இந்தியாவில் இனி உயர் கல்வி பயில விரும்பும் மாணவர் களில் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவை மறந்துவிட வேண்டியிருக்கலாம். பள்ளிப் படிப்புடன் தங்கள் கல்வியை நிறுத்திக்கொண்டு, கிடைக்கும் வேலைகளில் சொற்ப சம்பளத்துடன் வாழ்க்கையை மேற்கொள்ள நேரலாம். கல்வியில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அரசுக் கல்வி நிறுவனங்கள் நலிவடைந்து தனியார் கல்வி நிறுவனங்களே எல்லா இடத்திலும் வியாபித்துவிடலாம். நினைத்தாலே பயங்கரமாக இருக்கும் இச்சூழல் சாத்தியமாக நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். ஆம், காட் (GATT ‘GENERAL AGREEMENT OF TARIFFS AND TRADES’) ஒப்பந்தத்தின்கீழ் உயர் கல்வி வர ஒப்புக்கொள்ளும் நாடுகளில் இதுதான் நடக்கும். இந்தியாவும் இந்த அபாயத்தில்தான் இருக்கிறது. கென்யா தலைநகர் நைரோபியில் கடந்த டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் இதற்கான முயற்சிகள் நடந்தன.
காட் என்றால் என்ன?
1930-ல் அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட நாடுகளில் கடும் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டெழும் நேரம் இரண்டாம் உலகப் போர் மூண்டது. தொழில்புரட்சியின் பயனாய் வளர்ச்சியடைந்த நாடுகள் தத்தம் உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி (Tariff) விதித்தனர். இதனால், பன்னாட்டில் கிளை பரப்பத் துடித்த பெரும் தொழிலதிபர்கள், தங்கள் வியாபார வளர்ச்சிக்கு, லாபவெறிக்கு இது தடையாக இருக்கும் என்று கருதினர். விளைவு, இரண்டாம் உலகப் போர் முடிவடையும் சூழலில் காட் எனப்படும் வரியில்லா வாணிபத்துக்கான ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தனர்.
1947-ல் உருப்பெற்று, 1995 வரை இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உற்பத்தியாகும் பொருட்களைத் தாண்டி விவசாயம், நெசவு உள்ளிட்ட பல துறைகளிலும் விரிவாக்க முயற்சித் தனர். இவர்கள் சொன்னதெல்லாம் இப்படி ஒப்பந்த மிட்ட நாடுகள் அவர்களுக்குள் தங்கு தடையின்றி வாணிபம் செய்துகொள்ளலாம் என்பதே. இது விரிவடைந்த ஒப்பந்தமாக மாறும்போது ஒரு அமைப்பின் கீழ் இதைக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவ்வாறு 1995-ல் உருவானதுதான் உலக வர்த்தக அமைப்பு!
இந்தியா இதில் எப்படிச் சிக்கியது?
1980-களில் இந்தியா உலக வங்கியிடம் கடன் வாங்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல மீள முடியாத அளவு கடன், உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து பெறப்பட்டது. பொறியில் சிக்கிய எலியாகக் கடன் வாங்கிய நாடுகள் ஒவ்வொன்றும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளாக வேண்டிய நிலை உருவானது. 1996-ல் இந்தியா இதன் உறுப்பு நாடானது. இதன் கீழ் காட் கொண்டுவரப்பட்டது. காட்ஸ் (GENERAL AGREEMENT ON TRADE IN SERVICES) உருவானது. சேவையில் வர்த்தகத்துக்கான பொது ஒப்பந்தம் அனைத்து சேவைத் துறைகளையும் சந்தைக்குத் திறந்துவிட மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும்.
2004 ஜனவரி மாதம் தொடக்க விருப்பமாக மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளில் சந்தையை அனுமதிக்க, இந்தியாவால் விருப்பம் தெரிவிக்கப் பட்டது. 2005 ஆகஸ்ட் மாதம் கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளில் சந்தையை அனுமதிக்க இந்தியா விருப்பம் தெரிவித்தது.
இந்த ஒப்பந்தத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள்…
விருப்பம் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என்ற வடிவில் நடைபெறும் செயல்பாடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளாலும் காட்ஸ் ஒப்பந்த ஷரத்துக்களாலும் கட்டுப்படுத்தப்படும். விருப்ப நிலையில் ஒரு நாடு விலகிக்கொள்ள முடியும். விருப்பம் என்பது ஒப்பந்தமாக மாறிவிட்டால், திரும்பப் பெற இயலாது என்று காட்ஸ் ஒப்பந்த விவர ஆவணங்களைக் கூர்ந்து படிக்கும்போது தெரியவருகிறது.
அப்படியென்றால், ஒரு அரசு தவறு செய்துவிட்டது என்பதால், மக்கள் தேர்தலில் அந்த அரசை மாற்றி, புதிய அரசைத் தேர்ந்தெடுத்தாலும், முந்தைய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைப் பிந்தைய அரசுகள் திரும்பப் பெற இயலாது. அதாவது, இந்த நாட்டு மக்கள் தங்கள் இறையாண்மையை இழக்கிறார்கள் என்று பொருள்.
