மனநலம் பாதிக்கப்பட்ட பலருக்கும் மனநல சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துவிட்டது, ஆவி புகுந்துகொண்டது என்று கூறி குறிப்பிட்ட சில கோயில்களுக்கு அழைத்துப் போய் கட்டிப் போட்டுவிடுவது தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது. ‘சந்திரமுகி'யில் ஜோதிகாவுக்கு வரும் மனநோயும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
ஆவி புகுந்துகொள்ளுமா?
ஆவி புகுந்த கதாநாயகியின் கதையைக் கருவாகக் கொண்ட திரைப்படம் ‘சந்திரமுகி’. சந்திரமுகி என்ற நடன மங்கை வேட்டையன் ராஜாவின் அரண்மைனையில் வசித்துவருகிறாள். அரண்மனைக்கு அருகில் வசிக்கும் நடனக் கலைஞர் ஒருவர் மீது காதல் கொள்கிறாள். இதை விரும்பாத வேட்டையன் ராஜா, இருவரையும் கொன்றுவிடுகிறார்.
இந்தச் சம்பவம் நடந்து பல்லாண்டுகளுக்குப் பிறகு அந்த அரண்மைனைக்குக் குடிவரும் கதாநாயகி, சந்திரமுகியைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள். அவர் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளின் மீதும் ஈடுபாடு கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாகவே மாறத் தொடங்குகிறாள்.
சந்திரமுகியைப் போலவே எதிர்வீட்டில் இருக்கும் ஒரு இளைஞனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒரு கட்டத்தில் முழுமையாக சந்திரமுகியாக உருமாறித் தன் கணவனை வேட்டையன் ராஜாவாக நினைத்துக் கொன்றுவிடத் துடிக்கிறாள். இறுதியில் அவளைச் சமாதானப்படுத்த வேண்டி, வேட்டையன் ராஜாவாக ரஜினி கதாபாத்திரம் மாறித் தன்னைப் பலிகொடுப்பதாகப் பாவனை செய்கிறார்.
பேய்ப் பிடிப்பது போன்ற நம்பிக்கைகளை மனநல மருத்துவம் நம்புவதில்லை. இது மட்டுமல்ல பிசாசு, பில்லி, சூனியம் போன்ற அறிவியலுக்குப் புறம்பான எதையும் நம்புவதில்லை. ஆனால், மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் பல்லாண்டுக் காலமாகப் பரவலாக உள்ளன.
உண்மையில் பேய்ப் பிடிப்பது எனச் சொல்லப்படுவதும் ஒருவகையில் மனநோய்தான். இளகிய மனம் கொண்டவர்கள், கிராமியப் பின்னணி கொண்டவர்கள்தான் இந்த வகை நோய்க்கு அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நகரத்தில் பேய்ப் பிடிப்பது குறித்த நம்பிக்கைகள் குறைவு.
மூடநம்பிக்கைகளின் நோய்
உதாரணமாக கிராமத்தில் துர்மரணச் சம்பவத்தால் இறந்து போனவர்கள் ஆவியாக அலைவதாக நம்பிக்கை உண்டு. கண்மாயில், கிணற்றில் விழுந்து மாண்டவர்கள் அங்கேயே ஆவியாக அலைவதாக நம்பிக்கை உண்டு. அந்தப் பக்கம் செல்லும் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மீது ஆவி புகுந்துவிடும் எனவும் சொல்வார்கள். இதனால் இளகிய மனம் படைத்த இளம் பெண்களின் மனநிலை பாதிப்புக்குள்ளாகி, அவர்களே தங்களுக்குள் ஆவி புகுந்துவிட்டதாக நம்பி மனநோய்க்கு ஆளாவார்கள். பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு உள்ளாவதாகச் சொல்லப்படுகிறது.
மனநோய் பாதிப்பு இருக்கும்போது அவர்கள் உச்சபட்ச வன்முறையை வெளிப்படுத்துவார்கள். ‘சந்திரமுகி' திரைப்படத்தில் சந்திரமுகியாக மாறிய ஜோதிகா, நான்கு ஆண்கள் சேர்ந்து தூக்கும் கட்டிலை ஒற்றைக் கையில் தூக்கிவிடுவார். இது அதிகபட்சமான சித்திரிப்புதான். ஆனாலும், சரியான ஒன்றே.
இம்மாதிரியான நம்பிக்கை அடிப்படையிலான மனநலப் பாதிப்பு Possession Trance Disorder என அழைக்கப்படுகிறது. மனதின் சுய கட்டுப்பாட்டை இழந்து வேறு சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும். அதாவது நமது வழக்கமான நடவடிக்கைகளில் மாறுபட்டு வேறு யாரோ ஒருவர்போலச் செயல்படும். இதைத்தான் பேய்ப் பிடிப்பது என்கிறோம்.
