செல்லாது!
மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறுவது...
உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்புபுதுடில்லி, 'முஸ்லிம்களில் மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறை செல்லாது; இந்த நடைமுறை சட்டவிரோதமானது; அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வில், பெரும்பான்மையான நீதிபதிகள் தலாக் முறை செல்லாது என, தீர்ப்பு அளித்துள்ளனர்.
நிறுத்தி வைக்க வேண்டும்
முஸ்லிம்களில் மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் பெண்கள் உட்பட பலர் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியலமைப்பு அமர்வு விசாரித்து வந்தது.சீக்கியர், கிறிஸ்தவர், பார்சி, ஹிந்து, முஸ்லிம் என, ஐந்து மதங்களைச் சேர்ந்த, ஐந்து நீதிபதிகள் அமர்வில், தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர், நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் மாற்று தீர்ப்பை அளித்தனர். அவர்களது தீர்ப்பில், 'அடுத்த ஆறு மாதங்களுக்கு, தலாக் முறையை நிறுத்தி வைக்க வேண்டும்; அதற்குள், மாற்று சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்; அவ்வாறு, ஆறு மாதங்களுக்குள் மாற்று சட்டம் வராவிட்டால், இடைக்கால தடை தொடரும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே நேரத்தில், நீதிபதிகள், குரியன் ஜோசப், ஆர்.எப்.நரிமன், யு.யு.லலித் ஆகியோர், 'தலாக் முறை செல்லாது; அது சட்ட விரோதமானது;
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது' என, தீர்ப்பு அளித்தனர்.'ஐந்து நீதிபதிகள் அமர்வில், மூன்று நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பு அளித்துள்ளதால், அதுவே, இந்த அமர்வின் தீர்ப்பு' என, தலைமை நீதிபதி, கேஹர் அறிவித்தார். மொத்தம், 395 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை, அரசியலமைப்பு சட்ட அமர்வு வழங்கியுள்ளது.பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில், இந்த நடைமுறை பின்பற்றப்படுவது இல்லை; நம் நாட்டில் மட்டும் ஏன் இதை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தலாக் முறையை எதிர்த்து, ஐந்து பெண்கள் தாக்கல் செய்த வழக்கு உட்பட, மொத்தம், ஏழு வழக்குகளை ஒருங்கிணைந்து, 'முஸ்லிம் பெண்களின் சம உரிமைக்கான தேடல்' என்ற பெயரில், விசாரித்து வந்தது. வழக்கு தொடர்ந்த முஸ்லிம் பெண்கள் தங்கள் மனுவில் கூறியிருந்ததாவது:முஸ்லிம்களில், ஆண்கள், மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்து விடலாம். ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறியும் விவாகரத்து செய்கின்றனர். சில நேரங்களில் போன் மூலமாகவும், மொபைலில் செய்தி அனுப்பியும் விவாகரத்து செய்கின்றனர்.
இது சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது, முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது, முஸ்லிம் மதக் கோட்பாட்டுக்கு எதிரானது. அதனால், தலாக் முறை செல்லாது என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கில் பதிலளித்த, மத்திய அரசு, 'தலாக் முறை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், அதற்கு மாற்று சட்டத்தை, ஆறு மாதங்களுக்குள் கொண்டு வருவோம்' என்று கூறியிருந்தது.
தலாக் முறை செல்லாது என்ற, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, வரலாற்று சிறப்புமிக்க புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு
'தலாக் முறை செல்லாது' என, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன.இது குறித்து, அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியத் தலைவர், சாயிஷ்டா ஆம்பெர் கூறியதாவது:இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி. அதைவிட, இஸ்லாம் மதத்துக்கு கிடைத்துள்ள வெற்றி. இந்த பிரச்னையில், மத்திய அரசு அனைவரும் ஏற்கக் கூடிய சட்டத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அனைத்திந்திய ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர், மவுலானா யாசூப் அப்பாஸ், இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக கூறியுள்ளார்.
''சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராக சட்டம் இயற்றியது போல், தலாக்குக்கு எதிராக வலுவான சட்டம் தேவை,'' என்றார் அப்பாஸ்.அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பொதுச் செயலர், மவுலானா வாலி ரெஹ்மானி, இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மோடி மகிழ்ச்சி
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமையை வழங்கியுள்ளது. இது பெண்களின் வலிமையை மேலும் வலுவாக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., - காங்., வரவேற்பு
தலாக் வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான்: தலாக் போன்றவை, முஸ்லிம்பெண்களுக்கு மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நடந்து வந்த சித்திரவதை; அது, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவும் இருந்தது; தற்போது அது உடைத்தெறியப்பட்டுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்: மிகச் சரியான முடிவு.பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பெண்கள் நலத் துறை அமைச்சர் மேனகா: பாலின பாகுபாட்டை தகர்த்தெறியும் தீர்ப்பு; இதை வரவேற்கிறோம். பெண்களுக்கு கிடைத்துள்ள வெற்றி.பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி: மிகப் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வழி பிறந்துள்ளது. இது ஹிந்து - முஸ்லிம்கள் இடையே மேலும் நெருக்கத்தை உருவாக்கும். முஸ்லிம் பெண்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி.பா.ஜ., செய்தித் தொடர்பாளர் அமான் சின்ஹா: இந்த பிரச்னையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிலைப்பாட்டுக்கு வெற்றி கிடைத்துள்ளது. முஸ்லிம் பெண்கள், கவுரவமாக வாழும் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
'தேசத்தின் வளர்ச்சிக்கான தீர்ப்பு'
''தலாக் முறைக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தேசத்தின் வளர்ச்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது,'' என, கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல், பிங்கி ஆனந்த் தெரிவித்தார்.தலாக் முறைக்கு எதிரான வழக்கில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான, முன்னாள் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கிக்கு உதவியாக செயல்பட்டவர், பெண் வழக்கறிஞரான, கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் பிங்கி ஆனந்த்.தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:தலாக் முறைக்கு, நாட்டின் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தலாக் முறை செல்லாது என்ற தீர்ப்பு, நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மையை உருவாக்கக் கூடியது. இந்த தீயப் பழக்கத்தை இத்தனை ஆண்டுகளாக, சகித்து வந்துள்ளோம்.
அந்த கொடூர பழக்கத்தில் இருந்து, முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் வகையில், மிகவும் திடமான முடிவு எடுக்கும் தலைமை கிடைத்துள்ளது. அதன்படியே, தீர்ப்பும் கிடைத்துள்ளது. இதன் மூலம், வாழ்வதற்கும், சுதந்திரமாக இருப்பதற்கும், கவுரமாக இருப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'முற்போக்கான தீர்ப்பு'
தலாக் வழக்கின் தீர்ப்பு குறித்து, பிரபல வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான, சோலி சொராப்ஜி கூறியதாவது:முஸ்லிம் பெண்களின் உரிமையை பாதுகாக்கும் மிகவும் முற்போக்கான தீர்ப்பு. இதன் மூலம், இனி, முஸ்லிம் கணவர்கள், மனம்போன போக்கில் விவாகரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில், 3:2 என நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். அனைத்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு அளித்திருந்தால், இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
'தலாக்'கிற்கு எதிராக போராடிய ஐந்து பெண்கள்
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர், ஷயாரா பானு, 36, இவரது கணவர், ரிஸ்வான் அகமது, 2015 அக்டோபரில், முத்தலாக் கூறி, ஷயாரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.திருமணம் ஆகி, 15 ஆண்டுக்குப் பின், இரண்டு குழந்தைகளுக்கு தாயான தன்னை, முத்தலாக் மூலம், விவாகரத்து செய்தது செல்லாது என அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், பானு, வழக்கு தொடர்ந்தார். கணவர் மற்றும் அவரது உறவினர்கள், தன்னை கட்டாயப்படுத்தி, ஆறு முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும்,
இதனால், தன் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், பானு தெரிவித்தார்.எனினும், முஸ்லிம் தனி நபர் சட்டத்தின் கீழ், முத்தலாக் கூறி விவாகரத்து செய்தது செல்லும் என, ரிஸ்வான் வாதிட்டார். பானு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த, இஸ்ரத் ஜஹானின் கணவர் துபாயில் வசிக்கிறார். ஏப்., 2015ல், இஸ்ரத் ஜஹானுக்கு போன் செய்த அவரது கணவர், மூன்று முறை தலாக் கூறி, தொடர்பை துண்டித்தார். ஜஹானின் பராமரிப்பில் வளர்ந்து வந்த, அவர்களின், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனையும், அவரது கணவர் தன்னுடன் அழைத்து சென்றார்.போனில் தலாக் கூறி, விவாகரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரியும், இஸ்ரத் ஜஹான் வழக்கு தொடர்ந்தார்.
