தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கூட நன்மை செய்யும் எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர், தனக்கு உதவி செய்தவருக்கு நன்மை செய்யாமல் விடுவாரா? அப்படி எம்.ஜி.ஆருக்கு உதவி செய்ததோடு, அவரால் உயரத்துக்குச் சென்றவர்களில் முக்கியமானவர் மணியன்.
ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றி வந்த மணியன், 1968-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி ஒரு கட்டுரை வேண்டி எம்.ஜி.ஆரை அணுகினார். அந்த நட்பு தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு சென்று வந்து பயணக் கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதிக் கொண்டிருந்தார் மணியன். அந்த அனுபவத்தால் வெளிநாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு. அந்த சமயத்தில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.
வெளிநாடுகளில் படம் எடுப்பதற்காக எம்.ஜி.ஆர். செல்வாரா? மாட்டாரா? ஏறத் தாழ ஒன்றரை மாதம் எப்படி எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருக்க முடியும்? இங்கு எவ்வளவு படங்கள் நடிக்க வேண்டியுள் ளது? அரசியல் வேறு இருக்கிறது; எம்.ஜி.ஆர். போகமாட்டார் என்று சந்தேகங்கள், வதந்திகள் றெக்கை கட்டி பறந்த நிலையில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக வெளிநாட்டுக்கு பறக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து விட்டார்.
1970-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் வாழ்த்துக்களுடன் எம்.ஜி.ஆர். ஜப்பா னுக்குப் புறப்பட்டுவிட்டார். இங்கே பல்வேறு பணிகள் இருந்தாலும் இனி யும் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் எக்ஸ்போ 70 கண்காட்சி. செப்டம்பர் 15-ம் தேதி யுடன் அந்த மகத்தான கண்காட்சி முடியப் போகிறது என்று செய்தி வந்தது. அதற் குள் அங்கு சென்று காட்சிகளை படமாக்கி தமிழக மக்களின் கண்களுக்கு விருந் தாக்க வேண்டும் என்ற துடிப்புதான் எம்.ஜி.ஆரை புறப்பட வைத்தது.
எக்ஸ்போ -70 கண்காட்சி உட்பட, கீழ்திசை நாடுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புகள் நடப்பதற்கு உதவியவர் மணியன். தனது குழுவின ரோடு செப்டம்பர் 5-ம் தேதி டோக்கியோ நகரின் ஹனீதா விமான நிலையம் சென்று இறங்கினார் எம்.ஜி.ஆர்.! அவரை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். அவர்களோடு ஜப்பா னின் தேசிய உடையான ‘கிமோனோ’ அணிந்த பெண்கள் கையில் மாலையுடன் எம்.ஜி.ஆரை வரவேற்க காத்திருந்தனர்.. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘பன்சாயி...’ பாடலின் ஆரம்பத்தில் நடிகை சந்திரகலா வித்தியாசமான உடை அணிந்திருப்பாரே? அதுதான் ‘கிமோனோ'.
டோக்கியோவில் எம்.ஜி.ஆரை பார்த் தவர்களுக்கு வியப்பு. தனது வழக்கமான தொப்பி, கண்ணாடி, வேட்டி, சட்டையுட னேயே டோக்கியோவில் எம்.ஜி.ஆர். கால் பதித்தார். வரவேற்பை ஏற்றுக் கொண்டு டோக்கியோவின் பிரபல இம்பீரியல் ஓட்டலில் இரவு ஒரு மணிக்கு தான் சென்று தங்கினார் எம்.ஜி.ஆர்.
அசதி, சோம்பல், நீண்ட ஓய்வு இதெல் லாம் எம்.ஜி.ஆர். அறியாத ஒன்று. இரவு ஒரு மணிக்கு ஓட்டலுக்கு சென்று படுத் தாலும் மறுநாள் அதிகாலையிலேயே எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டார். செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எக்ஸ்போ கண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எட்டு லட்சம் பேர் உள்ளே போய் விட்டார்கள். இனிமேல் உள்ளே வர இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கண்காட்சிக்கு உள்ளே செல்லும் நுழைவாயில்கள் மூடப்பட்டன.