கலாச்சார ரீதியாகப் பார்த்தால் ஆப்பிரிக்க, தெற்கு ஆசிய நாடுகளில்தான் இந்த வகை மனநலப் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. இதர நாடுகளில் இந்த நிலை மிகக் குறைவு. ஏனென்றால் தெற்காசிய நாடுகளில்தான் இம்மாதிரியான மூடநம்பிக்கைகள் அதிகம்.
பேயின் விருப்பம்
பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மனநோயாளிகளைப் பொதுவாக மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல மாட்டார்கள். அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப மத வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். தமிழ்நாட்டில் இம்மாதிரி பாதிப்புக்கு உள்ளானவர்களை மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு குணசீலம், ஏர்வாடி, ராஜாவூர் போன்ற ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் உள்ளது.
இது போன்ற மனநோய் வழிபாட்டுத் தலங்களிலேயே குணமாகிவிடுவதும் உண்டு. அதாவது இம்மாதிரி மனநோய் உள்ளவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் போது, அந்த மனநலப் பாதிப்பில் இருந்து அவர்கள் குணமடைய வாய்ப்புள்ளது. ‘சந்திரமுகி' திரைப்படத்தில் இதைச் சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சந்திரமுகியாக மாறும் கதாநாயகியின் விருப்பம், வேட்டையன் ராஜாவைக் கொல்ல வேண்டும் என்பது. அதை நாடகமாக அவர்கள் நிகழ்த்திக் காட்டும்போது திருப்தியடைந்து, அவரது மனநோய் குணமாகிறது.
இதைத்தான் குடிகொண்டுள்ள ஆவியின் விருப்பத்தை நிறைவேற்றும்போது, அந்த ஆவி உடலைவிட்டு வெளியேறி விடுவதாக நம்பப்படுகிறது. இந்த வகை மனநோய்க்கு இது சரி. ஆனால், இந்த நோய்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் கண்டறிந்துவிட முடியாது.
மனநல மருத்துவர்களே கண்டறிய முடியும். மக்கள் எல்லாவிதமான மனநோயாளிகளையும் வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிடுகிறார்கள். இப்படிச் செய்வதால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக மனச்சிதைவுக்கு உள்ளாவார்களே தவிர குணமடையமாட்டார்கள்.
கிணற்றில் இருந்த பேய்
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற மனநலப் பாதிப்புடன் ஒரு பெண் சிகிச்சைக்காக என்னிடம் அழைத்து வரப்பட்டார். அவருக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். அவர்களுடைய ஊரில் உள்ள ஒரு கிணற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்தப் பெண் பேயாக அலைவதாக, அந்த ஊர் மக்கள் நம்பினார்கள். அந்தக் கிணற்றுப் பக்கம் போனால் அந்தப் பெண்ணின் ஆவி பிடித்துக்கொண்டுவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இந்த நம்பிக்கையுடன் வளர்ந்த இந்தப் பெண், அந்தக் கிணற்றுப் பக்கம் சென்றுள்ளார். அதனால் இயல்பாகவே இளகிய மனம் கொண்ட அவர், இந்த மனநலப் பாதிப்புக்கு ஆளாகிவிட்டார். நடக்கவே முடியாதபடி ஆகிவிட்டார். கிணற்றில் விழுந்து இறந்த பெண்ணுக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது. பிறகு மனநல ஆலோசனை மூலம் அந்தப் பெண் குணமடைந்தார்.
சிகிச்சை முறை
இந்த மனநலப் பாதிப்பு உள்ளானவர்கள், மற்ற நேரங்களில் சரியாகத்தான் இருப்பார்கள். குறிப்பிட்ட நேரங்களில்தான் புத்தி பேதலித்த மாதிரி நடந்துகொள்வார்கள். மனச்சிதைவு நோயாளிகள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். ஆகவே, முதலில் மனநலப் பாதிப்பைப் பிரித்தறிவது அவசியம். இது Possession Trance Disorder தான் என உறுதிசெய்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு விஞ்ஞான அறிவை அளிக்க வேண்டும். பேய் பிடிப்பது மூடநம்பிக்கை என்பதைப் புரியவைக்க வேண்டும். ஹிப்னாடிஸ முறையில் இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.
- கட்டுரையாளர்,
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்,
மனநல மருத்துவர்
தொடர்புக்கு: arulmanas@gmail.com
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்,
மனநல மருத்துவர்
தொடர்புக்கு: arulmanas@gmail.com