உ.பி., மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த குல்ஷன் பர்வீனிடம், வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்திய அவரது கணவர், அவரை வீட்டை விட்டும் வெளியேற்றினார். இதையடுத்து, 2 வயது மகனுடன், பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்த பர்வீனுக்கு, கடிதம் மூலம், தலாக் கூறி, விவாகரத்து செய்வதாக, அவரது கணவர் தெரிவித்தார். முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில், பர்வீன் மனுத்தாக்கல் செய்தார்.
அடியா சப்ரிக்கும், வாசித் அலிக்கும், 2012ல் திருமணம் நடந்தது. ஒரு துண்டு காகித்தில், தலாக் என மூன்று முறை எழுதி, சப்ரியை விவாகரத்து செய்வதாக, வாசித் அலி தெரிவித்தார்.
இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு தாயான தன்னை, முத்தலாக் கூறி விவாகரத்து செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரி, சப்ரி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆப்ரின் ரஹ்மானுக்கு, 2014ல் திருமணம் நடந்தது. அடுத்த, இரண்டு மாதங்களில், வரதட்சணை கேட்டு, கணவர் வீட்டார் கொடுமைப் படுத்தியதால், ஆப்ரீன், பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார்.
கடிதம் மூலம், 2015ல், தலாக் கூறி, அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்த கணவர், வேறு பெண்ணை மணக்கவும் திட்டமிட்டார்; இதை எதிர்த்து, ஆப்ரின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
முத்தலாக் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள்
தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர்: சீக்கிய சமுதாயத்தில் இருந்து, முதன்முறையாக, தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பவர்; ஜன., முதல், இந்த பதவியில் உள்ளார். வரும், 27ல், பணி ஓய்வு பெற உள்ளார். 2011 செப்., 13ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, கேஹர் நியமிக்கப்பட்டார்; முதலீட்டாளர்களின் பணத்தை தராமல் ஏமாற்றிய, சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயை, சிறைக்கு அனுப்பிய உச்ச நீதிமன்ற அமர்வில், ஒருவராக இருந்தவர்.
நீதிபதி ஜோசப்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், கேரள சட்ட அகாடமியில் பயின்றவர்; 2000ல், கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010 பிப்ரவரியில், ஹிமாச்சல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, பதவி உயர்வு பெற்றார், ஜோசப். 2013 மார்ச்சில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக
நியமிக்கப்பட்டார்.
நீதிபதி லலித்: கடந்த, 2014ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முன், புகழ்பெற்ற வழக்கறிஞராக பணியாற்றினார்; 2004ல், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக திகழ்ந்தார். வழக்கை முழுமையாக ஆராய்ந்து, சட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிக்கும் திறன் பெற்றவர். '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு, உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்.
நீதிபதி நாரிமன்: புகழ்பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்த நாரிமன், 2015 ஜூலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்; அரசியல் சாசனம், கார்ப்பரேட், சிவில் சட்டங்களில் அதிக அனுபவம் வாய்ந்தவர். குறைந்த வார்த்தைகளில், நேர்த்தியான தீர்ப்பு வழங்குவது, இவரது தனிச்சிறப்பு.
நீதிபதி நஸீர்: இந்தாண்டு பிப்ரவரியில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்; மே மாதம், முத்தலாக் வழக்கு விசாரணை, தொடர்ச்சியாக, ஆறு நாட்கள் நடந்த போது, ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் சாதித்தவர், நஸீர்.