கல்வியில் சந்தையை அனுமதிக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டால், சட்டப்படி கல்வி ஒரு வணிகப் பொருளாகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் கல்வி விற்பனைக்குரிய சந்தைப் பொருள் அல்ல என்ற 1993 உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது நடைமுறையில் உள்ளது. காட்ஸ் ன் கீழ் கல்வி வந்தால் இந்த நிலை மாறிவிடும்.
என்ன விளைவுகள் ஏற்படும்?
நமது அரசு நடத்தும் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் பெறும் அரசு மானியம், உதவித் தொகைகள் இல்லாமல்போகும். ஏனெனில், சந்தையில் ஆடுகளம் சமமாக இருக்க வேண்டும். நிதி முதலீட்டாளர்களின் நலன் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என இந்த ஒப்பந்தம் கூறுகிறது. மானியங்கள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளும் வரை பேச்சுவார்த்தை தொடரும் என்கிறது.
அடிப்படையில் கல்வி என்பதன் பொருளையே இந்த ஒப்பந்தம் மாற்றிவிடுகிறது. பொதுநலன், மனித மேம்பாடு, சமூக வளர்ச்சி ஆகிய இலக்குகள் கொண்ட பொதுச் சொத்தாகக் கருதப்படும் கல்வி ‘வணிகப் பொருளாக’ மாற்றப்படுகிறது.
அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் சர்வதேசப் பாடத் திட்டம் என்ற பெயரில் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் தேவைக்கு அல்லாமல், பன்னாட்டு நிதி மூலதனம் கொண்டுவரும் நிறுவனங்களும் திறன் மிக்க ஊழியர்களைத் தயார் செய்யவே உதவிடும் என யுனெஸ்கோ வெளியிட்ட ஆவணம் எச்சரிப்பதோடு உலக மொழிகள் அனைத்தும் அழியும் அபாயம் ஏற்படும் என்று கூறுகிறது. குறிப்பாக, அமெரிக்க ஆங்கில மொழி மட்டுமே பாட மொழியாக இருக்கும் எனவும் கூறுகிறது.
சமூக ஒடுக்குமுறை நிறைந்த இந்த நாட்டில், பெண் என்றாலே செலவு என்ற கருத்தோட்டம் கொண்ட நாட்டில், மானியம், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு ஆகியவை கூடாது எனச் சொல்லும் GATS ஒப்பந்தத்தில் கல்வி பேசப்பட்டால் சமூக நீதியின் பால் உருவான அனைத்துச் சட்டங்களும் திட்டங்க ளும் செல்லாது என்ற நிலை ஏற்படும். இந்திய நீதிமன்றங்கள்கூட இதில் தலையிட முடியாது.
வளர்ந்த நாடுகளின் நிலை என்ன?
ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் பேராசிரியர்கள் ஒன்றுகூடி இதே கோரிக்கையைத் தத்தம் அரசுகளுக்கு வைத்தார்கள். பேராசிரியர் ஜேபிஜி திலக் எழுதி யுனெஸ்கோ வெளியிட்ட ஆவணம், கல்வியை விற்பனைப் பொருளாகக் கருதுவதோடு உள்நாட்டு வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். காட்ஸ் ன் விருப்ப ஒப்பந்தத்தை உறுதிப் படுத்தியிருப்பவை அமெரிக்கா, சீனா போன்ற மிகச் சில நாடுகளே. வளர்ந்த நாடுகள் என்பதால் தங்க ளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று நினைத்துச் சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவால்கூட இந்த ஒப்பந்தத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது என்கிறார் திலக்.
அப்படியானால், தப்பிக்க வழியே இல்லையா?
இந்தப் பேராபத்திலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. கல்வியைச் சந்தைப் பொருளாக்க இந்தியா 2005-ல் தெரிவித்த விருப்பத்தைத் திரும்பப் பெறுவது. கல்வியை இந்த ஒப்பந்தத்தின் கீழ் சந்தைப் பொருளாக்கும் பேச்சுக்கு இடமேயில்லை என்ற உறுதியான வாக்குறுதியை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அளிக்கச் செய்வது.
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் கல்வியை காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். தேசியத் தகுதித் தேர்வு சாரா கல்வி உதவித்தொகையை ரத்து செய்ய முயற்சிகள் நடப்பதை எதிர்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் போராடிவருகிறார்கள். காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் கல்வி கொண்டுவரப்படக் கூடாது என்றும் குரல் கொடுத்துவருகிறார்கள்.
அரசு செய்ய வேண்டியது என்ன?
மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு சமத்துவச் சமூகத்துக்கு காட்ஸ் ஒரு தடைக் கல் என்பதை உணர்ந்து, இந்திய அரசு தான் தெரிவித்த விருப்பங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நடந்து முடிந்த நைரோபி மாநாடு எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் முடிவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, கழுத்தில் கயிறு இறுகுவதற்கு முன் கல்வி காப்பாற்றப்பட வேண்டும்.
- பிரின்ஸ் கஜேந்திர பாபு
தொடர்புக்கு: spcsstn@gmail.com