இப்போது 50 வயதைக் கடந்த அனைவருக்கும் 1979 ஜூலையில் உலகம் முழுவதும் பயமுறுத்திய விஷயம் குறித்து நினைவிருக்கலாம். அமெரிக்கா துவங்கி அமிஞ்சிக்கரை வரை பயந்து நடுங்கிய சம்பவம் அது.
அமெரிக்காவால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஸ்கைலாப் என்ற செயற்கைக்கோள் பல ஆண்டுகள் முடிந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்தது. அது பூமியை நோக்கி பயணப்பட்ட பின்னர் தான் உலகம் முழுவதும் அஞ்சி நடுங்க வேண்டி வந்தது.
ஆளாளுக்கு இங்கே விழும், அங்கே விழும் என்று பயமுறுத்தினர்.
இறுதியில் ஒருவழியாக மேற்கு ஆஸ்திரேலிய நகரான பெர்த்தில் ஒரு தேவாலய வளாகத்தில் விழுந்தது. நல்லவேளையாக உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. இட சேதம் தான் ஏற்பட்டது. (அதற்கான நஷ்டஈடு கோரி அமெரிக்காவுடன் தேவாலயம் பலஆண்டுகளாக மல்லுக்கட்டி வருவது தனிக்கதை).
கட்டுப்பாட்டை இழந்த ஸ்கைலாப் தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் ஜூலை 11-இல் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அது விழுந்ததோ ஆஸ்திரேலியாவின் பெர்த்தில். இதற்கு கணக்கீட்டில் ஏற்பட்ட 4 சதவீத வேறுபாடு என்று சப்பைக்கட்டு கட்டியது நாசா.
வானை ஆய்வு செய்யச் சென்ற ஸ்கைலாப், மண்ணில் மாந்தர்க்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. வானில் இருந்து பூமியை நோக்கி வரும் பொருள்கள் புவிஈர்ப்பு விசைக்குள் நுழைந்ததும் எரிந்துவிடும் என்ற நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம் அது. அதன்பின் தான் விண்வெளியில் கழிவுகளாக சுற்றிவரும் காலம் முடிந்த செயற்கைக் கோள்கள் குறித்த பயம் ஏற்படத் தொடங்கியது.
நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு செயற்கைக்கோள்களை அனுப்புகின்றன. கைப்பேசி இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பு, தட்பவெப்பம், பூமி ஆராய்ச்சி, பிற நாடுகளை உளவு பார்ப்பது போன்ற பல காரணங்களுக்காக ஏராளமான செயற்கைக் கோள்கள் ஏவப்படுகின்றன. பூமத்திய ரேகையி இருந்து 22,300 மைல் தொலைவில் இவை நிலை நிறுத்தப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் காலம் உண்டு. அதன்பின் அவை செயலிழந்துவிடும்.
செயலிழந்த செயற்கைக் கோள்கள் அங்கேயே விடப் படுவதால் அண்டவெளி குப்பைத் தொட்டியாகிக் கிடக்கிறது.
பொதுவாக, ஒவ்வொரு நாடும் விண்வெளிக்கு அனுப்பும் செயற்கைக்கோள்கள் அந்த நாட்டுக்கேற்ற பாதையில் தான் இயங்கும். அது செயலிழந்ததும் இடமாற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய செயற்கைக்கோளை நிலைநிறுத்துவர். செயலிழந்த கோள்களுக்காக விண்வெளியில் குப்பைத் தொட்டி பகுதியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முறையாக செயலிழந்தவற்றைத் தான் அந்த இடத்துக்கு கொண்டு சென்று போட முடியும். இடையில் தொடர்பை இழப்பவை, ஏற்கெனவே வீணாக சுற்றிவரும் செயற்கைக்கோள்கள், அவற்றின் சிதறல்கள் போன்றவை இப்போதைய பிரச்னைக்கு காரணம்.
இந்தச் சிதறல்களுக்கு மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி அதிகம்.
1 செ.மீ. விட்டம் கொண்ட துகள் மோதினாலே, செயற்கைக்கோளின் செயல்பாடு பாதிக்கப்படும்.
10 செ.மீ. விட்டம் கொண்ட துகள் மோதினால், சந்தேகமே இல்லாமல் செயற்கைக்கோள் செயலிழந்துவிடும். இதற்குக் காரணம் இவற்றின் வேகம். நிமிடத்துக்கு பல ஆயிரம் கி.மீ. வேகத்தில் சுற்றுபவை இவை.
இப்போதைய நிலையில் பூமியில் இருந்து 600 கி.மீ. தொலைவில் உள்ள துகள்கள்தான் பயமுறுத்தி வருகின்றன. அவை எந்த நேரத்திலும் பூமிக்குள் நுழையும் அபாயம் உள்ளது. ஸ்கைலாப் காலத்தைவிட இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.