முக்கியமான அதி காரிகளை சந்தித்து கண்காட்சிக்கு உள்ளே செல்ல அனுமதி பெற்றுத் தந்தார் மணியன். அதிகாரிகளி டம் ‘இந்தோகா ஹிதேகி தகஹாஷி’ என்று ஜப்பானிய மொழி யில் ஒரு அஸ்திரத்தை வீசினார் மணியன். உடனே அனுமதி கிடைத்தது. ஜப்பானில் மக்களால் விரும்பப்படும் புகழ் பெற்ற நடிகரின் பெயர் ஹிதேகி தகஹாஷி. ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’ என்று எம்.ஜி.ஆர். பற்றி மணியன் கூறியது தான் அனுமதிக்கு காரணம்.
மணியனால் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இன்னொரு பெரும் புதையலும் கிடைத் தது. ஆனந்த விகடன் இதழில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். தனது வாழ்க்கை வரலாற்றை எழுதக் காரணமாக இருந்த வர் மணியன். வெளிநாடு களில் படப்பிடிப்பு நடத்த தனக்கு உதவி செய்த மணிய னுக்கு, பதிலுக்கு உதவ முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
ஒருநாள் மாலை. சென்னை தியாக ராய நகரில் மணியன் வீட்டு வாசலில் எம்.ஜி.ஆரின் கார் சென்று நிற்கிறது. திடீரென தனது வீட்டுக்கே வந்துவிட்ட எம்.ஜி.ஆரை பார்த்து மணியனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அந்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்பே, அவருக்கு அடுத்த இன்ப அதிர்ச் சியை எம்.ஜி.ஆர். அளித்தார். ‘‘வித்வான் லட்சுமணனுடன் சேர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்குங்கள், நான் நடிக்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
பேப்பரும் பேனாவும் கேட்டு வாங்கி, தனது கையாலேயே படக் கம்பெனியின் பெயரை யும் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆரால் உதய மானதுதான் ‘உதயம் புரொடக் ஷன்ஸ்’ பட நிறு வனம். அந்நிறுவனம் தயாரித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயவீணை’. பின்னர், படத் தயாரிப்பாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் உயர்ந்தார் மணியன்.
‘இதயவீணை’ படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கட்சி நிர்வாகிகளின் சொத்து விவரம் கேட்டதையடுத்து, 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திமுகவில் இருந்து நீக்கப் பட்டார். அதுவரை புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சித் தலைவரானார். அப்போது, ‘இதயவீணை’ படப்பிடிப்பில் இருந்தார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஷ யத்தைக் கேள்விப்பட்டு, பாயசம் கொண்டு வரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்து, தானும் குடித்துவிட்டு, ‘‘இப் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றார். படத்தில் கார் விபத்து காட்சி ஒன்று வரும். அன்று அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். சிறப்பாக எடுத்து முடித்தார்.
‘இதயவீணை’ படம் முதலில் 1972 அக்டோபர் 6-ம் தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்தது. இடையில் அரசியல் பரபரப்புகள் காரணமாக படம் ‘ரிலீஸ்’ தள்ளிப் போய் அக்டோபர் 20-ம் தேதி படம் வெளியானது. இடைப்பட்ட நாட் களில் அப்போதைய சூழலுக்கேற்ப அரசியல் பொடிவைத்து எழுதப் பட்ட பாடல் காட்சியைப் படமாக்கி, பொருத்தமான இடத்தில் படத் தில் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.
திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் போது, ரசிகர்களின் அலப்பறையால் தியேட்டரே ஆடிய அந்தப் பாடல்:
‘ஒரு வாலும் இல்லே, நாலு காலும் இல்லே; சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே....’
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
‘இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்றன.
- தொடரும்...