DINAMALAR
கடன் சொல்லி சாப்பிட்டான்
சூளைமேடு, சவுராஷ்ட்ரா நகர், 8வது தெருவில் உள்ள, 'மதர்ஸ் கிச்சன்' உணவகத்தில், இரண்டரை ஆண்டாக பணியாற்றி வருகிறேன். எதிரே இருக்கும் விடுதியில் இருந்து, பலர் உணவு அருந்த வருவர். சுவாதி கொலை சம்பவம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன், இரவு, 8:00 மணியளவில் ராம்குமார் சாப்பிட வந்தான்.
நுாறு ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் சென்றுவிட்டான். அதனால், அவன் முகம் எனக்கு ஞாபகத்தில் இருந்தது. கொலை நடந்த பின், போலீசார் ஒரு புகைப்படத்தை காண்பித்து என்னிடம் விசாரித்தனர். அந்த புகைப்படத்தில் முகம் தெளிவாக இல்லாததால் அடையாளம் காட்ட முடியவில்லை.
தற்போது, வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து தான், அடையாளம் தெரிந்து கொண்டேன். அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பது போல் ராம்குமாருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
மகேஷ், 24, உணவக ஊழியர்.
* நாங்கள் பார்த்தது இல்லை
நான் மூன்று ஆண்டாக இந்த விடுதியில் தங்கி இருக்கிறேன். செக்ரியூட்டி முதல் ஐ.டி., துறையில் வேலை பார்ப்பவர்கள் வரை இங்கு தங்கியுள்ளனர். விடுமுறை நாட்களில் பலரை சந்தித்து பேசி பழக்கம் ஏற்படுவது உண்டு.
ஆனால், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், இந்த விடுதியில் தான் தங்கியிருந்தான் என்பது, இன்று காலை தான் எனக்கு தெரிந்தது. மூன்று மாதங்கள் இந்த விடுதியில் அவன் தங்கியுள்ளான். ஆனால், இதுவரை அவனை, நானும் என் நண்பர்களும் பார்த்தது இல்லை.மோகன், 26, தனியார் நிறுவன ஊழியர்
* உடன் தங்கிய முதியவர்
நான் நான்கு ஆண்டாக இந்த விடுதியில் தங்கி இருக்கிறேன். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் குமாரும் இந்த விடுதியில் தான் தங்கியுள்ளான்; அவனை நாங்கள் யாரும் பார்த்தது இல்லை. அவனுடன், செக்ரியூட்டி வேலை பார்க்கும், முதியவர் ஒருவர் தங்கியுள்ளார். அவர், எங்கே என்றும் தெரியவில்லை.
இந்த கொலையில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை, போலீசார் தான் விசாரிக்க வேண்டும். விடுதியில் தங்கியிருந்த ஒருவன் கொலைக்காரன் என்பது அதிர்ச்சியாக உள்ளது.
சதீஷ் ராஜா, 27,ஓட்டுனர்.
* தக்க தண்டனை தர வேண்டும்
சவுராஷ்ட்ரா நகர், எப்போதும் பரப்பாக இருக்கும். தற்போது, மழைநீர் கால்வாய் பணி நடைபெறுவதால், சற்று நிசப்தமாக உள்ளது. விடுதியில் தங்கியிருக்கு பலரை எனக்கு தெரியும். எனினும், ராம்குமாரை நான் பார்த்தது இல்லை. கொலைகாரனுக்கு
தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.சரவணன், 32, எலக்ட்ரீசியன்.
* போலீசாருக்கு நன்றி
கொலைக்காரன் சூளைமேடு பகுதியில் தங்கியிருந்தான் என, போலீசார் விசாரணையில் தெரிய வந்ததால், எங்களிடம் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். துரிதமாக செயல்பட்டு கொலைக்காரனை கைது செய்த, போலீசாருக்கு நன்றி.தீன தயாளன்,70, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.
* ரோந்து பணி முக்கியம்
விடுதியில் தங்கியிருந்த ஒருவன், கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, ரோந்து பணியை போலீசார்தீவிரப்படுத்த வேண்டும்.அன்பு, 28, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.
* பயமாக இருக்கிறது
ஒரு ஆண்டுக்கு முன், இந்த விடுதியில் பணியாற்றினேன். இதுபோன்றசம்பவத்தை இந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள் செய்ததில்லை. இந்த சம்பவத்தால், விடுதியின் அருகில் வசிப்பதற்கே பயமாக உள்ளது. ஒருதலை காதல் அல்லது காதலாக இருந்தாலும், ஒரு உயிரை எடுப்பது தவறு. அந்த கொலைகாரணுக்கு துாக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும்.
அமுல், 44, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.
