங்கள் பொதுவாக ஒரு இலக்கை மையப்படுத்தி தோன்றுகின்றன. நோக்கம் வேறுபடும் போதும், ஒவ்வொருவருக்கும் உள்ள அனுபவம் வித்தியாசமாக இருக்கும் போதும்,திறமையும் கல்வி அறிவும் வேறுபட்டு இருக்கும் போதும், ஆழ்மனதின் தேவைகள் மாறுபட்டு இருக்கும் போதும், உடல் மன நிலைகள் வெவ்வேறாக இருக்கும் போதும்
எண்ணங்கள் வேறுபடுகின்றன. இதன் காரணமாக எல்லா விஷயங்களிலும் இரு வேறு நபர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திப்பது இல்லை. அதே நேரத்தில் பொதுவான குறிக்கோளை அடைவதற்கான முயற்சி எடுக்கும்போது பலருடைய எண்ணங்கள் ஒத்திருப்பதையும் காணலாம்.
நம் எண்ணங்களே நம்மை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வெளிச்சமாகிறது. தரமற்ற எண்ணமுடையவர்கள் சமூகத்தின் பார்வையில் உயர்வானவர்களாகவோ சிறப்புகளுக்குத் தகுதியானவர்களாகவோ கருதப்படுவதில்லை. இதற்குக் காரணம் மனதின் எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே நம் குணமும் அமைந்துவிடுகிறது.
நம் எல்லாச் செயல்களும் எண்ணங்களாலேயே தோன்றுகின்றன. எதேச்சையாக நடக்கும் செயல்களுக்கும் திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்கும் இது பொருந்தும். எண்ணத்தின் உருவகமே செயல். மகிழ்வும் துக்கமும் எண்ணத்தின் வெளிப்பாடே.
மனதில் கொடிய, தீங்கிழைக்கும் எண்ணங்கள் ஒருவரைத் தீய செயலுக்கு உட்படுத்துகிறது. மனதில் எழும் எண்ணங்கள் தூய்மையாக, நல்லதாக இருக்குமேயானால் அவர் நற்செயல்கள் செய்கிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
உன்னதமான குணம் ஒருவருக்குத் திடீரென ஏற்படுவதில்லை. மேலிருந்து கொடுக்கப்படுவதுமில்லை. எண்ணங்களை நெறிப்படுத்துவதாலும், கட்டுப்படுத்துவதாலும், வழிமுறைப்படுத்துவதாலும் உயர் எண்ணங்கள் தங்குகின்றன. தவறான, சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எண்ணங்கள் மனதைவிட்டு ஒதுங்குகின்றன. மனமும் தூய்மை அடைகிறது.
எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்போது மகிழ்ச்சி நம்மைப் பின் தொடர்கிறது. நம் குணம் மற்றவர்களால் நம் வழித்தடங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் கருதப்படுகிறது. சான்றோர் அவையில் நமக்கென தனி இடம் கிடைக்கும், போற்றப்படும். எனவே, மறுக்க முடியாத தேவை. அதன் தொடர்ச்சியாக, வளமிக்க நல்வாழ்விற்கு நல்ல சிந்தனைகள் நம் மனதில் எண்ணங்களாக நிலைக்க வேண்டும்.
சுரங்கத்தின் ஆழத்தில்தான் தங்கமும் வைரமும் கிடைக்கும். ஆழ்மனதைத் தேடத் தேட நல்லெண்ணங்கள் ஊற்றாகப் பாயும். அவ்வெண்ணங்கள் நம் குணமாக மாறும். மனதைக் கட்டுப்படுத்தும். எண்ணங்களை ஏற்றத்தின் பாதையாக்கும் போது வியத்தகு நற்பெயர் நம்மைத் தேடிவரும். ஆழ்மனதைக் கேட்கும்போதும், தட்டும் போதும், தேடும்போதும்தான் நற்குணம் வெளிப்படும். முன்னேற்றத்திற்கான பாதைகள் உதயமாகும். இடைவிடாத முயற்சி மூலம் நம் குணத்தை மாற்ற முடியும்; சிறப்பானதாக்கவும் முடியும்.
பூக்கள் பூத்துக் குலுங்கும் தோட்டம் போன்றது மனது. அத்தோட்டத்தில் பூக்கும் பூக்களே எண்ணங்கள். சிறப்பாகத் திட்டமிட்டு உழைப்பது மூலம் நல்ல, அழகிய, பயன்தரக்கூடிய பூக்களை தோட்டத்தில் வளர்க்கலாம். கவனக்குறைவு காரணமாக தேவையற்ற முட்புதர்கள் தோன்றி நல்லெண்ணங்களை பாழ்படுத்த முடியும். கவனியாது விட்டுவிட்டால் பூக்கள் மறைந்து வறண்ட நிலமாகத் தோட்டம் மாறிவிடும். எனவே, மனதின் எண்ணங்களைத் தொடர்ந்து கண்காணித்தாக வேண்டும்.
எண்ணங்களும் குணங்களும் சூழலின் தாக்கத்தால் பாதிக்கப்படும். பல குணங்கள் நமக்கு இல்லை என்று தோன்றும். ஆனால் இக்கட்டான, இடர்கள் நிறைந்த, சவாலான சூழல்களில், எதிர்பாராதவிதத்தில் அக்குணங்கள் வெளிப்படும். ஆழ்மனதின் எண்ணங்கள் சூழ்நிலை ஏற்படும் போது குணமாக வெளிப்பட்டு விடும். வாழ்வில் வளர்ச்சியும் முன்னேற்றமும் தினம் தினம் ஏற்படுகிறது. இதனால் தினமும் மனதில் எழும் எண்ணங்கள் குறித்துக் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
No comments:
Post a Comment