எனவே, அவை பூமிக்குள் நுழைந்தாலும் பாதிப்புகளை குறைக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
அதேசமயம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தகவல் தொடர்பு இணைப்புகள் பாதிக்கப்படுவ தையும் அவர்கள் கணக்கில் கொண்டுள்ளனர்.
எனவே, செயலிழந்த செயற்கைக் கோள்கள் பூமியில் நுழையும் முன்பே அழித்துவிட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அளவில் சிறிய துகள்கள் குறித்து பிரச்னை இல்லை.
பெரிய துகள்கள்தான் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. அவை எரிந்தாலும் நெருப்புக் கோளங்களாக பல ஆயிரம் கி.மீ. வேகத்தில் வரும்போது ஏற்படுத்தும் பாதிப்பை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
ஒரு செயற்கைக்கோள் பயணிப்பதும், பயனளிப்பதும் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதற்குப்பின்னால் இதுபோன்ற ஓர் ஆபத்து இருப்பதும், அதைத் தடுக்க இரவுபகலாக விஞ்ஞானிகள் முயற்சித்து வருவதும் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கிறது.
காணாமல் போனவை
விண்வெளிக் கழிவுகள் விளைவாக பல செயற்கைக்கோள்கள் காணாமல் போயுள்ளன. ஏவப்பட்ட ஒரு மாதத்தில் 1981 ஜூலை 21-இல் ரஷியாவின்
காஸ்மாஸ் 1257 என்ற செயற்கைக்கோள் காணாமல் போனது. இதற்கான காரணம் என்ன என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், கழிவுகள்
மோதியது தான் இதற்குக் காரணம் என்பது விண்வெளி அறிஞர்களின் முடிவு. இதே போன்று காஸ்மாஸ் 1484- செயற்கைக் கோளும் 1993, அக்.18இல்-இல் காணாமல் போனது. 1993 ஆக.11-இல் ஒலிம்பஸ்-1, 1996 ஜூலை 24-இல் பிரான்ஸின் சீரிஸ், 2006 மார்ச் 29-இல் ரஷியாவின் ஏஎம்11 என காணாமல் போனவை மற்றும் பாதிக்கப்பட்டவையின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 22-இல் ரஷியாவின் பிளிட்ஸ் செயலிழந்தது. இதற்கு சீன ஏவுகணை சோதனையின் போது உருவான துகள் காரணம் என்கிறார்கள். விண்வெளியில் அதிகக் கழிவுகளை ஏற்படுத்திய நிகழ்வாகக் கருதப்படுவது, 2009-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்தது. காஸ்மாஸ் 2251 என்ற செயற்கைக்கோளும், இரிடியம் 33 என்ற செயற்கைக்கோளும் விநாடிக்கு 11 கிமீ வேகத்தில் மோதிக்கொண்டன. அதாவது, மணிக்கு 42 ஆயிரம் கிமீ வேகம். இதில் இரண்டும் செயலிழந்து விண்வெளியை குப்பைத்தொட்டியாக்கின.
5500 டன் கழிவுகள்
விண்வெளியில் தற்போது 5500 டன்னுக்கும் மேற்பட்ட கழிவுகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரம் பொருட்கள் 10 செ.மீ. விட்டத்திற்கு உள்பட்டவை. ஒரு லட்சம் பொருட்கள் ஒரு செ.மீ. விட்டத்திற்கு உட்பட்டவை. இதில் பூமியை நெருக்கி உள்ளவை 2000 டன். பூமத்திய ரேகையில் இருந்து 900 கி.மீ. முதல் ஆயிரம் கி.மீ. உயரத்தில் தான் அதிகமான குப்பைகள் உள்ளனவாம். 600கிமீ. உயரத்துக்கு கீழ்வரும் போது தான் அவை புவிஈர்ப்புவிசைக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
விண்ணுக்கு அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரஷியாவின் ஸ்புட்னிக். இது 1957-இல் அனுப்பப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியவண்ணம் உள்ளன. 1998}ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி 2,556 செயற்கைக் கோள்கள் பயனின்றி அண்டவெளியில் சுற்றி வந்தன. 1997}ஆம் ஆண்டில் மட்டும் 150 புதிய செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. அதில் அமெரிக்காவின் பங்கு 68. ரஷியா 50, ஐரோப்பா 19, சீனா 8, ஜப்பான்3, இந்தியா மற்றும் பிரேசில் தலா 1.
அமெரிக்காவின் பங்கு
சுமார் 17 ஆயிரம் செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றைக் கொண்டு வந்து நிலை நிறுத்திய ராக்கெட்டுகள், அவற்றின் உதிரிப் பாகங்கள் அண்டவெளியில் சுற்றி வருகின்றன. இதில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 6,600.
தொடர்ந்து அனைத்து நாடுகளும் செயற்கைக் கோள்களை அனுப்பி வரு கின்றன. இப்போதைய நிலையில் வானில் 2,465 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. கட்டுப்பாட்டை இழந்த வையும் அவற்றின் கழிவுகள், சிதறல்களும் கணக்கிட முடியவில்லையாம்.