* கடும் தண்டனை வேண்டும்
கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றால், மூன்று மாதங்களில் ஜாமினில் வந்து விடுகின்றனர். சிறைக்கு சென்றதால், தங்களை பார்த்து அனைவரும் பயப்பட வேண்டும் என, ரவுடியாக மாறி விடுகின்றனர். தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையாக வழங்க வேண்டும். தண்டனையில் இருந்து, யாரும் தப்பிக்க முடியாத அளவுக்கு சட்டத்தை மாற்ற வேண்டும்.முரளி, 45, ஆட்டோ ஓட்டுனர்.
* தவறான நட்பு வட்டாரம்
'மீடியா'க்களில் வெளியிடப்படும் செய்திகள், சினிமா காட்சிகள் இன்றைய இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளன. அவை பெரும்பாலான நேரங்களில், தவறான மனநிலையை உருவாக்குகின்றன. சென்னையை பொறுத்த வரையில், பலர் விடுதியில் தங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது.
அங்கு தவறான நட்பு வட்டாரத்தில் சிக்கும் இளைஞர்களின் மனநிலை மாறி விடுகிறது. ராம் குமார் படித்துள்ளான், அவனை கொலை செய்ய துாண்டியது என்ன; மனதளவில் அவன் பாதிக்கப்பட்டுள்ளனா என்பதை கண்டறிய வேண்டும். மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
பள்ளியில் பெண்களுக்கு, தற்காப்பு கலைகளை அரசு கற்று தர வேண்டும். பெண்கள் போதை பொருள் அல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
ஒரு சம்பவம் நடைபெற்ற பின், கண்காணிப்பு கேமரா மற்றும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு மாதம்
Advertisement
கடந்த பின், அனைத்து பயனற்று போய் விடுகிறது. ரோந்து பணியில் கூட போலீசார் ஈடுபடுவதில்லை. இந்த முறைகள் மாற்றப்பட்டால் இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படலாம்.மணி அற்புத ராஜ், 29; தனியார் நிறுவன ஊழியர்.
* படம் இல்லை
* 'பேக்' மாட்டிய ஆண்களால் பயம்
நான்கு பேரும் கல்லுாரியில் படிக்கிறோம். தினமும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தான், கல்லுாரிக்கு செல்வோம். சுவாதி அக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, எங்கள் பெற்றோர், இரண்டு நாட்கள் கல்லுாரிக்கு அனுப்பவில்லை.
இப்போதல்லாம் தனியாக செல்ல பயமாக உள்ளது. 'பேக்' மாட்டிக்கொண்டு அருகில் வரும் ஆண்களை பார்த்தாலே பயமாக உள்ளது. பொது இடங்களில் கண்காணிப்பு கேமராவை அரசு பொருத்த வேண்டும். ஆண் போலீசாருடன் மகளிர் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். வீட்டை விட்டு, நாங்கள் தனியாக வெளியே வருவது, இந்த சமுதாயத்தில் எங்களுக்கு பிரச்னை எழும்போது, காப்பாற்ற தந்தைகளும், அண்ணன்களும் இருப்பார்கள் என்ற தைரியத்தால் தான்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த தைரியம் எங்களுக்கு இல்லை. யாரையும் நம்ப கூடாது என்ற மனநிலைக்கு வந்து விட்டோம். எங்களை நாங்களே காத்து கொள்ளும் தற்காப்பு கலைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.கல்லுாரி மாணவியர்.
* இரு தரப்பிலும் தவறு
பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நண்பர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். நம்பகத்தன்மை இல்லாத நபர்களுடன், 'சாட்டிங்' செய்யக்கூடாது. வளரும் பருவத்தில் இருக்கும், இரு பாலினத்தவரையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். சுவாதி கொலையில், இரு தரப்பிலும் தவறு இருக்க வாய்ப்பு உண்டு.
சாந்தி, அரசு ஊழியர்.
* நீர்த்து போக கூடாது
இரு தரப்பிலும் தவறு இருக்கலாம். நண்பர்களாக பேசும் அளவுக்கு பெற்றோர் பிள்ளைகளிடம் பழக வேண்டும். டில்லி நிர்பயா வழக்கு போல் பரப்பரபாக பேசப்பட்டு நீர்த்து போக கூடாது. சுவாதியை கொலை செய்தவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை, இதுபோல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எத்தனை பேர் சேர்ந்து கொலை செய்தாலும், கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.சுவாதியின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்
* காதல் ரயில் நிலையம்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் மக்கள், காதலர்கள் நிறைந்து காணப்படும். காதலில் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளின் போது, வாய் சண்டை போட்டு கொள்வர்; மறுநாள் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருப்பர். காதலர்களுக்கே பெயர் போன ரயில் நிலையத்தில் கொலை நடந்தது, இன்றுவரை அதிர்ச்சியாக உள்ளது.சின்னய்யா, 70, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள எஸ்.டி.டி., பூத் ஊழியர்.