தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி.
இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜாதேவி, பெங்களூரின் செயிண்ட் தெரசா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். எல்லாரும் கன்னடக் கீர்த்தனைகள், கன்னட சினிமா பாடல்கள் என்று பாட, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நமது ஹீரோயின் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘ஏ ஜிந்தகி ஹே மேளே' என்ற இந்திப் படப் பாடலைப் பாடிக் கவர்ந்தார்.
நௌஷா இசையில் முகமது ரஃபி பாடிப் பிரபல்யம் அடைந்த அந்தத் தத்துவப் பாடலைத் தனது இனிமையான கீச்சுக் குரலில் இவர் பாடியது சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகரும் தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதருக்குப் பிடித்துவிட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும் சரோஜாதேவியை அழைத்த ஹொன்னப்பர், “அப்பா அல்லது அம்மா யாரையாவது அழைத்துக்கொண்டு, என் ஸ்டூடியோவுக்கு வா. உன்னைப் பாடகி ஆக்குகிறேன்” என்றார்.
அம்மாவுடன் கிளம்பிப் போனார். வசதியான குடும்பத்துப் பெண் என்பதால் ஜொலிக்கும் உடை, அம்மா பார்த்துப் பார்த்துச் செய்த மேக்- அப் ஆகியவற்றுடன் வந்து நின்ற சரோஜா தேவியைப் பார்த்த பாகவதருக்கு ஷாக். பள்ளிச் சீருடையில் வந்து பாடிய அந்தச் சின்னப் பெண்ணா இப்படி ஜொலிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார்.
“நீ பாடுவது இருக்கட்டும், கதாநாயகியாக நடிக்கவே செய்யலாமே! நீங்கள் சரியென்றால் உங்கள் மகளை எனது படத்திலேயே கதாநாயகி ஆக்குகிறேன்” என்றார். ஆனால் சரோஜாதேவியின் அப்பா மறுத்துவிட்டார். அவரது அலுவலகத்துக்கே சென்று அவரைச் சந்தித்து, இது காளிதாஸனின் வாழ்க்கை வரலாறு; கவுரவமான வேடம் என்று எடுத்துக்கூறிச் சம்மதிக்க வைத்தார். இந்த ஒரு படத்தில் மட்டுமே என் மகள் நடிப்பாள் என்று கண்டிப்பாகக் கூறினார் பைரவப்பா.
இப்படித்தான் ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. அந்தப் படத்தில் “ பாரொ கிளியே.. மரளி மனகெ..” என்று சி. எஸ். சரோஜினி பாடிய சோகப் பாடலை வீணை வாசித்தபடியே பாடுவதாக அமைந்த சரோஜாதேவியின் அறிமுகக் காட்சியைக் கண்டு ரசிகர்கள் கண்ணீர்விட்டார்ககள்.
படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது. ஒரே படத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு இந்தப் படம் கொண்டுவந்த புகழ், வீட்டின் முன் ரசிகர் கூட்டத்தைக் கூட்டியது. ராசியான ஹீரோயின் என்ற சென்டிமென்டும் சேர்ந்துகொள்ளப் பாகவதர் தனது ‘ஆஷாடபூதி’, 'பஞ்ச ரத்தினம்' ஆகிய படங்களிலும் இவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
தமிழுக்கு வந்தார்
தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. இங்கே பானுமதி, சாவித்திரி, அஞ்சலிதேவி ஆகியோர் அசைக்க முடியாத இடத்தில் இருந்தார்கள். இந்த நேரத்தில் ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி.பி. பிள்ளையா இயக்கத்தில் ஜெமினி – அஞ்சலிதேவி நடிப்பில் 1958-ல் வெளியான இந்தப் படத்தில் சரளாதேவி என்ற நாட்டியப் பெண்மணியாகச் சின்ன வேடத்தில் நடித்து யார் இந்தப்பெண் என்று ரசிகர்களைக் கேட்க வைத்தார்.
பரிசாக அமைந்த படம்
அதன் பின்னர் இரண்டாவது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின. அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் முதல்பாதி முழுவதும் பானுமதி கதாநாயகியாகத் தோன்ற, இரண்டாவது பாதியை ‘ரத்னா’வாக வந்து அலங்கரித்தவர் சரோஜாதேவி. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.
எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் காதல் கனிரசம் சொட்டிய, கதையம்சத்தில் குறையாத படங்கள். காதல் காட்சிகளில் கிள்ளையின் குரலில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கிய அவரது நடிப்பைக் கண்ட தமிழகம் அவரை ‘கன்னடத்துப் பைங்கிளியாக’க் கொண்டாட ஆரம்பித்தது. தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.
எம்.ஜி.ஆருடன் ஆரம்பக் கவனம் கிடைத்தாலும் சரோஜாதேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி.
கல்லூரிக்குப் புறப்படும்போது, 'அம்மா போயிட்டு வர்றேன்' என்று, மாடியில் குடியிருக்கும் ஜெமினி கணேசனுக்கு கேட்க வேண்டும் என்று இருமுறை கத்தி சொல்லிவிட்டுப் போவார். குறும்பான இந்தக் காதல் காட்சி உட்படப் படம் முழுவதும் சரோஜாதேவியின் நடிப்பு காந்தமாகக் கல்லூரி மாணவ- மாணவியரைக் கவர்ந்து இழுத்தது.
சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.
அடிக்க மறுத்தார்
சிவாஜியுடன் நடித்த படங்களும் சாதனை வெற்றிகளாக அமையக் கல்யாணப் பரிசு வெளியான அதே 1959-ல் வெளியானது பாகப்பிரிவினை. எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக்கண்ணீருக்குப் பிறகு பெரும் திருப்பு முனையைக் கொடுத்த படம். வில்லனாக நடித்த எம்.ஆர். ராதாவை சரோஜாதேவி துடைப்பத்தால் அடிப்பது போன்ற காட்சி கதையில் முக்கியமானது. ஆனால் “அவரை நான் அடிக்க மாட்டேன்” என்று மறுத்து அழ ஆரம்பித்துவிட்டார் சரோஜாதேவி.
இது நடிப்புதானே என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் ராதா. அப்படியும் அவருக்குத் தைரியம் வரவில்லை..இனி வேலைக்கு ஆகாது என்று முடிவுசெய்த இயக்குநர் ராதாவையும் சரோஜாதேவியும் ஒரு அறையில் இருக்கவைத்து முதலில் அலறியபடி ராதாவை வெளியே ஓடிவரச்செய்து படம்பிடித்தார். பிறகு துடைப்பத்துடன் சரோஜாதேவியை ஆவேசமாக வெளியே ஓடிவரச் செய்து படமாக்கினார்.
கதையம்சம், பாத்திரப்படைப்பு இவற்றில் அபத்தங்கள் தென்பட்டாலும் அவற்றையும் மீறித் தன் நடிப்பில் ஒரு கண்ணியத்தை நேர்த்தியான நளினத்துடன் வெளிப்படுத்தியதில் இவருக்கு இணை இவரென்றே மாறினார். தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டிலும் புகழ்பெற்றார்.
மாயையைத் தகர்த்த மகத்தான நாயகி
படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜாதேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர் இன்றும் நடித்துக்கொண்டிருக்கும் கன்னடத்துப் பைங்கிளிதான்.
No comments:
Post a Comment